Saturday, January 22, 2022

அரசியல் முன்மாதிரி

அரசியல் முன்மாதிரி என்றவுடன் எல்லோரது உள்ளமும் திரும்புவது உமர் (றழி) அவர்களை நாடித்தான் இருக்கும். ஏதோ ஒரு காரணத்தால் அவர் உலகப்புகழ் பெற்றுவிட்டார். இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதித் தூதராக இல்லாதிருந்தால், உமர் (றழி) அவர்களை சிலர் இறை தூதர் அந்தஸ்துக்கு உயர்த்திவிடுவர் என்றால் மிகையாகாது. ஆனால் உமர் (றழி) அவர்களின் அரசியல் முன்மாதிரியை நாம் எனோ அல்குர்'ஆனிலும் இறைதூதர் பொன்மொழியிலும் காணக் கிடைக்கவில்லையே எனும் கேள்வி முட்டாள்தனமாகத் தோன்றினாலும் அதில் சிந்திக்கத்தக்க பல அம்சங்களும் உண்டு எனலாம். உமர் (றழி) அவர்களின் அரசியல் முன்மாதிரி ஒப்புவமையற்றதாகக் கருதப்பட்டாலும், அவற்றை அவரைத் தவிற வேறு யாராலும் பின்பற்ற முடியாமல் இருப்பது குறையா, நிறையா என்பது சிந்திக்கத்தக்கது எனச் சொல்வதை விடவும் பட்டிமன்றமொன்றில் விவாதிக்கத்தக்கது என்பதே சாலப் பொருத்தமாகும்.

அதேவேளை அல்குர்'ஆன் எடுத்தியம்பும் ஒரு அரசியல் முன்மாதிரி இருக்கிறது. இன்றய காலகட்டத்தில் யாரும் ஆராய்ந்து எடுத்து நடக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் அதிலே பொதிந்திருக்கிகின்றன. அதனால்தானே அந்த அரசியல் முன்மாதிரியை அல்குர்'ஆன் எடுத்தியம்புகிறது என்பதை சொல்லவும் வேண்டுமா? அது எந்த முன்மாதிரியாக இருக்கலாம்.

அல்குர்'ஆன் பல்வேறு அம்சங்களை இரத்தினச் சுருக்கமாகவே பேசும் என்பதால், அல்குர்'ஆனில் ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு அம்சத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது, பல்வேறு இடங்களில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களும் ஒன்றுடன் ஓன்று தொடர்பு படுத்தி நோக்கத்தக்கது எனும் அம்சத்தை விளங்கிக் கொள்வது முதற்கண் அவசியமாகும்.

அல்குர்'ஆன் முவைக்கும் அந்த அரசியல் முன்மாதிரியை ஒரு தனி அத்தியாயமாக ஒதுக்கி, பல்வேறு அம்சங்கள் விளாவாரியா அதிலே அதிலே சொல்லியிருப்பது, அந்த அரசியல் முன்மாதிரிக்கு அல்குர்'ஆன் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை எடுத்தியம்புவதாக உள்ளது எனலாம். 

அல்குர்'ஆன் முன்வைக்கும் அந்த அழகிய அரசியல் முன்மாதிரி  யாராக இருக்கும்? அவரே யூஸுப் நபி (அலை) ஆவர்களாவார்.

அல்குர்'ஆனின் வசனங்கள் ஒவ்வொன்றும் ஒரு பெரும் அத்தாட்சி (ஆயத்) எனப் பெயர் சூட்டப்பட்டதிலிருந்தே அந்த வசனங்கள் எத்துணை ஆழமான கருத்துக்களை தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கலாம் என்பதை விளங்கிக் கொள்ளலாம் அல்லவா? ஆனாலும் விரிவு கருதி மிகச்சுருக்கமாகவே அல்குர்'ஆன் எடுத்தியம்பும் அம்சங்கள் இங்கு முன்வைக்கப்படுகின்றன என்பது முதற்கண் கருத்திற்கொள்ளத்தக்கதாகும். 

தனது வாழ்க்கையில் அல்லது எதிர்காலத்தில் அரசியல் பிரவேசம் செய்கின்றவனிடத்தில் அரசியற் பயிற்சி அவசியம் என்பதை இந்த அரசியல் முன்மாதிரியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அதன் அடிப்படையிலேயே யூஸுப் (நபி) அவர்கள் ஒரு அரச நிர்வாகியின் வீட்டில் வளர்வதற்கான அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது (பார்க்க 12: 21,22). இவ்வாறாக அரசியல் அம்சங்களில் பயிற்சி பெறுவது மாத்திரமன்றி அதற்குத் தேவையான அறிவையும் அவர் பெற்றுக்கொள்கிறார் (பார்க்க 12:22). இது இன்று நேற்று முன்னேறிய உலகில் நடை பெற்றதொன்றல்ல, மாறாக மூஸா நபி தோன்றுவதற்கு பல தசாப்தங்களுக்கு முன் நடந்த விடயமாகும் என்பது கவனிக்கத்தக்கதாகும். இப்படியாக, அரசியல் மற்றும் நிர்வாக அறிவு, அரசியற்களப் பிரவேசத்திற்கு அவசியம் என்பதை விளங்கிக்கொள்ளலாம் (மேலும் பார்க்க – 2:247).

ஆடுகளங்களிலே ஆடுவதற்கு மிகவும் கடினமான களம் அரசியல் களமாகும் என முன்னொரு பதிவிலே சுட்டிக்காட்டப்பட்டதற் கிணங்க, அரசியற் களத்தில் எப்போதும் புத்தியோசனையுடனும் முன்னெச்சரிக்கையுடனும் நடத்து கொள்ளவேண்டும் எனும் பயற்சியை வழங்கவே யூஸுப் நபி (அலை) அவர்களின் சிறைப்பிரவேசம் அமைந்தது எனக் கொள்ளலலாம் (பார்க்க 12:23). மனித வாழ்க்கை இத்தகைய பல்வேறு சதி முயற்சிகளை உள்ளடக்கியதே எனும் அடிப்படையிலும், அல்குர்'ஆன் எதையும் சுருக்கமாகவே சொல்லும் எனும் அடிப்படையிலும், யூஸுப் (நபி) அவர்கள் சிறை செல்வதை தவிர்ந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தனவா என்பது எமக்குத் தெரியாத நிலையில், அப்படியொரு நிலைமை எதிர்காலத்தில் நிகழாமல் இருக்கும் பயிற்சியை அந்த சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம் என்பதை மறுக்க முடியாது.

அவ்வாறு சிறை சென்ற யூஸுப் நபியவர்கள் அங்கு இருக்கும்போது, எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை விளக்க இந்த பதிவு இடம் தராது. எனவே சிறையிலிருந்து வெளியே வருவதற்கான சந்தர்ப்பத்தை எப்படிப் பயன்படுத்திக்கொண்டார் என்பதை மாத்திரம் சுருக்கமாக நோக்குவோம்.

சிறையிலிருந்து தன்னை விடுவித்து அரசரிடம் கூட்டிச் செல்ல தூதுவர் வந்த போது "நானாக இருந்தால் உடனே சிறையிலுந்து வெளியேறி இருப்பேன்" என இறை தூதர் முகம் (ஸல்) அவர்களே சொல்லிக்காட்டியிருக்கும் நிலையில்  ((பார்க்க நபி மொழி புஹாரி 3372, முஸ்லிம் 151), அவ்வாறு சிறையை விட்டுச் செல்லாமல் சந்தர்ப்பத்தை சாதமாகப் பயன்படுத்தி, தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் வியூகமானது, எத்துணை தூர நோக்கு கொண்டதாகவும், எவ்வளவு பொறுமையுடன் கையாளப்பட்ட நிலைமை என்பதையும் விளக்கவும் வேண்டுமா? (பார்க்க 12:50-52). இப்படியாக அரசியல் களத்தில் மாத்திர மல்லாது ஏனைய வாழ்க்கை விடயங்களிலும், நம்பிக்கையை கட்டியெழுப்புவதே முக்கியம் எனும் முன்மாதிரியை யூஸுப் (அலை) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். 

அவ்வாறே அரசரிடத்தில் தனக்கு சிறப்பிடம் கிடைத்துவிட்டதை உணர்ந்தபோது, தனது திறமைகளைப்  பயன்படுத்தவும், அதனூடாக தான் வாழும் நாட்டுக்கு சேவை செய்வதற்குமாக, பொறுப்புவாய்ந்த பதவியை கேட்டுப் பெற்றுக்கொண்டமையிலும், அதனை சிறப்பாக மேற்கொண்டமையிலும் சிறந்த முன்னுதாரணங்கள் இருப்பதைக் காணலாம்.

யூஸுப் நபியவர்கள் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இறைத்தூதர் எனபதை முதற்கண் ஞாபகப் படுத்திக்க கொண்டு அவரது வாழ்க்கையிலே மின்னலெனப் பளிச்சிடும் மற்றுமொரு முன்னுதாரணம் என்னவெனில்; தனது நம்பிக்கை சாராத, பிறமத நம்பிக்கையைப் பின்பற்றும் ஒரு அரசரிடம், இன்னும் தெளிவாகச் சொன்னால் சிறுபாண்மையாக வாழும் ஒரு முஸ்லிம் பெரும்பாண்மை சமூகத்தின் அரசவையில் எப்படி அங்கம் வகிக்கலாம், மேலும் அதன் மூலம் தனது, வாழ் விற்கான வசதிகளையும் மத உரிமைகளையும் எவ்வாறு வென்றெடுக்கலாம் என்பதற்கான முன்னுதாரணமாகும் (பார்க்க 12:55). இத்தகைய முன்னுதாரணங்களை அல்குர்'ஆன் ஆணித்தரமாக எடுத்தியம்பியிருப்பது சந்தர்ப்பம் ஏற்படும்போது பின்பற்றுவதற்காகவேயன்றி, கதைகேட்டு இரசிப்பதற்காக மாத்திரமே என வாதிடுபவர், அல்குர்'ஆனில் சொல்லப்பட்டுள்ளவைகள் பின்பற்றத் தகுதியற்றவை என்பதை மறைமுகமாக சொல்லுகின்றனர் என்பது அல்குர்'ஆனை பின்பற்றுவதற்கு அரவமுள்ளவர்களுக்கு அல்லவா விளங்கும்.

 

அவ்வாறே, நபி யூஸுப் அவர்களின் அரசியல் வாழ்க்கையில் பளிச்சிடும் மற்றொரு முன்னுதாரணம்: தான் வாழும் நாட்டின் சட்டதிட்டங்களை எந்தளவு தெரிந்து வைத்திருந்தார், மேலும் அவற்றுக்கு எவ்வளவு மதிப்பளித்தார் என்பதாகும் (பார்க்க 12:76). அதேவேளை அந்த சட்டத்துக்கு முரணாக தனது இளைய சகோதரனை தன்னுடன் சேர்த்துக்கொள்வதற்காக அவர் கையாண்ட தந்திரம் இன்னும் பல அம்சங்களை போதிப்பதாக உள்ளது (பார்க்க 12:70).    

முதலாவதாக அப்படி ஒரு வீண்பழியை சுமத்தி அங்கு வந்த தனது சகோதர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியது மாத்திரமன்றி அவரது மூத்த சகோதரன் அதன்மூலம் சொல்லொணா துன்பத்தை அனுபவிக்க காரணமாகியதை எப்படி நியாயப்படுத்துவது? (பார்க்க 12:78-81). மேலும் அவ்வாறு அவர் செய்த அந்த தந்திரம், அவரது தந்தை யாகூப் நபிக்கும் மற்றும் வீட்டாருக்கும் அதிக துன்பம் கொடுப்பதாக அமைந்தது (ஆனால் தந்தை யாகூப் நபி சந்தர்ப்பத்தை வேறுவிதமாக கையாண்டார் - அதிலும் அதிக படிப்பினைகள் இருந்தாலும் அவை இங்கு விளக்கப்படுவது தவிர்த்துக்கொள்ளப்படுகிறது.) இப்படியான சில தவிர்க்க முடியாத அதேவேளை நேரடியாக இழப்புகளை ஏற்படுத்தாத (மனித உரிமை மீறலாக அமையாத) சில தந்திரங்களை பின்பற்றலாம் எனும் முன்னுதாணரத்தையும் யூஸுப் நபி அவர்களின் வாழ்விலிருந்தும் அவரது சகோதரரான "பெஞ்சமீனின்" நடிப்பிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம் (அவர் அந்த இடத்தில் உணமையைக் கக்கியிருந்தால் தந்திரம் செல்லுபடிக்காமல் போயிருக்குமல்லவா). மேலும் தமது தந்தை யாகூப் நபியின் அறிவுரையின் பேரில் யூஸுப் நபியை கண்டுபிடிக்க வந்த சகோதர்கள் செய்த தந்திரத்தையும் அல்குர்'ஆன் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கதே (பார்க்க 12:88).

இப்படியான தந்திரங்கள் அரசியல் வாழ்வில் கடைப்பிடிக்கத்தக்கன என்பதை மாத்திரமன்றி, தன்பக்கம் எத்துணை நியாயங்கள் இருந்தாலும்,  (அவர் ஒரு நபி எனும் நிலையில்) தனது செயல், தான் வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு இசைவாக அமையாத போது அதை செய்யக்கூடாது என்பதையும், அப்படியான செயல்கள் மூலமாக நாட்டின் அதிகாரிகளுக்கு தர்மசங்கடங்களை ஏற்படுத்தும் விதத்தில் நடக்கக் கூடாது என்பதையும் "அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது சகோதரர் "பென்ஜாமீனை" தன்னுடன் வைத்துக்கொள்ள முயற்சிக்காமை எடுத்துக்காட்டுவதாக உள்ளது எனலாம்.

அவ்வாறே நபி யூஸுப் (அலை) அவர்களின் வாழ்க்கையில் நாம் காணக்கூடிய மற்றொரு அம்சம் நிலைமைகளை சரியாக கணக்குப் போட்டு, அவற்றை செயற்படுத்தும் திறமை பெற்றிருந்தமையாகும். தனது இளைய சகோதரரான "பென்ஜாமீனை" கூட்டிவருமாறு பணித்த போது அவரசரமாக அவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக சிறியளவு உணவுப் பொருட்களையே கொடுத்ததுடன், அவர்கள் பகரமாக கொண்டுவந்த பொருட்களையும் திருப்பிக் கொடுத்திருந்தார். (பார்க்க 12:65) இந்த இடத்திலே தனது அதிகாரத்தை பிரயோகித்து அரசின் பொக்கிஷத்திலிருந்து தனது குடும்பத்தாருக்கு இலவசமாக உணவு கொடுத்திருந்தமையைத் தெரிந்துகொள்ள முடியுமாக இருக்கிறது. அத்ததுடன் தமது சகோதரர்கள் கிரயமாகக் கொடுப்பதற்காக பொருள் தேடினால் அதற்கு காலமெடுக்கும். எனவே தமக்கு திருப்பிக் கொடுக்கப்பட்ட கிரயப் பொருட்களுடன் தமது சகோதரன் "பென்ஜாமீனை கூட்டிக்கொண்டு விரைவாக வந்து சேரவேண்டும் என அவர் போட்ட கணக்கு சிறப்பாக வேலை செய்ததையும் காணலாம்.

இப்படியாக அரசியல்களத்திலே ஆடும்போது, அரசியல் முன்னெடுப்புகளை எப்படி மேற்கொள்வது, அதற்கான விளைவுகள் எவ்வாறு அமையலாம் எனக் கணக்குப்போட்டு, அதன்படி நடப்பதும் அவசியம் எனும் அம்சத்தை தெரிந்து கொள்ளலாம். அவ்வாறில்லாமல் இறைவன் மீது முழுப் பாரத்தையும் போட்டுவிட்டு, கண்மூடித்தனமான முன்னெடுப்புகளில் ஈடுபடுவது சிலபோது அரசியல் தற்கொலையாகவும், இன்னும் சிலபோது தற்கொலையாகவும் அமையும் என்பதே சாலப் பொருத்தமாகும். (இத்தகைய அரசியற் தற்கொலை முயற்சியில் என் எப் ஜீ ஜீ எனும் அரசியல் காட்சி ஒருமுறை ஈடுபட்டது என்பதை அது பற்றிய தெளிவுள்ளவன் என்ற வகையில், மீண்டும் அப்படி ஒரு நிலை உருவாகக் கூடாது எனும் எதிர்ப்பரப்பில் சொல்லிக்கொள்கிறேன்.)

அவ்வாறே எதற்காக யூஸுப் நபி அவர்கள் தனது சகோதரர் பென்ஜாமீனை  தந்திரத்தின் மூலம் ஏன் தடுத்துக்கொள்ளவேண்டும் என்பதும் சிந்திக்கத்தக்கதாகும். அஃதாவது: தனது அடுத்த கட்ட நகர்வுகளை கணக்குப்போடுவதற்கு நம்பகரமான தகவல்கள் அவசியமாகும். அந்த தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு பொருத்தமான வழி பெஞ்சமீன்தான் எனக்கருதியே அவரை தடுத்துக்கொள்ள திட்டம் தீட்டினார் எனலாம். அதன் பயனாக, தனக்கு துரோகமிழைத்த சகோதர்கள் இப்பொழுது திருந்தி விட்டனரா, இல்லையா மற்றும் தனது தந்தையில் உடலாரோக்கியம் அத்துடன் அவர் குருடாவதற்கான காரணம் போன்ற செய்திகளை தெரிந்து கொண்டதற்கிணங்கவே அடுத்த கட்ட திட்டங்களை மேகொண்டார் எனலாம்.  அதில் குறிப்பாக, தன்னை பாலை வனத்திலுள்ள கிணற்றில் போட்ட சகோதர்கள் தனது ஆடையை தந்தையிடம் காண்பித்த விடயம், அதன் மூலம் ஏற்பட்ட கவலை, அதன் காரணமாக அவரது கண்கள் பார்வையிழந்தமை ஆகிய வற்றை தெரிந்து கொண்டதன் பயனாக, அதற்கு மாற்றுபகரமாக தனது புதிய ஆடையை அவரது முகத்தில் வீசி, பார்வையை மீண்டும் வரவழைக்கும் சிகிச்சை முறையை (theraphy ஐ) மேற்கொண்டார் எனலாம். (பார்க்க 12:93).

அவ்வாறே யாகூப் நபி அவர்கள்களும் தனது இரண்டாம் மகனையும் பறிகொடுத்த நிலையில், மனம் குலைந்து நிலைதடுமாறாமல், நடந்தவைகளை சீர்தூக்கிப்பார்த்து, தனது இரண்டாம் மகன் தடுக்கப்பட்டதற்கும், யூஸுப் நபியின் இருப்புக்கும் சம்பந்தமிருக்கலாம் என்பதை கணக்குப்போட்டு, இருவரையும் தேடிக்கண்டுபிடிக்க மீண்டும் தனது புதல்வர்களை அனுப்புகிறார் (பார்க்க 12:87). அவ்வாறு சென்ற புதல்வர்கள், நலவாக அல்லது கெடுதியாக அஃதாவது பலாத்காரமாவது இருவரையும் கடத்திக்கொண்டு தந்தையிடம் கூட்டிச் செல்லும் தீர்மானத்துடனேயே போனார்கள் எனக் கூறுவதும் பிழையாகாது.  ஆனால் நிலைமை பின்னர் வேறுவிதமாக மரியாதைக்கு காணலாம். அதாவது, தமது சகோதரர் இருவரையும் தந்தையிடம் கூட்டிக் கொண்டு வருவதற்குப் பகரமாக, தந்தையுட்பட அனைவரையும் யூஸுப்  (நபி) தன்னிடம் அழைத்துக் கொண்டார் (பார்க்க 12:93). (பொதுவாக மனிதனது, திட்டமும், இறை திட்டமும் இப்படியாகவே அமைகிறது என்பதை அல்குர்'ஆனில் பரவலாகக் காணலாம்.)     

அதே அமைப்பிலேயே மற்றொரு நிகழ்வையும் காணக்கூடியதாக உள்ளது. தன்னிடம் உணவுப் பொருட்களை பெற்றுச் சென்ற சகோதரர்கள் மீண்டும் அவரசரா, அவசரமாக வருவதற்கு எதோ ஒரு காரணம் இருக்கலாம் என்பதை உணர்ந்து கொண்டு, திரும்பி வந்த சகோதரரிடத்தில் உண்மையை போட்டு உடைக்கிறார் (பார்க்க 12:89). இல்லாவிட்டால் அப்படியொரு கேள்வியை கேட்கும் அவசியம் இல்லை அல்லவா? அந்த கேள்வியை கேட்ட உடனேயே, அங்கு வந்த சகோதரர்கள் “நீர் யூஸுப் ஆகத்தான் இருக்கவேண்டும்” என தமது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர். இப்படியாக யூஸுப் நபியவர்கள், நிலைமை மோசமாகி, எதிர்பாராத நிகழ்வுகள் நடக்குமுன்னரே, அவைகளை சரியாக கணக்குப்போட்டு, முன் யோசனையுடன் நடந்து கொடுமையையும் காணலாம்.

யூஸுப் நபியிடத்தில் காணக்கூடிய அடுத்த அரசியல் முன்மாதிரி மன்னிக்கும் குணம் எனலாம். தனது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் விதத்தில் நடந்துகொண்ட தமது சகோதர்களை மன்னித்து, அவர்களுக்கு சிறந்த வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தார் (பார்க்க 12:93). இதே விடயத்தை பிரதிபலிப்பதாக மக்கா வெற்றியின்போது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தம்மை எதிர்த்த தமது குடும்பத்தினரான குறைஷிகளுடன் நடந்து கொண்டமையைக் காணலாம். இப்படியாக ஒரு அரசியல் முன்னெடுப்பில் வெற்றிகொண்டு பலம் பெறும்போது, தமக்கு துன்பம் விளைவித்தவர்களை பழிவாங்காது நடந்து கொள்ளும் அரசியல் முன்மாதிரியை யூஸுப் நபி அவர்களின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்ளலாம்.   

கடைசியாக யூஸுப் நபி அவர்களின் வாழ்வில் காணக்கூடிய அரசியல் முன்மாதிரியாக, இறைவனுடன் கொண்டிருந்த தொடர்பைக் கூறலாம்.  அத்துணை, ஆட்சி, பலம், வளம் எல்லாம் பெற்றிருந்த நிலையில் (பார்க்க 12:101) அவர் செய்த பிரார்த்தனை இதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 

"எனதிறைவா..! எனக்கு நீ ஆட்சி அதிகாரத்தை தந்தருளினாய், மேலும் நீ கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் கலையையும் எனக்கு கற்றுத்தந்தாய், நீதான் வானங்கள் பூமியை, முன்னுதாரணமின்றி படைத்தவனாவாய், நீதான் இம்மையிலும் மறுமையிலும் எனது பொறுப்பாளனாவாய், என்னை முஸ்லிமாக மரணிக்கச் செய்வாயாக, அத்தன் மூலம் நல்லடியார்கள் (ஸாலிஹீன்களுடன்) என்னை சேர்த்துவிடுவாயாக....!"

என சுருக்கமாக எடுத்துச் சொல்லும் அல்குர்'ஆன் வசங்களின் கருத்துக்கள் மிக ஆழமானவையாகும். அவைகளை சுருக்கமாகச் சொல்வது பொருத்தமாகாது ஆகையால், அவற்றின் விளக்கம் இங்கு விரிவு கருதி தவிர்த்துக்கொள்ளப்படுகிறது. இந்த பிரார்த்தனையூடாக, நபி யூஸுப் (அலை) அவர்கள் ஆட்சியாளனாக இருக்கின்ற நிலையில் இறைவனுடன் வைத்திருந்த தொடர்பை தெரிந்து கொள்ளலாம்.   

இச்சந்தர்ப்பத்தில் அன்னமய கால இஸ்லாமிய அரசியலில் காணக்கூடிய ஒரு யதார்த்தத்தை பகிர்ந்து கொள்வதும்  சாலப் பொருத்தமாகும்.

1798 களில் நெப்போலியன் எகிப்தை நோக்கி படையெடுத்த போது, கடல் மார்க்கமாக வந்திறங்கிய படை எந்தவித எதிர்ப்பையும் சந்திக்காமலும், எந்த இழப்பும் இல்லாமலும் எலெக்ஸ்சாந்தரியா நகரை கைப்பற்றிக்கொண்டது.  இந்த படையெடுப்பு முஸ்லீம்கள் இஸ்பெயினை நோக்கி படையெடுத்த நிகழ்வின் வரலாற்று சுழற்சியாகத் தென்பட்டாலும் கூட, கடல் மார்க்கமாக அவ்வளவு பெரிய படை ஒரு வியாபாரத் துறைமுகத்தில் வந்திறங்கும்வரை மக்கள் தூங்கிக் கொண்டிருந்தனரா எனும் கேள்வியை எழுப்புவதாக உள்ளது எனலாம்.

இப்படியாக அன்று தொட்டு அல்லது அதற்கு முன்பிருந்தே முஸ்லீம் சமூகம், பிரதி நடவடிக்கையில் ஈடுபடுவதாக (reaction) அல்லாமல் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டமையை காண முடியாது. இந்நிலை அரசியலுக்கு பொருந்திவராததாகும். இஸ்லாமிய வரலாற்றை எடுத்து நோக்கினால் "பத்ர்" யூத்தம் ஒரு முன்னெச்சரிக்கை யுத்தமாகவே நடை பெற்றமையைக் காணலாம். அத்தகைய தொன்றாகவே நபி (ஸல்) அவர்கள் "ரோம்" சாம்ராஜ்யத்தை நோக்கி அனுப்ப தயார் செய்த படையையும் எடுத்துக் கொள்ளலாம். இப்படியாக அரசியல் களத்தில் முன்னெச்சரிக்கை செயற்பாடுகளும், நிலைமைகளை கணக்குப்போட்டு வியூகம் வகுப்பதும் அவசியம் எனும் அம்சம் நீண்ட விளக்கங்கள் கொண்டதாக இருந்தாலும் அதுபற்றி அவசியம் கருதி, சுருக்கமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இப்படியாக திருக்குர்'ஆன் ஒரு முழுமையான வேதநூல் எனும் அடிப்படையில் யூஸுப் நபி அவர்களின் அரசியல் முன்மாதிரிகள் ஏனைய அல்குர்'ஆன் வசங்களுடன் ஒத்துச் செல்லக்கூடியன என்பதையும், திருக்குர்'ஆனில் ஓரிடத்தில் சொல்லப்பட்ட அம்சம் தெளிவில்லாத விடத்து, மற்றோர் இடத்த்தில் அதற்கான தெளிவைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் அரசியற்களப்பிரவேசத்தை நாடுகின்றவர்கள் தெரிந்து வைத்திருப்பது அத்தியாவசியமாகும் எனலாம்.

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...