Saturday, January 22, 2022

 அரசியல் களம்-2

அரசியல், கலிமாவுக்கு அடுத்து ஒரு சிறந்த செயல் என்றால் அது மிகையாகாது. தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், ஸதகா என்றெல்லாம் நற்செயல்கள் உண்டு. அவை அனைத்தும் அவ்வப்போது குறிப்பிட்ட கால, நேர சூழ்நிலைக்குள் வரையறுக்கப் பட்டவைகளே. ஆனால் ஒரு மனிதன் சமூகத்து சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவது, அவன் ஆரம்பித்தது முதல் மரணிக்கும் வரைக்கும், அதன் பின்னர் மறுமை நாள் வரைக்கும் நன்மை பெற்றுத்தரும் செயல் என்பதை மறுக்கக் கூடிய ஆதாரங்களும் உண்டோ.

 

இத்துணை சிறப்பு மிகு அரசியல் செயல்பாட்டை வலியுறுத்தியோ, ஊக்கப் படுத்தியோ அல்குர்'னிலோ, நபிப் போதனைகளிலோ அதிகம் சொல்லப் படாமைக்கு காரணங்களும் இல்லாமலில்லை. அவ்வாறு எதுவும் சொல்லப் படவில்லை என்பதற்காக அன்றும் இன்றும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கவில்லை என்பது ஒரு முக்கிய காரணமாகும். அதேவேளை ஒரு சிறந்த தலைவன் எத்தகைய சிறப்பு மிக்கவன் என்பதுபற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. நிழலே இல்லாத அந்நாளிலே நிழல் பெறக்கூடிய ஏழு வகையினரில் ஒருவர் நீதியான தலைவன் என்பதாக நபிப் போதனைகளில் குறிப்பிடப் பட்டுள்ளது ( ). அத்தகைய நீதி செலுத்தும் தலைவன் தற்கால ஊழல் தலைவர்களை விடவும் அப்பாற்பட்டவன் என்பதை முதற்கண் சுருக்கமாக விளங்கிக் கொள்ளலாம்.  

 

இஸ்லாத்தின் போதனைகளின் அடிப்படையில் கால, சூழ சந்தர்ப்பத்துக்கேற்ப செயல்பாடுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும். அதற்கமைய தற்கால சூழ்நிலையில் சமூகத்துக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவம் வழங்குவது ஒரு சிறந்த செயலாக அமைவது மாத்திரமன்றி அது ஒரு கடமை எனச் சொல்வதும் மிகையாகாது. 

 

ஒரு சிறுபான்மைச் சமூகம் எனும் வரையறுக்கப் பட்ட நடைமுறை சமூக நிலைமையை எடுத்துக் கொண்டால், ஜனநாயகம் எனும் பரந்த அமைப்பின் ஒரு அங்கமாக அது அமைந்திருப்பது முதற்கண் கருத்தில் கொள்ளத்தக்க முக்கிய அம்சமாகும். இந்த ஜனநாயகம் எனும் பரந்து விரிந்த குடைக்குக் கீழ் எந்த இடத்தை சிறுபான்மை முஸ்லீம் சமூகம் வகிக்கிறது என்பது வேறு ஒரு தலைப்பின் கீழ் விளங்கிக் கொள்ள வேண்டிய முக்கிய அம்சமாதலால் விரிவு கருதி மிகச் சுருக்கமாக தொட்டுக்காட்டப் படுகிறது.

 

இந்த ஜனயாக முறைமை வகுத்துத் தரும் சலுகையின் அடிப்படையில், முஸ்லீம்கள் பெரும்பான்மை சமூகத்தினருடன் ஒன்று சேர்ந்தும், தனிக் கட்சியாகவும் தேர்தல் முறையில் பங்கேற்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு எனும் மார்க்க அறிஞர்களின் தீர்வுக்கு ஏற்ப அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது இஸ்லாத்தின் வரையறைக்குள் அமைகிறது (இது துறைசார் அறிஞர்களின் ஆய்வுடன் சம்பத்தப் பட்டதாகையால் அது பற்றிய உசாத்துணைகள் சுட்டிக் காட்டப் படவில்லை). அதற்கமைய முஸ்லீம் சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பிலும், அரசினூடாக முஸ்லீம்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் ஏனைய சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், அரசியலில் ஈடுபடும் தேவை ஏற்படுகிறது. அத்துடன் இவை இரண்டிற்கும் அப்பால் ஒரு சிறந்த முன்மாதிரியை வழங்குவதன் மூலம் இஸ்லாத்தின் சிறப்பை பிற சமூகத்தினருக்கு எடுத்தியம்பும் அமைப்பிலும், பொதுவாக இறைவனது படைப்பினங்களுக்கு சிறந்த சேவையை வழங்கல் மற்றும் பூமியை வளப்படுத்தல் எனும் இறை கட்டளையை நிறைவேற்றல் () ஆகிய பணிகளை நிறை வேற்றுவதற்கும் ஒரு சிறந்த வழிமுறையாக அரசியல் அமைவது சுட்டிக்காட்டத் தக்கதாகும். ஆனால் இன்றயகால முஸ்லீம் சமூகத்தின் அரசியல் பிரதிநித்துவம் எப்படி அமைந்திருக்கிறது என்பது விளக்கிச் சொல்லும் அவசியமற்றதே. இன்று அரசியல் பிழைப்பு நடாத்துகின்றவர்கள் சினிமா துறையில் ஈடுபட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனச் சொல்வது பிழையாகாது.

 

இந் நிலையிலே முஸ்லீம் சமூகத்துக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவம் வழங்குவதன் முக்கியத்துவம் இமயம் தொடுகிறது எனச் சொல்வது சாலப் பொருத்தமாகும். இத்தகைய அரசியல் தலைமைத்துவம் வழங்கக் கூடிய ஒருவர் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் "அரசியல் களம்-1" எனும் தலைப்பின் கீழ் விளக்கப் பட்டுள்ளதால் அது இங்கு தவிர்த்துக் கொள்ளப் படுகிறது. அந்த அடிப்படைத் தகுதிகள் வளர்ந்துக் கொள்ளகூடியவைகளாகும். அதேவேளை இன்றய சூழ்நிலையில், இருக்கின்ற போட்டிக்கு மத்தியில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய பண்புகளை பெற்றவர்கள் அவ்வாறு உருவாக்கப் படுவது அத்துணை இலகுவான காரியமன்று. எனவே அத்தகை பண்புகளை தன்னகத்தே கொண்டவர்கள் இந்த சிறப்பு மிக்க பணியை பொறுப்பேற்றுக் கொள்வதற்காக முன்வருருங்கள்  என வேண்டிக் கொள்வது ஒரு கருத்தாளன் செய்யும் தவறாக அமையாதல்லவா...?

 

தான் வாழும் நாட்டின் மொழிகளில் திறமை பெற்றவர்கள் (பார்க் அல்குரான்), தனது கருத்துக்களை கவர்ச்சியாக முன்வைக்கக் கூடிய பேச்சுத் திறமை கொண்டவர்கள். சிக்கலான சந்தர்ப்பங்களில் சிறப்பான முடிவுகளை எடுக்கும் திறமை கொண்டவர்கள், பல்வகைப்பட்ட சமூக அங்கத்தவர்களுடன் ஒத்துழைத்து செயற்பாடக்  கூடியவர்கள், சமூகத்திலே செல்வாக்குள்ள குடும்பப் பின்னணி கொண்டவர்கள், முதற்பார்வையில் மக்களை தன்பால் கவர்ந்து கொள்ளக் கூடியவர் போன்ற பண்புகளைக் கொண்டவர்கள் தாமாக இப்பொறுப்பை சுமக்க முன்வரவேண்டும் அல்லது அத்தகையவர்கள் இனங்காணப் பட்டு பொறுப்புகள் வழங்கப் படுவதுடன் உதவி ஒத்தாசைகளும் வழங்கப் படவேண்டும். இதுவிடயமாக அல்குர்'ஆன் முன்வைக்கும் போதனை இங்கு மிகச் சுருக்கமாக சுட்டிக் காட்டப் படுகிறது (பார்க்க )

 

இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் பரம்பரையில் தோன்றிய நபி (ஸல்) அவர்கள் ஒரு உத்தம மனிதராவார். அவருக்கு மனித சமூகத்துக்கு இஸ்லாம் எனும் உன்னத மார்க்கத்தை வழங்கும் சிறப்புரியாமையை அல்லாஹ் வழங்கினான் (அல்குர்'ஆன்) அதுபோலவே அவரது பரம்பரையைச் சேர்ந்த அலி பின் அபூ தாலிப் (றழி) அவர்களுக்கு சிறைக்கைதிகளை எவ்வாறு நடாத்துவது எனும் விதி முறைகளை வகுத்துச் சொல்லும் சிறப்புரிமையை அல்லாஹ் வழங்கினான். அவர் தான் முகம் கொடுத்த "ஜமல்" மற்றும் "சிப்பீன்" யுத்தத்தின் பொது கைதிகளை எவ்வாறு நடாத்தினார் எனும் அமைப்பே இன்றும் யுத்தக் கைதிகளின் உரிமையாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. அவரின் பரம்பரையைச் சேர்ந்த "ஹுசைன்" றழி அவர்களுக்கு இஸ்லாமிய சமூகத்துக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவம் வழங்கப் படுவதன் அவசியத்தை உலகுக்கு சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பை வல்ல நாயன் வழங்கினான் என்றால் அது மிகையாகாது.   அதற்கமைய அரசியல் களத்தின்  கதா நாயகன் ஹுசைன் பின் அலி (றழி) ஆவர் என்பது முன்னொரு சந்தர்ப்பத்தில் (அரசியல் களம்-1) விளக்கப் பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

 

ஹுசைன் பின் அலி (றழி) அவர்கள் சுவர்க்கத்து வாலிபர்களின் தலைவர் என்பது பொதுவாக எல்லா முஸ்லீம்களும் ஏற்றுக் கொள்ளும் அம்சமாகும். அந்த சிறப்புமிகு அந்தஸ்தை அடைந்து கொள்ள அவர் செய்த செயல் என்னவாகத்தான் இருக்கும். அதுதான் முறையற்ற ஆட்டசியை மாற்றி அமைப்பதற்கான பயணத்தில் ஈடுபட்டதாகும். அவரின் பயணம் வெற்றிகரமானதா இல்லையா என்பது படம் முடிந்த பின்னர் கதை சொல்வது போன்றதாகும். ஆனால் அவர் தனது காலத்திலே முறையற்ற அரசுக்கு "பைஅத்" எனும் ஆதரவை வழங்க மறுத்த அதேவேளை அதனை மாற்றி அமைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபாட்டார் என்பதே வரலாறாகும். அந்த வரலாற்றில் சில கசப்பான அம்சங்களும், கலங்கமான விடயங்களும் சேர்ந்து விட்டாலும் அவரின் முன்மாதி எந்த வகையிலும் மறுத்துரைக்க முடியாததாகும்.

 

ஹுசைன் (றழி) அவர்களின் சிறப்புமிகு முன்மாதிரியை சிரம்மேல் கொண்டு இன்றய முஸ்லீம் சமூகத்துக்கு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்க முன்வரவேண்டியமை தகைமை கொண்டவர்கள் செய்யக் கூடிய மிகச் சிறப்பான நல்லமலாகும்.

 

கழுதை தேய்ந்து கட்டெறும்பாவது போல் முஸ்லீம் சமூகம் பலவீனப் பட்டுக் கொண்டு செல்வதை தடுப்பதற்கு அவர்கள் முன்வர வேண்டும். இஸ்லாதின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஸகாத்தை முறைப்படி வசூலித்து ஏழைகளுக்கு முறைப்படி வழங்க வழிவகை செய்வது இதுகால வரையிலும் நிறைவேற்றப் படாமைக்கு முற்றுப் புள்ளி வைக்க அவர்கள் முன்வர வேண்டும். சேரிகளிளும், முறையற்ற நெரிசல் வீடுகளிலும் வாழுகின்ற ஏழை மக்களுக்கு விடிவு கொண்டுவர அவர்கள் திட்டம் நிறைவேற்ற வேண்டும்.

 

அன்று அலி (றழி) அவர்கள் யுத்தக்க கைதிகளுக்கு உரிமைகள் வழங்கிய மண்ணில் வாழ்கின்ற இன்றய அரபிகள் தமது நாட்டில் தொழில்புரிகின்றவர்களை அடிமைகளாக நடத்துவதை தட்டிக் கேப்பதற்கும், கேட்காவிட்டால் குட்டிப் பணிய வைப்பதற்கும் அரசியல் தலைவனால் அல்லாமல் வேறு யாரால்தான் முடியும். 

வருக தலைவனே முன்வருக, எம் சமூகத்துக்கு விடிவுகாலம் கொண்டு வருக .......... அதற்கு முன்னாயத்தமாக சவால்கள் ஏற்படும் போது தலைவனை தனிமையில் விட்டு ஒதுங்கிக் கொள்ளாமல், தலைவனுடனேயே பயணிக்கக் கூடிய பண்புகளை எம்மத்தியில் முதற்கண் வளர்ந்துக் கொள்வோமாக (பார்க்க அல்குர்'ஆன் )

 (அன்று சினாய்ப் பாலை வனத்தில் சிரிமைப் பட்டு அலைந்த மூஸா நபியின் சமூகத்தினர் பிரார்தித்தது போன்று இன்று நாமும் பிரார்த்திப்போமாக) 


No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...