Tuesday, February 22, 2022

அரசியல் களம்-2

அரசியல், கலிமாவுக்கு அடுத்து ஒரு சிறந்த செயல் என்றால் மிகையாகாது. தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், ஸதகா என்றெல்லாம் நற்செயல்கள் உண்டு. அவை அனைத்தும் குறிப்பிட்ட கால, நேர சூழ்நிலைக்குள் வரையறுக்கப் பட்டனவாகும். ஆனால் ஒரு மனிதன் சமூகத்து சிறந்த அரசியல் தலைமைத்துவத்தைக் கொடுப்பது, அவன் ஆரம்பித்தது முதல் மரணிக்கும் வரைக்கும், அதன் பின்னர் மறுமை நாள் வரைக்கும் நன்மை பெற்றுத்தரும் செயல் என்பதை மறுக்கக் கூடிய ஆதாரங்களும் உண்டோ........!

 

இத்துணை சிறப்பு மிக்க அரசியற் களமாடலை வலியுறுத்தியோ, அல்லது  அதை ஊக்கப் படுத்தியோ அல்குர்'னிலோ, நபிப் போதனைகளிலோ அதிகம் சொல்லப்படாமைக்கு காரணங்களும் இல்லாமலில்லை. அவ்வாறு எதுவும் சொல்லப் படவில்லை என்பதனால் அன்றும் இன்றும் யாருமே அரசியலில் ஈடுபடாமல் இருக்கவில்லை என்பதை ஒரு முக்கிய காரணமாகக் கொள்ளலாம்.    அதேவேளை ஒரு சிறந்த சமூகதலைவன் எத்தகைய சிறப்பு மிக்கவன் என்பதுபற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. நிழலே இல்லாத அந்நாளில் நிழல் பெறக்கூடிய ஏழு வகையினரில் ஒருவன் நீதியான தலைவன் என்பதாக நபிப் போதனைகளில் குறிப்பிடப் பட்டுள்ளது (புஹாரி:6086, முஸ்லிம்: 2427). அத்தகைய நீதி செலுத்தும் தலைவன் தற்கால ஊழல் பேர்வளிகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதை முதற்கண் சுருக்கமாக விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு முறை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தன்னுடன் பள்ளிக்கு வந்திருந்த தனது பேரனான ஹஸன் (றழி) சிறுவனாக இருந்த நிலையில் அங்கிருந்த பொதுச்சொத்திலிருந்த ஒரு ஈச்சம் பழத்தை எடுத்து வாயில் போடுவதைக் கண்டவுடன், ச்சீ ச்சீ அதைத் துப்பி விடு "பொதுச் சொத்திலிருந்து சாப்பிடுவது ஆகாது என்பது உனக்குத் தெரியாதா" எனப் போதித்தார்கள் (பார்க்க (புஹாரி:1490, முஸ்லிம்:1069). பொதுச் சொத்து விடயத்தில் ஒரு தலைவனின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான உயர்ந்த வழிகாட்டல் (ஸுன்னா) இதுவாகும். பொதுச் சொத்து விடயத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது, நம்பிக்கை துரோகம் மற்றும், பொறுப்பை உதாசீனம் செய்தல் என்பனவாக கருத முடியுமாக இருந்தாலும், பொதுச் சொத்தை நேரடியாக உண்பதற்கும், தலைமைத்துவ அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொதுச்சொத்தை தந்திரமாக உண்பதற்கும் இடையில் அதிக வேறுபாடில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். (முக்கியத்துவம் கருதி இந்த அம்சம் இங்கு சுருக்கமாக தொட்டுக்காட்டப்பட்டுள்ளது).   

 

இஸ்லாத்தின் போதனைகளின் அடிப்படையில் கால, சூழ சந்தர்ப்பத்துக்கேற்ப செயற்பாடுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும். அதற்கமைய தற்கால சூழ்நிலையில், சமூகத்துக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவம் வழங்குவது ஒரு சிறந்த செயலாக அமைவது மாத்திரமன்றி அது ஒரு கடமை எனச் சொல்வதும் மிகையாகாது. 

 

“சிறுபான்மைச் சமூகம்” எனும் சமூக நிலைமையை எடுத்துக் கொண்டால், ஜனநாயகம் எனும் பரந்த அமைப்பின் ஒரு அங்கமாக அது அமைந்திருப்பது முதற்கண் கருத்தில் கொள்ளத்தக்க தாகும். இந்த ஜனநாயகம் எனும் பரந்த குடைக்குக் கீழ் சிறுபான்மை முஸ்லீம் சமூகம் எந்த இடத்தை வகிக்கிறது என்பது வேறு ஒரு தலைப்பின் கீழ் விளங்கிக் கொள்ள வேண்டிய முக்கிய அம்சமாதலால் விரிவு கருதி மிகச் சுருக்கமாக தொட்டுக்காட்டப் படுகிறது.

 

இந்த ஜனயாக முறைமையின் முக்கிய அம்சமான தேர்தல் எனும் அம்சத்தில், முஸ்லீம்கள் பெரும்பான்மை சமூகத்தினருடன் சேர்ந்தும், தனிக் கட்சியாகவும் தேர்தல் முறையில் பங்கேற்பதற்கு அனுமதி உண்டு எனும் மார்க்க அறிஞர்களின் தீர்வுக்கு ஏற்ப, அத்தகைய அரசியற் செயற்பாடுகளில் ஈடுபடுவது இஸ்லாத்தின் வரையறைக்குள் அமைகிறது (இது துறைசார் அறிஞர்களின் ஆய்வுடன் சம்பத்தப் பட்டதாகையால், அது சம்பந்தமான உசாத்துணைகள் சுட்டிக் காட்டப் படவில்லை). அதற்கமைய முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பிலும், அரசினூடாக முஸ்லீம்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் ஏனைய சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், அத்தகைய ஜனநாயக அரசியலில் ஈடுபடுவது அனுமதிக்கப்படுகிறது என்று சொல்வதை விடவும் போதிக்கப்படுகிறது எனச் சொல்வதே சாலப் பொருந்தும்.  அத்துடன் ஒரு சிறந்த அரசியல் முன்மாதிரியை வழங்குவதன் மூலம் இஸ்லாத்தின் சிறப்பை பிற சமூகத்தினருக்கு எடுத்தியம்புவதற்கும், பொதுவாக இறைவனது படைப்பினங்களுக்கு சேவை செய்வதற்கும், மற்றும் பூமியை வளப்படுத்தல் எனும் இறை கட்டளையை நிறைவேற்றுவதற்கும் (பார்க்க அல்குர்'ஆன் 2:30, 1161) ஒரு சிறந்த தளமாக அரசியற் களம் அமைந்திருப்பது சுட்டிக்காட்டத் தக்கதாகும். ஆனால் முஸ்லீம் சமூகத்தின் தற்கால அரசியல் பிரதிநித்துவத்தின் நிலை எப்படி அமைந்திருக்கிறது என்பது விளக்கிச் சொல்ல அவசியமற்றதே... இன்று அரசியல் பிழைப்பு நடத்துகின்றவர்கள் சினிமா துறையில் ஈடுபட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனச் சொல்வது பொருத்தம் எனலாம். ஆதலால் முஸ்லீம் சமூகத்துக்கு முறையான தலைமைத்துவம் வழங்குவதன் முக்கியத்துவம் இமயம் தொடுகிறது எனச் சொல்வதே சாலப் பொருந்தும்.

 

ஒரு சிறந்த அரசியற் தலைவன் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் அல்லது பண்புகள் பற்றி  "அரசியல் களம்-1" எனும் தலைப்பின் கீழ் விளக்கப் பட்டுள்ளதால் அது இங்கு தவிர்த்துக் கொள்ளப் படுகிறது (மேலும் "அரசியல் முன்மாதிரி" எனும் பதிவும் இதனுடன் தொடர்பு பட்டதே). அந்த அடிப்படைத் தகுதிகள் வளர்ந்துக் கொள்ளத் தக்கனவாக இருக்கும் அதேவேளை, இன்றய சூழ்நிலையில், இருக்கின்ற போட்டி நிலைமைக்கு மத்தியில் அத்தகைய பண்புகள் பெற்றவர்களை, உருவாக்குவது அத்துணை இலகுவான காரியமன்று. எனவே அத்தகை பண்புகளை இயற்கையாக தன்னகத்தே கொண்டவர்கள், இந்த சிறப்பு மிகு பணியை பொறுப்பேற்க முன்வரவேண்டும் எனச் சொல்வதை விடவும், முன்வாருங்கள்  என வேண்டிக் கொள்வது, ஒரு கருத்தாளன் செய்யும் தவறாக அமையாதல்லவா...?

 

தான் வாழும் நாட்டின் மொழிகளில் திறமை பெற்றவர்கள், (பார்க் அல்குர்'ஆன் 14:4) தனது கருத்துக்களை கவர்ச்சிகரமாக முன்வைக்கக் கூடிய பேச்சுத் திறமை கொண்டவர்கள் (அல்குர்'ஆன் 28:34, புஹாரி: 5764), சிக்கலான சந்தர்ப்பங்களில் சிறப்பான முடிவுகளை எடுக்கும் திறமை பெற்றவர்கள் (21:79), பலதரப்பட்ட சமூக அங்கத்தவர்களுடன் சேர்ந்து செயலாற்றக் கூடியவர்கள், சமூகத்திலே செல்வாக்குள்ள குடும்பப் பின்னணி கொண்டவர்கள், முதற்பார்வையில் மக்களை தன்பால் ஈர்த்து கொள்ளக்கூடியவர்கள் போன்ற முக்கிய பண்புகளை தன்னகத்தே கொண்டவர்கள், இச் றப்புமிகு பணிக்காக சுயமாக முன்வரவேண்டும் அல்லது அத்தகையவர்கள் இனங்காணப்பட்டு பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், உதவி ஒத்தாசைகளும் வழங்கப் படவேண்டும். இதுவிடயமாக அல்குர்'ஆன் முன்வைக்கும் போதனை இங்கு மிகச் சுருக்கமாக சுட்டிக் காட்டப் படுகிறது (பார்க்க 2:247).

 

இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் பரம்பரையில் தோன்றிய நபி (ஸல்) அவர்கள் ஒரு உத்தம மனிதராவார். அவருக்கு மனித சமூகத்துக்கு இஸ்லாம் எனும் உன்னத மார்க்கத்தை வழங்கும் சிறப்புரியாமையை அல்லாஹ் வழங்கினான். அதுபோலவே அவரது குடும்பத்தைச் சேர்ந்த அலி பின் அபூ தாலிப் (றழி) அவர்களுக்கு சிறைக் கைதிகளை எவ்வாறு நடாத்துவது எனும் விதி முறைகளை வகுத்துத் தரும் சிறப்புரிமையை வழங்கினான். தான் முகம் கொடுத்த "ஜமல்" மற்றும் "சிப்பீன்" யுத்தத்தின் போது அவர் யுத்த-கைதிகளை எவ்வாறு நடாத்தினார் எனும் வழிமுறைகளே, இன்று யுத்தக் கைதிகளின் உரிமைகளாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளன என்பது சிலாகித்து நோக்கத்தக்கதாகும். அதன் தொடரில் அவரின் பிள்ளையான "ஹுசைன்" (றழி) அவர்களுக்கு, “இஸ்லாமிய சமூகத்துக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவம் வழங்கப் படுவதன் அவசியத்தை” உலகுக்கு சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பை வல்ல நாயன் வழங்கினான் என்றால் மிகையாகாது.   அதற்கமைய அரசியல் களத்தின்  கதா நாயகன் ஹுசைன் பின் அலி (றழி) ஆவர் என்பது முன்னொரு சந்தர்ப்பத்தில் (அரசியல் களம்-1) விளக்கப் பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

 

ஹுசைன் பின் அலி (றழி) அவர்கள் சுவர்க்கத்து வாலிபர்களின் தலைவர் என்பது பொதுவாக எல்லா முஸ்லீம்களும் ஏற்றுக் கொள்ளும் அம்சமாகும் (ஹாகிம் 4779, திர்மிதி 3768). அந்த சிறப்புமிகு அந்தஸ்தை அடைந்துகொள்ள அவர் செய்த செயல் என்னவாகத்தான் இருக்கும். அதுதான் முறையற்ற ஆட்டசியை மாற்றி அமைப்பதற்கான பயணத்தில் ஈடுபட்டதாகும். அவரின் பயணம் வெற்றியடைந்ததா இல்லையா என்பது படம் முடிந்த பின்னர் கதை சொல்வது போன்றதாகும் (அல்லது கிரிக்கட் ஆட்டம் முடிந்த பின் விமர்சிப்பது போன்றதாகும்). ஆனால் ஆடுகளத்தில் நிலைமை எவ்வாறிருந்தது என்பதை அறிந்தவர் அவரேயாவார். அவர் தனது காலப்பகுதியில் முறையற்ற தலைமைத்துவத்துக்கு "பைஅத்" எனும் ஆதரவை வழங்க மறுத்த அதேவேளை, அதனை மாற்றி அமைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபாட்டார் என்பதே வரலாறாகும். அந்த வரலாற்றில் சில கசப்பான அம்சங்களும், கலங்கமான விடயங்களும் சேர்ந்து விட்டாலும் அவரின் முன்மாதி எந்த வகையிலும் மறுத்துரைக்க முடியாததாகும் (அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆழி முஹம்மத்).    

 

ஹுசைன் (றழி) அவர்களின் சிறப்புமிகு முன்மாதிரியை சிரம்மேல் கொண்டு, இன்றய முஸ்லீம் சமூகத்துக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்க முன்வருகின்றமை, தகைமை கொண்டவர்கள் செய்யக் கூடிய மிகச் சிறப்பான நல்லமலாகும் (ஸாலிஹான அமலாகும்) என்பது யாரும் கருத்தில் கொள்ளத்தக்க தாகும்.   

 

கழுதை தேய்ந்து கட்டெறும் பாவதுபோல், முஸ்லீம் சமூகம் பலவீனப் பட்டுக் கொண்டு செல்வதை தடுப்பதற்காக அத்தகையவர்கள் முன்வர வேண்டும்...! இஸ்லாதின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஸகாத்தை முறைப்படி வசூலித்து ஏழைகளுக்கு முறையாக வழங்கப் படாமைக்கு முற்றுப் புள்ளி வைக்க, அவர்கள் முன்வர வேண்டும்... சேரிகளிளும், முறையற்ற நெரிசல் வீடுகளிலும் வாழுகின்ற ஏழை மக்களுக்கு விடிவு கொண்டுவர அவர்கள் திட்டம் நிறைவேற்ற வேண்டும்....!  

 

... அன்று அலி (றழி) அவர்கள் யுத்தக்க கைதிகளுக்கு உரிமைகள் வழங்கி முன்மாதிரி படைத்த மண்ணில் வாழ்கின்ற இன்றய அரபிகள், தமது நாட்டில் தொழில்புரிகின்றவர்களை அடிமைகளாக நடத்துவதை தட்டிக் கேப்பதற்கும், கேட்காவிட்டால் குட்டிப் பணிய வைப்பதற்கும் ஒரு அரசியல் தலைவனால் அல்லாமல் வேறு யாரால்தான் முடியும்.....................? 

வருக தலைவனே முன்வருக, எம் சமூகத்துக்கு விடிவுகாலம் கொண்டு வருக.........!

அவன் வருகைக்கு வருகைக்கு முன்னாயத்தம் செய்வது யாவரதும் கடமையாகாதா.............? அதுவே சவால்கள் ஏற்படும் போது அந்த தலைவனை தனிமையில் விட்டு, பதுங்கி ஒதுங்கிக் கொள்ளாமல், தலைவனுடனேயே பயணிக்கக் கூடிய பண்புகளை யாரும் முதற்கண் தம்மத்தியில் முதற்கண் வளர்ந்துக் கொள்வோமாக...! (பார்க்க அல்குர்'ஆன் 3:144).

அன்று சினாய்ப் பாலை வனத்தில் சிறுமை பட்டு அலைந்து திரிந்த மூஸா நபியின் சமூகத்தினர் பிரார்தித்தது போன்று நாமும் பிரார்த்திப்போமாக.....................! (பார்க்க 2:246).  

Tuesday, February 8, 2022

வெற்றி வீரன்

மனிதன் என்பவன் பரிணாம வளர்ச்சி கண்ட ஒரு மிருகம் எனும் கருத்தில் நியாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த நியாயத்தைக் காரணமாகக் கொண்டு இறை மறுப்பை போதிக்கும்போதுதான் அநியாயம் நிகழ்கிறது எனலாம். மந்திரவாதிகள் எனச் சொல்லப்படும் மாயாஜால வித்தை காட்டக்கூடியவர்களே திடீர் திடீர் என பல்வேறு பொருட்களையும் உயிரினங்களையும் காட்சிப்படுத்துவர். ஆனால் யதார்த்த உலகில் எந்த ஒரு அம்சமும் படிப்படியாக வளர்ந்து தேய்வதையே காணலாம். அப்படியிருக்க மனிதன் மிருகத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவனா இல்லையா என்பது விஞ்ஞானிகள் விளக்கம் சொல்ல வேண்டிய அம்சமாகும். ஆனால் மிருகத்தை விடவும் பரிணாமம் கண்டவன் மனிதன் எனும் அம்சந்ததிலிருந்து நாம் உணரக்கூடியது மீண்டும் அவன் பரிணாம தேய்வுக்கண்டு மிருகத்தைவிட கேவலமாக மாற்றமுடியாது அல்லவா.....?

 

மிருகங்கள் சினம் கொள்கின்றனவா என மேலோட்டமாக அலசிப்பார்த்தால், தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக அல்லது தம்மைச் சார்ந்தவர்களை தற்காத்துக்கொள்வதற்காக சினம் கொள்கின்றன என சுருக்கமாகச் சொல்லலாம். ஆனால் அந்த சினம் அவைகளிடத்தில் நீடிப்பதில்லை எனலாம்.  அதேவேளை மிருகங்களை விடவும் பரிணாம மேன்மையடைந்த மனிதனிடத்தில் காணப்படும் அறிவு எனும் ஒரு அம்சம் அந்த சினத்தையும் அதை போன்ற இன்னும் பல உள்ளுணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆற்றலை அவனுக்கு கொடுத்திருக்கிறது.  ஆனால் அதே அறிவை பயன்படுத்தியே அந்த சினத்தை அவன் அதிகப்படுத்திக் கொள்வதையும் அதன் மூலம் தன்னை அளித்துக்கொள்ளும் நிலைக்கு மாறுவதையும் மிருகத்தைவிடவும் கீழ் நிலைக்கு போதல் என்று சொல்வதைவிடமும் வேறு விளக்கம் சொல்ல முடியுமா?

 

விலங்குகளை விடவும் மனிதனிடத்தில் காணக்கூடிடய விசேட அம்சமான அறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்பதே மனிதனுக்குரிய சவால் அல்லது பரீட்சை என்றால் மிகையாகாது. அந்த பரீட்சையில் அவன் வெற்றிபெற்றுவிட்டால் உலகின் ஏனைய அம்சங்களில் வெற்றிபெறுவது அத்துணை கடினமானதாக இருக்காது.

 

கோபம் கொள்ளும்போது தனது அறிவைப் பயன்படுத்தி அதை கட்டுப்படுத்திக் கொள்வது அறிவை எப்படிப் பயன்படுத்திடுவது எனும் பரீட்சையில் தொலையாது என்றால் மிகையாகாது. இந்த விடயத்தை ஒரு நபி மொழி பின்வருமாறு சொல்வதைக் காணலாம்.

உங்களில் வெற்றியாளன் அடுத்தவரை மல்யுத்தத்தில் வீழ்த்துவர் அல்ல, மாறாக தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியவராகும். (பார்க்க)

இந்த நபி மொழியில் சொல்லப்பட்டுள்ள மல்யுத்தம் எனும் அம்சம் காலத்தால் வழக்கிழந்துபோன ஒரு அம்சமாகையால் அதை விளங்கிக்கொள்வது ஏனைய அம்சங்களை விளங்க துணை செய்யும் அம்சம் எனலாம். மல்யுத்தம் என்பதை ஆங்கிலத்தில் சொன்னால் "ரெஸ்ட்லிங்" ஆகும். அது இன்றய காலத்தில் மிகப் பிரபல்யமான ஒரு அம்சமாக அமைந்திருப்பதைக் காணலாம். ஆனால் அதில் ஒருவாய் ஒருவர் தாக்கிக் கொள்வர். அதன் மூலம் சிலபோது களமாடும் வீரர்கள் படுகாயமடைவதும் உண்டும். ஆனால் நபி மொழியில் சொல்லப்பட்டுள்ள மல்யுத்தம் எனும் அம்சத்தில் ஒருவரை யொருவர் எந்த விதத்திலும் காயப் படுத்தாமல் தனது மிகை பலத்தால் அடுத்தவரை வீழ்த்துவதாகும். அதற்கு ஒப்பான ஒரு நவீன அம்சமாக கைப் பலத்தை காண்பித்தல் "விரிஸ்ட் பைட்டிங்" ( ) என்பதைச் சொல்லலாம். அவ்வாறு அதிக உடல் பலம் உள்ளவர்களால் போரிலே அடுத்தவர்களை இலகுவாக வெற்றி கொள்ள முடியும்.  எனவே மல்யுத்தத்தில் அடுத்தவர்களை மிகைக்கக் கூடியவன் சமூகத்திலே ஒரு வெற்றிவீரனாக கருதப்பட்டான்.

அத்தகைய ஒரு வெற்றி வீரனை முன்னுதாரணம் காட்டி உங்களில் வெற்றிவீரன் அடுத்தவர்களை மல்யுத்தத்தில் வீழ்த்துபவரல்லர் மாறாக கோபம் ஏற்படும் பொது அதை கட்டுப்படுத்திக் காப்பவரே என நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

எனவே முதற்கண் இதுவிடயமாக நாம் தெளிவு பெற்றுக்கொள்ளக்கூடிய அம்சம் என்னவெனில் பொறுமையைப் போதிக்கும் சொற்பொழிவுகளில் சொல்லப்படும் விளக்கங்களுக்கு மெருகு சேர்க்கும் ஒரு விடயமல்ல இது. மாறாக ஐந்து எஸ் ( ) எட்டு முகாமைத்துவ அம்சங்கள் ( ) என்பன போல் அன்றாடம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படுவதற்காக பதாகைகளில் பொறிக்கப்பட்டு சதாவும் ஞாபகமூட்டப் படவேண்டிய அம்சமாகும். அத்துடன் நவீன கால நடைமுறைக்கொப்ப  இதன் அர்த்தத்தை சொல்லக்கூடியவரான புதிய வசனங்களும் ஏற்படுத்தப்படவேண்டும் என்றால் மிகையாகாது. உதாரணமாக

 

பரீட்சையில் அதிக புள்ளிகள் பெறுபவன் அல்ல முதல் தரமானவன் மாறாக தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியவனே

 

இத்தகைய வாசங்களைப் பயன் படுத்துவதன் மூலமும் மற்றும் இன்னோரன்ன வழிமுறைகள் மூலமும் தனது கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ள போதிக்கப்படவேண்டும். அதுவே நாம் மேற்சொன்ன நபி மொழி வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வழிவகை செய்யும்.

 

கோபம் எனும் உணர்வு பற்றி நாம் தெரிந்துகொள்ளக்கூடிய மற்றுமோர் அம்சம் அது ஏனைய உள உணர்வுகளான கவலை, மகிழ்ச்சி, காமம் போன்ற அம்சங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகும். அதுபற்றி குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் என்னவெனில் கோபம் தணிந்த ஒருவனிடத்தில் காமம் இருக்கும், காமம் தணிந்த ஒருவனிடத்தில் கோபம் இருக்கும் என்பதாகும். (அதன் அர்த்தம் காமம் தணிந்தால் கோபம் உண்டாகும் என்பதல்ல.) அதை இன்னும் விளக்கமாக நோக்கினால், ஒருவன் தனது காமத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும்போது அவனிடத்தில் இயல்பாக கோபம் வளரும், கோபம் தனித்து இருக்கும்போது காமம் வளரும் என்பதாகும். இந்த காமம் மற்றும் கோபம் என்பன இரண்டுமே மனிதனை அழித்துவிடக்கூடிய உணர்வுகளாகும். காமத்துக்கு அடிமையாகியவனின் அறிவு எவ்வாறு மங்கிவிடுமோ அதுபோல் கோபத்துக் குள்ளானவது அறிவும் மங்கிவிடுகிறது என்பதை விளக்கவும் வேண்டுமா. இப்படியாக இந்த காமம், கோபம் எனும் இரண்டும் மனிதனுக்கு அழிவை உண்டுபண்ணும் அம்சங்களாக இருப்பது  ஒவ்வொரு மனிதனும் தெளிவு பெற்றிருக்க வேண்டிய முக்கிய அம்சம் என்றால் மிகையாகாது. அதேவேளை கோபத்தை காமத்தின் மூலம் தணிக்கலாம் எனும் அம்சமும், காமத்தை கட்டுப்படுத்துவது கோபத்தை உருவாக்கலாம் எனும் அம்சமும் தெளிவு பெற்றுக் கொள்ளக்கூடிய அம்சங்களேயாகும்.

 

இந்த கோபத்தை அடக்குவதற்கு பொறுமை என்றும் சொல்லப்படுகிறது. அதன்படி பொறுமை என்பது விசாலமான ஒரு அம்சமாக அமைகின்ற அதேவேளை பிழையாக விளங்கிக் கொள்ளப்படவும் வாய்ப்பும் அதிகம் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கதே. அஃதாவது கோபம் கொள்ளாத பலர் தமது வாழ்க்கையில் பொறுமையற்று செயல்பட வாய்ப்பிருப்பதாகும். அதன்மூலம் அவர்கள் வாழ்க்கையில் அவரசப்பட்டு தவறான முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்பிருக்கின்ற அதேவேளை சிலபோது வாழாவெட்டியாக இருக்கவும் வாய்ப்புண்டு. எனவே கோபம் தவிர்ப்பதை பொறுமை எனச் சொல்வதை விடவும் கோபம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அதை அடக்கிக்கொள்ள எனச் சொவதே சாலப் பொருத்தம் எனலாம்.

 

அப்படிச் சொல்லும்போதுதான் அவ்வாறு அடக்கிக் கொள்வது எப்படி, அதற்கான வழிமுறைகள் என்ன எனும் கேள்வி எழுவதாக அமையும். இந்த அம்சம் பொறுமை எனும் பொதுச் சொல்லுக்கு பொருந்திவராத வொன்றாகும் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.    கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் நபிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளன. விரிவு கருதி அவை இங்கு விளக்கப்படுவது தவிர்த்துக் கொள்ளப்படுகிறது. அத்துடன் யோக பயிற்சி முறையைச் சேர்ந்த மூச்சுப் பயிற்சியும் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள துணை செய்யவதாகும். இத்தகைய பல்வேறு வழிமுறைகள் மூலம் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது எனும் தீர்மானம் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் முதற் படி எனலாம். சுய பரிசோதனை அள்ளது தியானத்தின் மூலம் தான் கோபம் கொண்ட ஒரு சந்தர்ப்பத்தை சீர்தூக்கிப்பார்த்து அது அவசியமற்றது என அறிவினால் உணர்வதும், மீண்டும் அப்படி கோபப்படாமல் நடந்து கொள்வது என தீர்மானித்துக்கொள்வது கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ள துணை செய்யும் எனலாம்.

கோபம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சுவையான உணவுகளை  உட்கொவது அல்லது பானங்களை அருந்துவதும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள துணை செய்யும் மற்றுமொரு வழிமுறையாகும். இத்தகைய பல்வகை வழிமுறைகளைக் கைக்கொண்டு கோபம் தவிர்த்து வாழ்வது வாழ்க்கையில் பல வெற்றிகளை கொண்டுதருவது கண்கூடு. எனவே கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்பவனே வெற்றி வீரன் எனச் சொன்னது பொய்யா மொழியல்லவா.................?

கூட்டுப் புழு

கம்பளிப் பூச்சியின் ஒரு வளர்ச்சிக்கு கட்டமே கூட்டுப்புழுவாகும். அதேவேளை கம்பளி இல்லாத ஆனால் கம்பளிப் பூச்சியின் நிலையிலுள்ள புழுக்களும் உண்டு. எனவே கம்பளிப்பூச்சி என்பதை விடவும் கூட்டுப்புழு என்பது ஒரு பொதுச் சொல்லாக அமைவதால் கூட்டுப்புழு என்பது கருத்தில் கொள்ளப்படுகிறது.

இயற்கை அல்லது இறைவனது படைப்பியல்பின் ரகசியத்தை எடுத்தியம்பும் ஒரு உன்னத படைப்பினமே இந்தக் கூட்டுப்புழுவாகும். மனிதன் பரிணாம வளர்ச்சிக்கண்டான் எனக் கூறும் விஞ்ஞனாம் அதை நிரூபிக்க பல்வேறு உயிரினங்களில் காணப்படும் ஒற்றுமையை எடுத்துக்காட்டுகிறது. அதைவிடவும் சிறப்பான ஒரு அம்சமே இந்தக் கூட்டுப்புழு சமாச்சாரம் எனலாம். அதன்படி இறைவனது படைப்பினங்கள் என்றும் நிலையாக இருப்பதில்லை, மாறாக தொடர்ந்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த மாறுகின்ற பிரபஞ்சத்தில் வாழ்கின்ற மனிதன் ஆழ்ந்து சிந்தித்துணரத்தக்க ஒரு அம்சமே கூட்டுப்புழுவாகும். முட்டையாக இருந்து பின்னர் புழுவாக பரிணமித்து பின்னர் கூட்டுப்புழு எனும் சைவற்ற நிலையடைத்து கடைசியாக சிறகு முளைத்து பறக்கும் பூச்சியாக பரிணமிப்பதே இந்த கூட்டுப்புழுவாகும்.

இவ்வாறு பரிணமிக்கின்ற அந்த கூட்டுப்புழு எப்போதாவது தான் முட்டையாக இருந்திருக்கலாமே என எண்ணியிருக்குமா. அப்படி அது எண்ணியிருந்தால் ஒருநாள் சிறகு பெற்று பிறந்திருக்க முடியுமா.  அந்த கூட்டுப்புழுவின் போராட்டத்தை தெரிந்து கொட்டு பாதையில் போகும் போது ஒருநாள் எரிக்கும் வெயிலில், கருங்கல் பாதையில் ஒரு கூட்டுப்புழு போராடிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அதைக் காப்பாற்றாமல் அங்கிருந்து என்னால் நகர முடியவில்லை என்பது கதையல்ல, நிதர்சனமாகும். அந்த சின்னஞ் சிறு புழுவிலிருந்து மனிதன் கற்றுக்கொள்ளும் படிப்பினைகள்தான் எத்துணை எத்துணை,,,, (பார்க்க அல்குர்'ஆன் 12:105).

இப்படியாக தாம் என் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதை சிறுகூட எண்ணிப்பார்க்காமல் தொடர்ந்தும் அது வரையறுக்கப்பட்ட அந்த நாட்களை கடந்து செல்கிறது. அதற்கு சோதிடமும் தெரியாது. அபசகுனம் பற்றியும் எதுவும் தெரியாது. தனக்கு விதிக்கப்பட்ட வழிமுறையை திருப்தியுடன் ஏற்று அது தனது முயற்சியைத் தொடர்கிறது.

அந்த பின் குறிப்பிட்ட திகதி வந்தவுடன் பாதுகாப்பான ஒரு இடத்தை நாடிச் சென்று ஓய்வெடுக்கிறது. ஒய்வு களைந்து விழித்துப்பார்க்கும்போது அங்கே சிறகுகள் முளைத்திருக்கின்ற. மீண்டும் புது உலகிற்கு கம்பீரமாகப் புறப்படுகிறது.

மனித வாழ்க்கையும் இப்படித்தான் பல கட்டம் கட்டமாக அமைந்திருக்கிறது. ஒரு கட்டத்திலிருந்து மற்ற கட்டத்திற்கு போன மனிதன் கடந்து போன கட்டத்திலுள்ள நிம்மதியை நாடி தனது நிகழ்கால நிம்பதியைத் தொலைத்தத்துக்கொள்வது நியாயமாகுமா...? அந்தக் கூட்டுப்புழுவைப் பார்ந்தாவது கொஞ்சம் ஞானம் பெற்றுக்கொள்ளக் கூடாதா? ஐயோ,,,,,, சிலர் அவ்வப்போது தமது இன்னுயிரையே மாய்த்துக் கொள்கின்றனரே. இந்த முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது. கூட்டுப்புழுவுக்கு இருக்கின்ற துணிச்சல் கூட இல்லாமல் போய்விட்டதே,,,,,,,,,,,,,,,,,,

 காலங்கள் மாறும்

கணிதங்கள் மாறும்

 

தையொன்று பிறந்தால்

வழியொன்று பிறக்கும்

 

போனதையே எண்ணீ

ஏங்காதே,,,,,,,,

 

கால சூழ்நிலை மாறும் வரை கஷ்டங்களை சகித்துக் கொள்வதற்கும் பொறுமை என்று சொல்லப்படும்.

அவ்வாறே சிலபோது இருக்கின்றவற்றை இழந்து விடுவதற்கு நேரிடும் அல்லது இருக்கின்றவை இழந்து போகும். இத்தகைய நிலைகள் ஏற்படும் போதும் புதிய நிலைகளை முழு மனதுடன் ஏற்று புது வாழ்வை மகிழ்ச்சியுடன் கடத்துவதற்கு துணிவு கொள்வதும் அவசியமாகும். அதுவே அடுத்த கட்டத்தை அடைவதற்கு அஃதாவது சிறகு முளைத்து பறப்பதற்குத் துணையாகவும் அமையலாம்.     

 பார்க்க பொறுமை 

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...