Showing posts with label விடிவா இழிவா. Show all posts
Showing posts with label விடிவா இழிவா. Show all posts

Saturday, January 22, 2022

விடிவா, இழிவா

உலகெங்கும் முஸ்லீம்களின் அவலம் சொல்லிமுடிக்க முடியாதளவு கூடிக் கொண்டே போகிறது. இலங்கை முஸ்லீம்களின் நிலையை எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை எனச் சொல்லத் தோன்றுமேயல்லாமல் மகிழ்ச்சியுறும் அளவுக்கு எதுவும் இல்லை என்பதே உண்மையாகும். இந்நிலையை தொடரவிடுவதா அல்லது இதற்கு முற்றுப் புள்ளி வைப்பதா என்பதே யாரும் சிந்திக்கத்தக்க முக்கிய  விடயமாகும்.

 

உலகிலே இயற்கையாக பிரச்சினைகள் உள்ள நாடுகளில் வாழும் மக்களெல்லாம் சிறப்பாக வாழ்கின்றனர். ரஷ்யாவின் குளிர்காலம் யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. ஜப்பான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்ற ஒரு நாடு. சிங்கப்பூர் வளங்கள் எதுவுமில்லா நாடு இப்படி பிரச்சினைகள் நிறைந்த நாடுகளில் வாழும் மக்களெல்லாம் சிறப்பாக வாழ்கின்றனர்.

 

அவ்வாறே யப்பான், கொரியா, மேற்குலகு நாடுகள் என்பவற்றில் தெளிவான கோற்பாடுகளோ சித்தாந்தங்களோ கிடையாது. சில நாடுகள் பெளத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டவை. இன்னும் சில கிறிஸ்தவ மதத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்த மதங்களும் சித்தாந்தங்களும் சிறந்த போதனைகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும், இஸ்லாம் போதிக்கும் அளவு தெளிவான வாழ்க்கை வழிகாட்டல்களை முன்வைப்பதில்லை. அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஆங்காங்கே முட்டி மோதிக் கொண்டாலும்கூட முன்னேறி உள்ளனர். ஆனால், சிறப்பான போதனைகளையும், தெளிவான வழிகாட்டல்களையும் கொண்ட முஸ்லீம் சமூகம் மாத்திரம் என் இப்படி தேங்கிக் கிடக்கிறது என்பது யாரும் சிந்திக்தக்கதாகும்.

 

இலங்கை முஸ்லீம்களின் இழி நிலைக்குக் காரணம் வெறுமனே தொழுவதில்லை, நோன்பு நோற்பதில்லை என்று மாத்திரம் கூறிவிட முடியாது. சர்வதேச முஸ்லீம் சமூகத்தில் காணப்படும் சிந்தனா ரீதியான தேக்க நிலையின் தாக்கம் இலங்கை முஸ்லீம் சமூகத்தில் ஏற்பட்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

 

எனவே இலங்கை முஸ்லீம்களுக்கு விடிவு வேண்டுமென்றிருந்தால் முதற்கண் இலங்கை முஸ்லீம்கள் தமது இலங்கை சூழலை சரியாக உணர்ந்து அதற்கேற்ப தமது நடவடிக்கைகளை திட்டமிட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளனர். அவ்வாறில்லாமல் எங்கோ ஒரு நாட்டில் யாரோ ஒருவர் முன்வைத்த தீர்வுத்திட்டங்களையெல்லாம் இறக்குமதி செய்து இலங்கையில் அமுல்படுத்த முயற்சிப்பது முறையல்ல என்பது சரியாக உணர்ந்துகொள்ளப் படவேண்டும். அல்குர்'ஆனையும் நபி வழியையும் தெளிவாகக் கற்று அவற்றுடன் சேர்த்து ஏனைய இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களையும் முறைப்படி கற்று, இலங்கை சூழலுக்கு ஏற்றாற்போல் அவற்றை அமுல்படுத்தக் கூடிய வழிமுறைகள் கண்டறியப் படவேண்டும். அவ்வாரில்லாமல் சிந்தனா பிச்சை எடுத்து எந்தவித முன்னேற்றத்தையும் காண முடியாது என்பது தெளிவாக புரிந்துகொள்ளப் படவேண்டும். அவ்வாறு, அல்குர்'ஆன் மற்றும் நபிவழியை தெளிவாகக் கற்று இலங்கை சூழலுக்கேற்ப அதை அமுல்படுத்த முயற்சிப்பதே ஒரு தன்னிறைவான அமைப்பாக அமையும் என்பது சரியாக விளங்கிக் கொள்ளப் படவேண்டும். அவ்வாறு செய்வதற்கு சக்தியில்லை என எண்ணுகின்றவர்கள் முயற்சியாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தாம் சற்று ஒதுங்கி நிற்பதும் மிகப் பெரும் சேவையாக அமையும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இத்தகை ஒரு முயற்சி மேற்கொள்ளப் படுவதற்கு நடைமுறையில் இருக்கின்ற இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு தடையாகும் என்பது கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மையாகும். அதன் அர்த்தம் இயக்கங்கள் கூடாது என்பதல்ல மாறாக இதுவிடயமாக இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சற்று நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என்பதாகும். நான் சொல்வது மாத்திரமே சரியானது எனும் மமதையையும், தனது பிழையை ஒத்துக்கொள்ள முடியாது எனும் தாழ்வுச் சிக்களையும் விட்டுவிட்டு, சமூகம் சிறந்தால் எல்லாரும் சிறப்பாக இருக்கலாம் எனும் தூர நோக்குடன் விட்டுக் கொடுப்புடன் செயல்பட இயக்க அங்கத்தவர்கள் முன்வரவேண்டும். மேலும், இதுவிடயமாக வெளிப்புற சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு செயல்படவும் துணிவுகொள்ள வேண்டும்.

 

அதனடிப்படையில் இலங்கை முஸ்லீம்கள் தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விடயம் எதிரியை எவ்வாறு முகங்கொடுப்பது என்பதாகும். ஒரு இயக்கத்தை பின்பற்றுகின்றவர் மற்ற இயக்க அங்கத்தவரை எதிரியாகக் கருதுகின்றார். இதுபோன்ற இன்னோரன்ன தவறுகள் காரணமாகவே இன்று கொரோனா எனும் பெயரில் இறைவனின் சோதனை வெளிப்பட்டு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவ்வாறு கருத்து ரீதியாக தன்னுடன் முரண்படுகின்றவர்கவர்களை எதிரியாகக் கருதுவது சரியா பிழையா என்பது ஒருபுறமிருக்க அந்த எதிரிகளுடன் மிதமாக நடந்துகொள்ளும் ஒரு நிலைப்பாடு பின்பற்றப் படவேண்டும். இதுவிடயமாக அலி (றழி) அவர்களின் ஒரு கூற்று நினைவில் கொள்ளத்தக்கதாகும். அதாவது; "உமது எதிரியை நீ நினைப்பதை விட கொஞ்சம் குறைவாகவே எதிர்ப்பாயாக. ஏனெனில் ஒரு நாள் அவன் உனது நண்பனாகலாம். உனது நண்பனை நீ நினைப்பதை விட கொஞ்சம் குறைவாகவே நேசிப்பாயாக, ஏனெனில் அவன் சிலபோது உனது எதிரியாகலாம்" (அதபுல் முப்ரத் – புஹாரி).  அதற்கிணங்க அவ்வவ் இயக்கங்களை சேர்ந்தவர்கள்  பிற சிந்தனை யுடையவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும்.

 

அடுத்து, எல்லா அமைப்புகளும் அல்குர்'ஆனை கற்பதற்கு முன்னுறிமை கொடுக்க முன்வரவேண்டும். ஒரு இயக்கத்தின் அடிப்படைகளை சரியாக விளங்காதவரே அடுத்த இயக்க அங்கத்தவர்களுடன் வீணாக பிரச்சனைகளை உருவாக்கக் கூடியவர்களாக உள்ளனர். அதனடிப்படையில் தத்தமது இயக்கங்களின் அடிப்படைகள் யாவை என்பதை முதற்கண் தமது இயக்க அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஹனபி, மாலிகி மத்கப்களை  பின்பற்றக் கூடிய இடங்களிலெல்லாம் தப்லீக் அமைப்பு செயல்படுகின்ற நிலையில் இலங்கையிலுள்ள தப்லீக் அமைப்பின் அங்கத்தவர்கள் மாத்திரம் ஷாபிஈ மத்தகப்பைத் தவிற ஏனைய மத்கப்பின் கருத்துக்களை மறுக்க முனைந்தமை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ்வாறெல்லாம் விளப்பமில்லாமல் குழப்பம் செய்யும் நிலை இனியாவது நிறுத்தப் படவேண்டும். இன்றய பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்ட சிலர் தற்கொலை செய்துகொள்ளும் மனோநிலைக்கு மாறியுள்ளனர் என்பது இதுகாலவரையில் தான் பயணித்த பாதை சரியானதல்ல என்பதை ஊர்ஜிதம் செய்வதாக உள்ளதல்லவா?   

 

இயக்கங்களாக இருக்கட்டும் தரீக்காக்களாக இருக்கட்டும் ஷீ'ஆ பிரிவாக இருக்கட்டும் இந்த எல்லாவகை சிந்தனைப் போக்கைக் கொண்டவர்களும் இலங்கையில் உள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அல்குர்'ஆனின் போதனைகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன்  முரண்படுகின்ற இடங்களிலே எவ்வாறு மிதமாக நடந்து கொள்வது எனும் விடயம் பற்றி தமது இயக்க அங்கத்தவர்களுக்கு தெளிவு வழங்க வேண்டும்.  உதாரணமாக ஷீ'ஆ அமைப்பை எடுத்துக் கொண்டால், "நீங்கள் அஹ்லுல் பைத்துகளே முஸ்லீம் சமூகத்துக்கு தலைமை தாங்க பொருத்தமானவர்கள் எனக் கூறுங்கள். அதற்காக வாழ்ந்து மறைந்த ஸஹாபாக்களை இழிவு படுத்திப் பேசுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது எனும் இணக்கப் பாட்டை கடை பிடிக்கலாம்.

  

அவ்வாறே, ஒவ்வொரு இயக்கமும் தமது கொள்கைகளும் வழிமுறைகளும் என்ன என்பதை தமது அங்கத்தவர்களுக்கு முதற்கண் தெளிவாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கு மாற்றமாக அடுத்த அமைப்புகளின் குறைகளை மாத்திரம் தெரிந்துவைத்திருக்கும் தற்போதய நிலை முற்றாக மாற்றியமைக்கப் படவேண்டும். தமது இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளில் நம்பிக்கையீனம் கொண்டவர்களே அடுத்த இயக்கங்களின் குறைகளை தேடுவர். ஆதலால் தமது இயக்கத்தைப் பற்றிய முழு நம்பிக்கையுடன் அடுத்த இயக்கங்களுடன் எவ்வாறு இணங்கிப் போவது எனும் விடயத்தில் எல்லா இயக்ககங்களும் கரிசணை செலுத்த வேண்டும். மார்க்கம் போதிக்கின்ற இயக்கங்களே தங்களுக்கு மத்தியில் இணங்கிப்போவது பற்றி சிந்திக்காமல் இருந்தால் எவ்வாறு முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுக்கு மத்தியில் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என எதிர்ப்பார்க்கலாம் என்பது யாவரும் சிந்தித் துணரவேண்டிய முக்கிய விடயமல்லவா....?  

 

இதுகால வரைக்கும் எத்துணை இயக்கங்கள் செயற்பட்டாலும் "ஸகாத்" கடமை நாடளாவிய ரீதியில் முறையாக நிறைவேற்றப்படுகிறதா எனும் கேள்வி இதுகாலவரையில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நிலைமை இவ்வாறிருக்க எங்கே அல்லாஹ்வின் அருள் பொழியப் போகிறது என்பதை யாவரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். முஸ்லீம் சமூகம் தலைதூக்க அவசியமான பொருளாதார வளத்தை சேர்த்துக்கொள்வதற்கு இந்த "ஸகாத்" எனும் கடமை முறைப்படி நிறைவேற்றப் படவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்கிணங்க எல்லா அமைப்புகளும் தங்களுக்கு மத்தியில் இணைந்து செயற்படக்கூடிய விடயமாக இந்த "ஸகாத்" கடமையை முறைப்படி நிறைவேற்றுவதை எடுத்துக் கொள்வது மிகப் பொருத்தமாக அமையும்.

 

அவ்வாறே வட்டியில்லாமல் கடனுதவி வழங்கக்கூடிய அமைப்பும் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப் படவேண்டிய தேவையையும் யாரும் மறுக்க முடியாது. இந்த இரண்டும் முக்கிய மார்க்கக் கடமைகளாக இருப்பதனால் இவை இரண்டை மையாகமாகக் கொண்டாவது எல்லா அமைப்புகளும் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும். இவ்வளவு முக்கியமான விடயங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இஸ்லாத்துக்கு சேவை செய்கிறோம் எனும் கோஷத்துடன் இயக்கங்களாகவும், அமைப்புகளாகவும் பிரிந்து சிதறிப்போயிருப்பது எவ்வாறு இறை அருளையும், இறை திருப்தியையம் கொண்டு தரும் என்பதை இப்போதாவது சிந்திக்காவிட்டால் ................. வெளிநாட்டு சக்திகளின் தாக்கத்தினால் உள்நாட்டு முஸ்லீம்கள் பிளவுபட்டிராவிட்டால் வசதியும் வாய்ப்பும் உள்ள பலர் ஒன்றிணைந்து இத்தகைய அறப்பணிகளை என்றோ நிறைவேற்ற ஆரம்பித்திருப்பர் என்பதை பொறுப்புடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

 

அடுத்து முஸ்லீம் சமூகத்தில் காணப் படுகின்ற முக்கிய தேவைப்பாடுகளாக தலைநகரை நோக்கியும் ஏனைய முக்கிய நகரங்களை நோக்கியும் வருகின்ற பிரயாணிகளுக்கு போதிய தங்குவசதிகள் இல்லாமையும், வீட்டு வசதி இல்லாமையையும் குறிப்பிடலாம். இந்த இரண்டு அம்சங்களையும் முக்கியத்துவம் கொடுத்து இவற்றுக்கு தீர்வுகளை காணும் வழிகளை எல்லாரும் சேந்து முன்னெடுக்க வேண்டும். இவைகளுக்கு அப்பால் கல்விப் பிரச்சிணை, குடிநீர் பிரச்சிணை, போதைவஸ்துப் பாவனை, என பல பிரச்சினைகள் இருப்பதும் மறுக்கமுடியாததேயாகும். ஆனால் இவை எல்லாவற்ற்றையும் ஒரேயடியாக தீர்த்துவிட முடியாது என்பதை கருத்தில் கொண்டு, முக்கிய சில பிரச்சனைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வுகளை கண்டறிவது ஏனைய பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள வழிவகை செயும் என்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும். 

 

அல்லாஹ் சொல்கிறான் "எந்த சமூகமும் தானாக மாறாதவரை அல்லாஹ் அதன் நிலைமையை மாற்றியமைக்க மாட்டான்” என்று (13:11). அதனடிப்படையில் விடிவா, இழிவா என்பது தங்கள் கைகளிலேயே இருக்கின்றது என்பதை சாதாரண பொதுமக்கள் சிந்தித்துணரக்கடமைப் பட்டிருக்கின்றனர். இயக்கம் எனும் போர்வைக்குள் இருக்கின்ற சிலர் தங்களது சுயநலன்களை மாத்திரம் கருத்தில் கொண்டு போலிவேடம் போட்டு மாக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது மாத்திரமன்றி முழு இயக்கத்தையும் திசை திருப்பிக்கொண்டிருக்கின்றனர் என்பதற்கு சான்றுகள் பல உள்ளன. அதேவேளை சமூகத்தில் இயக்கங்களை சாராதவர்களே அதிகம் உள்ளனர் என்றவகையில், அவர்களில் சாதாரண பொதுமக்களும், படித்த புத்தி ஜீவிகளும் இயக்கம் எனும் வட்டத்துக்கு அப்பாலிருந்து சிந்தித்து செயல்படக் கடமைப் பட்டுள்ளனர்.

 

மேற்சொன்ன அல்குர்'ஆன் வசனத்தின் தொடர்ச்சி இவ்வாறு இருப்பது கவனிக்கத் தக்கதாகும். அஃதாவது "அல்லாஹ் ஒரு சமூகத்துக்கு இழிவை நாடினால் அதை தடுப்பதற்கு வேறு எந்த சக்தியும் இராது"(13:11) என்பதாகும். ஒரு சமூகத்தின் இழிவை எச்சரிக்கக் கூடிய அம்சம் இதைவிடவும் வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்?

 

அதனடிப்படையில் விடிவா இழிவா என்பதை அவரவர் தீர்மானித்துக் கொள்ளட்டும். அதன் பெறுபேறுகள் அவர்களையே காத்திருக்கும் என்பதையும் சிந்தித்துக் கொள்ளட்டும்.

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...