Tuesday, February 8, 2022

வெற்றி வீரன்

மனிதன் என்பவன் பரிணாம வளர்ச்சி கண்ட ஒரு மிருகம் எனும் கருத்தில் நியாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த நியாயத்தைக் காரணமாகக் கொண்டு இறை மறுப்பை போதிக்கும்போதுதான் அநியாயம் நிகழ்கிறது எனலாம். மந்திரவாதிகள் எனச் சொல்லப்படும் மாயாஜால வித்தை காட்டக்கூடியவர்களே திடீர் திடீர் என பல்வேறு பொருட்களையும் உயிரினங்களையும் காட்சிப்படுத்துவர். ஆனால் யதார்த்த உலகில் எந்த ஒரு அம்சமும் படிப்படியாக வளர்ந்து தேய்வதையே காணலாம். அப்படியிருக்க மனிதன் மிருகத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவனா இல்லையா என்பது விஞ்ஞானிகள் விளக்கம் சொல்ல வேண்டிய அம்சமாகும். ஆனால் மிருகத்தை விடவும் பரிணாமம் கண்டவன் மனிதன் எனும் அம்சந்ததிலிருந்து நாம் உணரக்கூடியது மீண்டும் அவன் பரிணாம தேய்வுக்கண்டு மிருகத்தைவிட கேவலமாக மாற்றமுடியாது அல்லவா.....?

 

மிருகங்கள் சினம் கொள்கின்றனவா என மேலோட்டமாக அலசிப்பார்த்தால், தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக அல்லது தம்மைச் சார்ந்தவர்களை தற்காத்துக்கொள்வதற்காக சினம் கொள்கின்றன என சுருக்கமாகச் சொல்லலாம். ஆனால் அந்த சினம் அவைகளிடத்தில் நீடிப்பதில்லை எனலாம்.  அதேவேளை மிருகங்களை விடவும் பரிணாம மேன்மையடைந்த மனிதனிடத்தில் காணப்படும் அறிவு எனும் ஒரு அம்சம் அந்த சினத்தையும் அதை போன்ற இன்னும் பல உள்ளுணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆற்றலை அவனுக்கு கொடுத்திருக்கிறது.  ஆனால் அதே அறிவை பயன்படுத்தியே அந்த சினத்தை அவன் அதிகப்படுத்திக் கொள்வதையும் அதன் மூலம் தன்னை அளித்துக்கொள்ளும் நிலைக்கு மாறுவதையும் மிருகத்தைவிடவும் கீழ் நிலைக்கு போதல் என்று சொல்வதைவிடமும் வேறு விளக்கம் சொல்ல முடியுமா?

 

விலங்குகளை விடவும் மனிதனிடத்தில் காணக்கூடிடய விசேட அம்சமான அறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்பதே மனிதனுக்குரிய சவால் அல்லது பரீட்சை என்றால் மிகையாகாது. அந்த பரீட்சையில் அவன் வெற்றிபெற்றுவிட்டால் உலகின் ஏனைய அம்சங்களில் வெற்றிபெறுவது அத்துணை கடினமானதாக இருக்காது.

 

கோபம் கொள்ளும்போது தனது அறிவைப் பயன்படுத்தி அதை கட்டுப்படுத்திக் கொள்வது அறிவை எப்படிப் பயன்படுத்திடுவது எனும் பரீட்சையில் தொலையாது என்றால் மிகையாகாது. இந்த விடயத்தை ஒரு நபி மொழி பின்வருமாறு சொல்வதைக் காணலாம்.

உங்களில் வெற்றியாளன் அடுத்தவரை மல்யுத்தத்தில் வீழ்த்துவர் அல்ல, மாறாக தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியவராகும். (பார்க்க)

இந்த நபி மொழியில் சொல்லப்பட்டுள்ள மல்யுத்தம் எனும் அம்சம் காலத்தால் வழக்கிழந்துபோன ஒரு அம்சமாகையால் அதை விளங்கிக்கொள்வது ஏனைய அம்சங்களை விளங்க துணை செய்யும் அம்சம் எனலாம். மல்யுத்தம் என்பதை ஆங்கிலத்தில் சொன்னால் "ரெஸ்ட்லிங்" ஆகும். அது இன்றய காலத்தில் மிகப் பிரபல்யமான ஒரு அம்சமாக அமைந்திருப்பதைக் காணலாம். ஆனால் அதில் ஒருவாய் ஒருவர் தாக்கிக் கொள்வர். அதன் மூலம் சிலபோது களமாடும் வீரர்கள் படுகாயமடைவதும் உண்டும். ஆனால் நபி மொழியில் சொல்லப்பட்டுள்ள மல்யுத்தம் எனும் அம்சத்தில் ஒருவரை யொருவர் எந்த விதத்திலும் காயப் படுத்தாமல் தனது மிகை பலத்தால் அடுத்தவரை வீழ்த்துவதாகும். அதற்கு ஒப்பான ஒரு நவீன அம்சமாக கைப் பலத்தை காண்பித்தல் "விரிஸ்ட் பைட்டிங்" ( ) என்பதைச் சொல்லலாம். அவ்வாறு அதிக உடல் பலம் உள்ளவர்களால் போரிலே அடுத்தவர்களை இலகுவாக வெற்றி கொள்ள முடியும்.  எனவே மல்யுத்தத்தில் அடுத்தவர்களை மிகைக்கக் கூடியவன் சமூகத்திலே ஒரு வெற்றிவீரனாக கருதப்பட்டான்.

அத்தகைய ஒரு வெற்றி வீரனை முன்னுதாரணம் காட்டி உங்களில் வெற்றிவீரன் அடுத்தவர்களை மல்யுத்தத்தில் வீழ்த்துபவரல்லர் மாறாக கோபம் ஏற்படும் பொது அதை கட்டுப்படுத்திக் காப்பவரே என நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

எனவே முதற்கண் இதுவிடயமாக நாம் தெளிவு பெற்றுக்கொள்ளக்கூடிய அம்சம் என்னவெனில் பொறுமையைப் போதிக்கும் சொற்பொழிவுகளில் சொல்லப்படும் விளக்கங்களுக்கு மெருகு சேர்க்கும் ஒரு விடயமல்ல இது. மாறாக ஐந்து எஸ் ( ) எட்டு முகாமைத்துவ அம்சங்கள் ( ) என்பன போல் அன்றாடம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படுவதற்காக பதாகைகளில் பொறிக்கப்பட்டு சதாவும் ஞாபகமூட்டப் படவேண்டிய அம்சமாகும். அத்துடன் நவீன கால நடைமுறைக்கொப்ப  இதன் அர்த்தத்தை சொல்லக்கூடியவரான புதிய வசனங்களும் ஏற்படுத்தப்படவேண்டும் என்றால் மிகையாகாது. உதாரணமாக

 

பரீட்சையில் அதிக புள்ளிகள் பெறுபவன் அல்ல முதல் தரமானவன் மாறாக தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியவனே

 

இத்தகைய வாசங்களைப் பயன் படுத்துவதன் மூலமும் மற்றும் இன்னோரன்ன வழிமுறைகள் மூலமும் தனது கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ள போதிக்கப்படவேண்டும். அதுவே நாம் மேற்சொன்ன நபி மொழி வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வழிவகை செய்யும்.

 

கோபம் எனும் உணர்வு பற்றி நாம் தெரிந்துகொள்ளக்கூடிய மற்றுமோர் அம்சம் அது ஏனைய உள உணர்வுகளான கவலை, மகிழ்ச்சி, காமம் போன்ற அம்சங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகும். அதுபற்றி குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் என்னவெனில் கோபம் தணிந்த ஒருவனிடத்தில் காமம் இருக்கும், காமம் தணிந்த ஒருவனிடத்தில் கோபம் இருக்கும் என்பதாகும். (அதன் அர்த்தம் காமம் தணிந்தால் கோபம் உண்டாகும் என்பதல்ல.) அதை இன்னும் விளக்கமாக நோக்கினால், ஒருவன் தனது காமத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும்போது அவனிடத்தில் இயல்பாக கோபம் வளரும், கோபம் தனித்து இருக்கும்போது காமம் வளரும் என்பதாகும். இந்த காமம் மற்றும் கோபம் என்பன இரண்டுமே மனிதனை அழித்துவிடக்கூடிய உணர்வுகளாகும். காமத்துக்கு அடிமையாகியவனின் அறிவு எவ்வாறு மங்கிவிடுமோ அதுபோல் கோபத்துக் குள்ளானவது அறிவும் மங்கிவிடுகிறது என்பதை விளக்கவும் வேண்டுமா. இப்படியாக இந்த காமம், கோபம் எனும் இரண்டும் மனிதனுக்கு அழிவை உண்டுபண்ணும் அம்சங்களாக இருப்பது  ஒவ்வொரு மனிதனும் தெளிவு பெற்றிருக்க வேண்டிய முக்கிய அம்சம் என்றால் மிகையாகாது. அதேவேளை கோபத்தை காமத்தின் மூலம் தணிக்கலாம் எனும் அம்சமும், காமத்தை கட்டுப்படுத்துவது கோபத்தை உருவாக்கலாம் எனும் அம்சமும் தெளிவு பெற்றுக் கொள்ளக்கூடிய அம்சங்களேயாகும்.

 

இந்த கோபத்தை அடக்குவதற்கு பொறுமை என்றும் சொல்லப்படுகிறது. அதன்படி பொறுமை என்பது விசாலமான ஒரு அம்சமாக அமைகின்ற அதேவேளை பிழையாக விளங்கிக் கொள்ளப்படவும் வாய்ப்பும் அதிகம் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கதே. அஃதாவது கோபம் கொள்ளாத பலர் தமது வாழ்க்கையில் பொறுமையற்று செயல்பட வாய்ப்பிருப்பதாகும். அதன்மூலம் அவர்கள் வாழ்க்கையில் அவரசப்பட்டு தவறான முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்பிருக்கின்ற அதேவேளை சிலபோது வாழாவெட்டியாக இருக்கவும் வாய்ப்புண்டு. எனவே கோபம் தவிர்ப்பதை பொறுமை எனச் சொல்வதை விடவும் கோபம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அதை அடக்கிக்கொள்ள எனச் சொவதே சாலப் பொருத்தம் எனலாம்.

 

அப்படிச் சொல்லும்போதுதான் அவ்வாறு அடக்கிக் கொள்வது எப்படி, அதற்கான வழிமுறைகள் என்ன எனும் கேள்வி எழுவதாக அமையும். இந்த அம்சம் பொறுமை எனும் பொதுச் சொல்லுக்கு பொருந்திவராத வொன்றாகும் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.    கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் நபிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளன. விரிவு கருதி அவை இங்கு விளக்கப்படுவது தவிர்த்துக் கொள்ளப்படுகிறது. அத்துடன் யோக பயிற்சி முறையைச் சேர்ந்த மூச்சுப் பயிற்சியும் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள துணை செய்யவதாகும். இத்தகைய பல்வேறு வழிமுறைகள் மூலம் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது எனும் தீர்மானம் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் முதற் படி எனலாம். சுய பரிசோதனை அள்ளது தியானத்தின் மூலம் தான் கோபம் கொண்ட ஒரு சந்தர்ப்பத்தை சீர்தூக்கிப்பார்த்து அது அவசியமற்றது என அறிவினால் உணர்வதும், மீண்டும் அப்படி கோபப்படாமல் நடந்து கொள்வது என தீர்மானித்துக்கொள்வது கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ள துணை செய்யும் எனலாம்.

கோபம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சுவையான உணவுகளை  உட்கொவது அல்லது பானங்களை அருந்துவதும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள துணை செய்யும் மற்றுமொரு வழிமுறையாகும். இத்தகைய பல்வகை வழிமுறைகளைக் கைக்கொண்டு கோபம் தவிர்த்து வாழ்வது வாழ்க்கையில் பல வெற்றிகளை கொண்டுதருவது கண்கூடு. எனவே கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்பவனே வெற்றி வீரன் எனச் சொன்னது பொய்யா மொழியல்லவா.................?

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...