Saturday, January 22, 2022

கருத்தாடல் 

கருத்தாடல் என்பது தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் ஒரு விசேடமான சொல்லாகும். களமாடல் என்பது யுத்தகளத்தில் யுத்தம் செய்வதைக் குறிப்பது போன்று, ஜனநாயக உலகிலே கருத்துக்களை பரிமாறிக் கொள்வதையே கருத்தாடல் குறிக்கிறது. களமாடுதலுக்கு எவ்வாறு தர்மங்கள் உண்டோ அவ்வாறே கருத்தாடலுக்கும் சிறப்புமிகு தர்மங்கள் உண்டு. அவை சரிவர பின்பற்றப் படுமானால் கருத்தாடல் கலாச்சாரம் சிறப்புற அமைவதுடன், அதனூடாக வாழ்வின் பல்வேறு பிரிச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் அதேவேளை,  தன்னளவிலும் அசெளகரியங்களுக்கு உள்ளாவதை தவிர்த்துக் கொள்ளலாம். 

 

கருத்தாடலின் முதல் முக்கிய தர்மம், கருத்தாடல் களத்துக்கு இறங்கும் போது, தான் சொல்வதுதான் சரி என நிரூபிப்பது எனும் குறுகிய எண்ணம் தவிர்த்து, பிறர் சொல்வதும் சரியாக இருக்கலாம் எனும் திறந்த மனோ நிலையுடன் இறங்களாகும். கற்றது கைம்மண்ணளவு என்பது பழமை மிகு பழமொழியாகும். எனவே தன்னைவிட ஒரு குறிப்பிட்ட விடயத்தில் அடுத்தவர் அதிகம் அறிந்திருக்கலாம் என்பதில் மாற்றுக்  கருத்தத்துக்கு இடமில்லை யாதலால் தான் சொல்வதொன்றே சரி எனும் மனோநிலையை தவிர்த்தல் கருத்துக் களமாடுவதன் முக்கிய தர்மமாகிறது. இது பற்றி கூறுகின்ற திருக்குர்'ஆன் "அவர்கள் தங்களது சகல விடயங்களையும் பிறருடன் கலந்தாலோசித்தே மேற்கொள்வர்" (42:38) எனக் கூறுகிறது. சகல அண்டசராசரங்களையும் படைத்து பரிபாலிக்கின்ற சகல ஞானங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இறைவனே  தான் மனிதனைப் படைக்குமுன்னர் அது பற்றி வானவர்களுடன் கலந்தாலோசித்ததாக திருக்குர்'ஆன் போதிக்கிறது (2:30). இந்த அம்சம் ஒரு தலைவன் பின்பற்றவேண்டிய பண்பாக இருந்தாலும் கூட, கருத்தாடலுக்குப் பின்னல் ஒரு முடிவு பிறக்கும் எனும் அடிப்படையில் இங்கு சுட்டிக்காட்டப் படுவது பொருத்தமாகும்.

 

அடுத்து முக்கியத்துவம் பெரும் கருத்தாடல்-தர்மம்  முதல் தர்மத்துடன் சம்பந்தப் பட்டதாகும். அஃதாவது பிறர் சொல்லும் விடயத்தை சரியாக புரிந்து கொள்ளலாகும். இதன் துணை அம்சமான கவனக் குவிப்பும் (concentration) அவசியம் கருதி சேர்த்துக் கொல்லப் படுகிறது. நடைமுறை உலகத்தின் மிக முக்கிய குறைபாடு, இந்த கவனக் குவிப்பை வளர்க்கும் அம்சங்கள் கழிந்துகொண்டே போவதாகும். அதை நவீன சந்தைப் பொருளாதாரத்தின் ஒரு கோர விளைவு எனக் கூறினாலும் மிகையாகாது. ஒரு மனிதனில் கவனம் சிறப்பாக இருந்தால் அவனால் சிறந்த தீர்மானங்களுக்கு வரமுடியும். அவனது கவனத்தை குழைத்தல் மாத்திரமே தான் விற்க விரும்பும் பொருளை வாங்குவதற்கு அவனை நிர்ப்பந்திக்களாம் எனும் அடைப்படியிலோ என்னவோ ஒருவனின் சுய சிந்தனையை இல்லாதொழித்து, அவனது கவனத்தை சிதரடிக்கும் அமைப்பிலேயே இன்றய உலகின் பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளன. இதன் ஒரு பிரதி விளைவாக கவனக்குவிப்புச் சக்தி (concentration power) குறைந்து கொண்டே வருவதால் பிறர் என்ன சொல்கிறார் என்பதை தான் விரும்பியவாறு எண்ணிக் கொண்டு, அதற்கு பதில் சொல்லும் ஒரு அமைப்பு எங்கும் பரவி வருகிறது. இந்த நிலை ஏற்படுவதற்கு பல்வேறு தப்பெண்ணங்களும் ஒரு காரணமாகும். இத்தகைய பலவீங்கள் தீர்த்துக் கொள்ளப்படுவதுடன், கவனக் குவிப்பை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகளில் ஈடுபடுவதும், பிறர் சொல்வதை சரிவர புரிந்து கொள்ள முயற்சிப்பதும் கருத்தாடலில் ஈடுபடுகின்றவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய தர்மமாகும். இது பற்றி திருக்குர்'ஆன் கூறும் விடயம் என்னவெனில் "நீங்கள் சந்தேகங்களை அதிகம் தவிர்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் சிலவகை சந்தேகங்கள் பாவங்களாக அமைந்து விடும்" (49:12) என்பதாகும். இது மனிதனின் நடத்தைகளுடன் நேரடியாக தொடர்புபட்ட விடடயமாக இருந்தாலும்கூட, கருத்தாடல் சில நடத்தைகளை தீர்மானிக்கக் கூடியது என்ற வகையிலும், பொதுவாகவும் பிறர் சொல்லும் விடயத்தை தப்பாக எண்ணிக் கொள்ளாமல் சரிவர புரிந்து கொள்வதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

 

கருத்தாடலுடன் சம்பத்தப்பட்ட அடுத்த தர்மம் முன்னைய தர்மத்துடன் பொருந்தியதாகும். அஃதாவது, சொல்லப்படுவதையே கவனிக்க வேண்டுமேயல்லாமல் சொல்லுகின்றவரின் கடந்த கால வாழ்க்கையை அல்ல எனும் அம்சமாகும். ஒவ்வொரு மனிதனும் அன்றாடம் வளர்ந்து அல்லது தேய்ந்துகொண்டே இருக்கிறான். தான் குறைவு என நினைப்பவன் வளர்கிறான். தான் நிறைவானவன் என நினைப்பவன் தேய்கிறான் எனும் தத்துவம் ஈண்டு குறிப்பிடப் படுவது சாலப் பொருத்தமாகும். எது எப்படியிருந்தாலும் சொல்லப்படும் அம்சத்தை மாத்திரம் கருத்தில் கொள்வதுதான் கருத்தாடலின் ஒரு சிறந்த தர்மமாகும். அப்பொழுதுதான் சொல்லப்படும் விடயத்தை சரியாக புரிந்துகொள்ள முடியும். அதன் பின்னரே சொல்லப்படும் அந்த விடயம் சரியானதா அல்லது பிழையானதா என தீர்மானிக்க முடியும். இது பற்றி திருக்குர்'ஆன் கூறும் பொழுது "நீங்கள் ஒருவர் மற்றவரை இழிவாகக் கருத வேண்டாம்" (49:11) எனக் கூறுகிறது. ஒரு மனிதன் சொல்வதை அவனது கடந்தகால வாழ்வை மையமாகக் கொண்டு இடைபோடுவது அவனை இழிவாகக் கருத்துவதன் ஒரு செயல்வடிவமாகும். இவ்வாறாக பிறரை இழிவாகக் கருதுவது பன்முகப் பட்டது என்பது முக்கியத்துவம் கருதி இங்கு சொல்லிக்காட்டப் படுகிறது. 

 

கருத்தாடலில் கடைபிடிக்கப் படவேண்டிய அடுத்த தர்மம் விட்டுக்கொடுத்தலாகும். விட்டுக்கொடுத்தல் இரண்டு வகைப்படும். ஒன்று சொல்லப்படும் விடயம் பிழை எனத் தெரிந்தாலும்கூட, கருத்தாடலின் மையக் கருத்துடன் சம்பத்தப் படாவிட்டால் அதை புறக்கணித்து விடுவதும், மற்றொன்று, சந்தர்ப்ப சூழல் கருதி  தான் சொல்வது சரியென விவாதிப்பதை தவிர்த்துக் கொள்வதுமாகும். இது பற்றி திருக்குர்'ஆன் கூறும் பொழுது "அவர்களுடன் மடையர்கள் பேசினால், நல்லிணக்கம் தரும் அம்சங்களைச் சொல்லுவார்கள்" (25:63) எனக் கூறுகிறது. இந்த திருக்குர்'ஆன் வசனம் பொதுவாக சற்று வித்தியாசமாக மொழிபெயர்க்கப் பட்டாலும், அதிலுள்ள பிழைகள் சுட்டிக்காட்டப் படுவது விரிவு கருதி தவிர்த்துக் கொல்லப் படுகிறது. 

 

கருத்தாடலில் கடைப் பிடிக்கப்ப படவேண்டிய மற்றொரு சிறந்த தர்மம் கருத்தாடலின் பின்னரானதாகும். இது ஒரு முனைவர் பட்டம் பெற்ற மாணவன் தனது பட்டமளிப்பு விழாவில் கூறியதை அதே மைப்பில் பொருத்தம் கருதி இங்கு கூறப்படுகிறது. படிப்பில் சிறந்த படிப்பு பிறர் சொல்வது பிழை என நிரூபிப்பது அல்ல, மாறாக தான் சொல்வதை தானே  மீள்பரிசீலனைக்கு உட்படுத்துவதாகும். அதற்கமைய, அறிவும் அறிவியலும் வளர்ந்து கொண்டே போவதனை கருத்திற் கொண்டு, தான் சொன்ன கருத்துக்களை தானே பிழை என உணரும் போது, அந்தப் பிழையை கண்டுகொள்ளத் துணை செய்த இறைவனை ஒரு முறை புகழ்ந்து, தனது பிழையை திருத்திக் கொள்வது கருத்தாடலின் மிகச் சிறந்ததொரு தர்மமாகும். இது பற்றி திருக்குர்'ஆன் பல இடங்களில் பல அம்சங்களைக் கூறியிருந்தாலும்கூட, சுருக்கமாக ஒரு விடயம் மாத்திரம் இங்கு முன்வைக்கப் படுகிறது. "டேவிட்" என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இறைத்தூதர் "தாவூத்" (அலை) அவர்கள் இரண்டு ஆட்டிடையர்கள் மத்தியில் தீர்ப்பு வழங்கும்பொழுது தவறிழைத்ததையும், தனது தவறை அறிந்து கொண்ட பொழுது சிரம்தாழ்த்தி இறைவனிடத்தில் மன்னிப்புக் கேட்டதாகவும் திருக்குர்'ஆன் கூறுகிறது (38:24). இவ்வாறு "தாவூத்' நபியவர்கள் தவறிழைத்தது நீதித் தீர்ப்பு வழங்கும் அம்சமொன்றிலாக இருந்தாலும் கூட பல்வேறு கருத்தாடல்களின் பின்னர் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் சமூகத்தில் அதிகம் தாக்கம் விளைவிக்கக் கூடியது ஆதலால் கருத்தாடளுக்கும் இது பொருந்தக்கூடியதாகும். அது போலவே இமாம் ஷாபி அவர்கள் ஒரே விடயத்தில் இரு வேறு பட்ட கருத்துக்களை சொல்லியிருப்பதாக அறியக்கிடைப்பது இதே அமைப்பிலாகும் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.  

 

கருத்தாடலுடன் சம்பந்தமான இன்னும் பல தர்மங்கள் இருந்தாலும் கூட அவசியம் கருதி ஒரு பொதுவான அம்சம் இங்கு கருத்தாடலின் தர்மமமாக முன்வைக்கப் படுகிறது. பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும் எனும் பழமொழிக்கேற்ப கருத்துக் களமாடுவதில் ஈடுபட விரும்புகின்றவர்கள் அதற் தேவையான முக்கிய ஆயுதமாகிய அறிவை வளர்த்தல் மற்றும் தகவல்களை திரட்டலில் எனும் விடயங்களில் தொடர்ந்தும் ஈடுபட வேண்டும். அறிவை வளர்த்தல், வாசித்தல் மற்றும், அறிஞர்களை சார்ந்த்திருத்தல் என்பன பற்றி திருக்குர்'ஆனும், நபிவாக்குகளும்  முன்வைக்கின்ற போதனைகள் ஏராளம்  இருக்கின்றன. "அறிவு படைத்தவர்களே, இறைவனை அஞ்சி (அவனை வழிபடக்கூடியவர்கள்)" (35:28) எனும் வசனத்தை  அதற்கு முன்னாலு பின்னாலும் சொல்லப் பட்டுள்ள வசனங்களுடன் சேர்த்துப் பார்க்கின்ற பொழுது, எத்தகைய வகையிலான அறிவை அல்குர்'ஆன் போதிக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். இப்படியாக கருத்தாடலில் ஈடுபட விரும்புகின்றவர்கள் தொடர்ந்தும் அறிவைத் தேடுவதில் ஈடுபடுவது கருத்தாடலின் ஒரு தார்மம் மாத்திரமன்றி இம்மையிலும் மறுமையிலும் அதிகம் பலன்  தரத்தக்கனவாகும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்க முடியாது.

 

கருத்தாடலின்போது தவிர்க்க முடியாத ஒரு அம்சம் பிறர் கருத்திலுள்ள பிழைகளை சுட்டிக் காட்டுவதாகும். அவ்வாறு சுட்டிக் காட்டும்பொழுது மிக நளினமாகவும் புத்தி சாதூர்யமாகவும் நடந்து கொள்வது ஒரு சிறப்புமிகு தர்மமாகும். உலகில் தோன்றிய அரசர்களில் மிக மோசமானவன் எனக் கருதத்தக்க "பிர்'அவ்ன்" என்பவனிடம், இறைதூதர் மூஸா (அலை) அவர்கள் போகும் போது "நீர் அவனிடம்" நலினமான வார்த்தைகளைக் கொண்டு அவனுடன் பேசுவீராக (20:44) என்று இறைவன் வழங்கிய  போதனை தவறுகளை சுட்டிக் காட்டும் போது நலினம் கடைப் பிடிக்கப் படவேண்டும் என்பதுடன் புத்திசாதூர்யமும் பயன் படுத்தப் படவேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது. "எதில் நலினம் உள்ளதோ அதை இறைவன் சிறப்பாக்குவான், எதில் அது இல்லாமல் போகிறதோ அதை இறைவன் கலை இழக்கச் செய்வான்" (முஸ்லிம்) எனும் நபி வாக்கும் அது போன்ற இன்னும் பல நபி வாக்குகளும் பொதுவாக வாழ்க்கையில் நளினம் கடைப் பிடிக்கப் படுவதை போதிக்கின்றது. நளினம் என்பதன் மூலம் கருதப்படுவது பிறர் துன்பத்துக் குள்ளாவதை தவிர்ப்பதாகும். அதற்கிணங்க பிறரது கருத்துக்களை மருத்துரைக்கும்போது மிக நலினமான அமைப்பில் மருத்துரைப்பதும் கருத்தாடலில் கடைப் பிடிக்கப் படவேண்டிய போற்றத்தக்க தர்மமாகும். 

 

கருத்தாடலுடன் சம்பந்தப்பட்ட இன்னுமொரு தர்மம் அதற்கு முந்திய நிலையாகும். ஒரு இறை விசுவாசியின் நிலைப்பாடு எத்தகைய தென்றால் எத்துனை மனித முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும், இறை நாட்டம் எதுவோ அதுதான் இந்த உலகில் அரங்கேறும் என்பதாகும். ஆதலால் கருத்தாடல் உட்பட ஏனைய எல்லா செயல்களும் இறைவனுக்காக வென்றும், இறை பொருத்தத்தை நாடியுமே மேற்கொள்ளப் படவேண்டும் என்பது இஸ்லாம் போதிக்கும் ஒரு கண்டிப்பான வழிமுறையாகும். அதற்கமைய கருத்தாடலில் ஈடுபடுகின்றவர்கள் இறைவனுக்காக இந்த கருத்தாடலில் ஈடுபடுகிறேன் எனும் எண்ணத்தை முதற்கண் ஏற்படுத்திக் கொள்வது கருத்தாடலின் ஒரு முக்கிய தர்மமாக அமைகிறது. அத்துடன் கருத்தாடலின்போது கருத்து மோதல்கள் ஏற்படுமானால் அதனை சமாளித்துக் கொள்வதற்கு அதிகம் துணைபுரியக்கூடிய அம்சம் இதுவாகும் என்பதும் கருத்திற் கொள்ளத்தக்கதாகும்.

 

பிரச்சினைகள் கூடிக்கொண்டே போகக் கூடிய நடைமுறை உலகத்தில், தீர்வுகளை கொண்டுதரும் முக்கியதொரு அம்சம் கருத்தாடலாதலால், அது கணவன் மனைவி முதல் சகல தரப்பினரிடத்திலும் ஊக்குவிக்கப் படவேண்டிய தொரு அம்சமாக இருக்கும் அதேவேளை, கருத்தாடலுக்குரிய தர்மங்கள் சரிவர பின்பற்றப் படுகின்றபோதே அதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் சரிவரக் கிடைக்கும் என்பது வெள்ளிடை மலையாகும். 

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...