Saturday, January 22, 2022

 வாழ்க்கையில் பொறுமை

 இமயமலைச் சாரலில் பல ஆண்டு காலம் தவமிருந்த ஒரு மகான், ஒரு நாள் நாட்டுப் புறமாக கடந்து சென்றார். அவரைக் கண்ட மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு ஏதாவது மருந்து கூறுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு அந்த மகான் "சங்குமக்காய்" சாப்பிடுங்கள் என்று சொல்லிச் சென்றார். அதைக் கேட்ட மக்கள் சங்குமக்காய் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெரும் என மகான் சொன்னார் எனச் சொல்ல ஆரம்பித்து, பின்னர் மகானை மறந்து "சங்குமக்காய் சாப்பிட்டால் உடல் ஆரோக்க்கியம் பெரும்" எனக் கூற ஆரம்பித்தனர். சுகாதாரத்தை பற்றியும் உடலாரோக்கியம் பற்றியும் பேசுகின்ற யாரும் சங்குமக்காயை சொல்ல மறப்பதில்லை.

 

இந்நிலையில் ஒரு நாள், தனது தாயார் சுகயீன முற்றிருப்பதை அறிந்த ஒரு இளைஞன் தனது தாயின் நோய்க்காக மருந்து தேடித் சென்றான். அப்பொழுது அவனுக்கு சங்குமக்காய் பற்றி அறியக் கிடைத்தது. எல்லா இடங்ககளிலும் சங்குமக்காயைத் தேடி அலுத்துப்போன அந்த இளைஞன் ஒரு கோயில் அடிவாரத்தில் மிகுந்த கவலையுடன் அமர்ந்திருந்தான். அவனைக் கண்ட வயது முதிந்த ஒரு கிழவர் அவனின் கவலையின் காரணத்தைக் கேட்டார். அதைக் கேட்டறிந்துகொண்ட அந்த மனிதர், இன்ன இடத்தில் தவமிருக்கும் இன்ன மனிதர்தான் அதைச் சொன்னார். அவரிடம் போய் தெரிந்து கொள்ளலாம் என அறிவுரை கூறினார். அதைக்கேட்டு மகிழ்ந்த அந்த இளைஞன் தன்னால் சேர்க்க முடியுமான பல்வேறு பழவகைகளைச் சேகரித்துக்கொண்டு அந்த மகானைக் காணப் புறப்பட்டான்.

 

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அந்த மகான் தவமிருக்கும் இடத்தை கண்டறிந்து கொண்ட அந்த இளைஞன், மிகுந்த பணிவுடன் தான் வந்த காரணத்தைக் கூறினான். அவனின் தேவையையும், தாய் மீது கொண்ட அன்பையும் புரிந்து கொண்ட அந்த மகான், தனது தவத்தைக் கலைக்கமலேயே அவன் கொண்டுவந்த பழங்களைத் தொட்டுப்பார்த்து, அதிலிருந்த மாங்காயை எடுத்து அவன் கையில் கொடுத்தார். அப்போது அந்த இளைஞனின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?

 

பொறுமையைப்பற்றி சொல்லப்படும் விளக்கங்களும், அறிவுரைகளும் இப்படித்தான் அமைந்திருக்கிறது என்றால் மிகையாகாது. எந்த சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்வது பொறுமையாக அமையும் என்பதை தெளிவுபடுத்தாமல், பொறுமையைப் பற்றியும் அதன் பிரிவுகள் பற்றியும், அதன் சிறப்பு பற்றியும் பக்கம் பக்கமாகவும், மணித்தியாலங்களாகவும் கேற்கக் கூடியதும் வாசிக்கக்கூடியதுமான எத்தனையோ விளக்கங்கள் மலிந்து கிடக்கின்றன. அவற்றிலிருந்து பொறுமையைக் கற்றுக்கொண்டு தனது வாழ்க்கையில் கடைப்பிடித்தவர்கள் எத்தனைபேர் என்பதை அவரவர் சொன்னால்தான் தெரியுமல்லவா? அதிலும் குறிப்பாக பொறுமைக்கு உதாரணமாக கழுதையையும், மழையில் நனையும் எருமையையும் கூறுவது குழப்பத்தை இன்னும் சிக்கலாக்கி விட்டுள்ளது என்றால் மிகையாகாது. 

 

இந்நிலையில், குறிப்பாக தற்கால சூழ்நிலையில் பொறுமையைப்பற்றி சரியாகத்தெரிந்து கொள்ளும் அவசியம் உள்ளதல்லவா!

 

பொறுமைக்கு சொல்லக்கூடிய சிறந்த உதாரங்களில் ஒன்று கழுகு அல்லது "பருந்து" ஆகும். கழுகு என்பது தமிழில் வேறு பல அம்சங்களுக்கு உதாரணப்பொருளாக அமைந்துள்ளதால் "பருந்து" எனும் சொல்லை தெரிவு செய்துகொள்வோம். அதை பறவைகளின் அரசனாகக் கருதுவதுண்டு. அதற்கமையவே அதனது மதி நுட்பமும் திறமைகளும், விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கதாகும்.  . 

 

அதன் சிறப்பியல்புகளில் ஓன்றுதான், காற்று கடுமையாக வீச ஆரம்பித்தால் ஏனைய பறவைகளைப்போல் ஒதுங்கி ஒழித்துக்கொள்ளாமையாகும். தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி முன்னேற வேண்டும் எனத் தமிழில் சொல்லப்படுவது போல், எதிர்த்து வீசும் காற்றை சாதகமாகப் பயன்படுத்தி  சிறகடிக்காமலேயே உயர, உயர பறந்து செல்லும் திறமை அதனிடம் இருக்கிறது.

 

அந்த காற்றுடன் சேர்ந்து மழை பொழிய ஆரம்பிக்கும்போதுதான் அதனது பொறுமை வெளிப்படுகிறது. பொதுவாக மழையை தாங்கிக் கொள்ளும் சக்தி பறவைகளுக்கு கிடையாது. எனவே மழை வருமுன்னரேயே பறவைகள் நனையாத புகலிடத்தை நாடிச் சென்று ஒழித்துக்கொள்ளும் அல்லது தனது இறக்கைகளால் தன்னை மூடிக்கொண்டு ஒதுங்கி இருக்கும். பருந்திடம் அப்படியொரு பழக்கம் கிடையாது. 

 

மழைச்சூழ்நிலை அதை பாதித்தாலும் கூட, அதனை பொறுத்துக்கொள்ளும் குணம் அதனிடம் உண்டு. அதேவேளை அந்த  மழை எங்கிருந்து வருகிறது என்றும் அதற்குத் தெரியும். எனவே அந்த மழை வரும் இடத்தை உயரப் பறந்து கடந்து விடுவது என தனது இலக்கை வரையறுத்துக் கொள்ளும். ஆனால் அந்த இலக்கை அடையும்வரை கொஞ்சம் நனைய வேண்டி இருக்கும். அதையும் பொறுத்துக்கொள்ளும். அந்த இலக்கை அடையும் வரை கொஞ்சம் கஷ்டப் படவேண்டும். அவ்வாறு கஷ்டப்படுவதை ஒரு பொருட்டாகக் கருதாது. அதற்காக வருந்தாது. இன்னும் சரியாகச் சொன்னால்  அந்த கஷ்டத்தைச் சொல்லிப்புளம்பி கண்ணீர் சிந்தாது. மாறாக உள்ளம் உருக்கைப்போல் கடினமாக மாறியிருக்கும். சிரமங்களை முகங்கொள்வது எனும் துணிச்சல் அதனிடம் இருக்கும். அந்த துணிச்சலுடன் தனது உயர்ந்த இலக்கை நோக்கி அவசரப்படாமல் பறத்தல் பயணத்தை தொடரும். எதிர்த்து வீசுகின்ற காற்றை சாதகமாகப் பயன் படுத்தி, மேகங்களைத் தாண்டி உயரப் பறந்து விடும். அதன் பின்னர் பூமியிடம் உத்தரவு பெற்றால் மாத்திரமே மழையினால் அதை நனைக்க முடியும் அல்லவா. இந்நிலையில் பருந்து தனது பயணத்தை உல்லாசமாகத் தொடரும்.

 

மனித வாழ்க்கையில் பொறுமை இப்படித்தான் கடைப்பிடிக்கப்படவேண்டும். வாழ்க்கை என்பது மழையும், புயலும்நிறைந்தது என்பது கனவிலும் மறுக்க முடியாத அம்சமாகும். அதைச் சான்று பகரும் திருக்குர்'ஆன் வசனங்களும் நபி மொழிகளும் ஏராளமாகும். அவைகள் சுட்டிக்காட்டப்படுவது விரிவு கருதி தவிர்த்துக் கொள்ளப்படுகிறது (9:126, 47:31, 67:2, 90:4). எனவே பிரச்சினையின்றி வாழ்வது எனும் எண்ணத்தை முதற்கண் உள்ளத்திலிருந்து அகற்றிக்கொள்வது பொறுமையின் அடித்தளம் எனலாம். அதற்கமைய எப்பொழுதும் பிரச்சினைக்கு முகங்கொடுக்க தயாராக இருப்பது அடுத்த கட்டம் எனலாம். அந்தத் தயார் நிலையுடன் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்வதும் அதற்கமைய தன்னை வலிமைப்படுத்திக்கொள்வதும் அதன் ஒரு கட்டம் எனலாம். அத்துடன் பிரச்சினையிலிருந்து விடுபடும் இலக்கை தெளிவாக வரையறுத்துக்கொள்வதும் அவசியமாகும். அதற்கமைய அந்த இலக்கை நோக்கி பயணத்தை தொடர வேண்டும். அவ்வாறு பயணிக்கும் சந்தர்ப்பத்தில் ஏற்படும் பாதிப்புகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும். அந்த பாதிப்புகளை தவிர்ந்து கொள்வதற்கு அல்லது அதனால் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கு அவசரப்பட்டு தன்னிடமிருக்கின்ற சக்தியையும் வளங்களையும் பயன்படுத்தாமல், தனது இலக்கை நோக்கி அமைதியாக பயணத்தைத் தொடர வேண்டும். அத்துடன் அந்த பிரச்சினைகளினால் உள்ளம் சோர்ந்துவிடாமலும் சஞ்சலப்படாமலும் உற்சாகமிழக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படியாக தனது பயணத்தை தொடர்வதையே பொறுமை எனலாம்.

 

மேற்சொன்ன விடயங்கள் சொல்வதற்கு இலகுவாகத்தான் இருக்கும். ஆனால் தலைவலியின் வேதனை அதனை அனுபவிக்கின்றவரனுக்கு அல்லவா தெரியும் எனும் கேள்வி எழுவது சாதாரணமே. அதற்குரிய பரிகாரமாகத்தான் அல்குர்'ஆனிலும் நபி மொழியிலும் சொல்லப்பட்ட பல்வேறு அம்சங்கள் அமைந்திருக்கின்றன.

 

"இறைவா எங்கள் மீது பொறுமையை வெள்ளமென மடை திறந்துவிடுவாயாக" (2:250, 7:126) எனும் பிரார்த்தனை, பிரச்சினையினால் தனது "ஈமான்" பறிபோய் விடக்கூடாது எனும் நிலையில் ஓதக்கூடிய பிரார்த்தனையாக அல்குர்'ஆன் கற்றுத்த்தருகிறது.

 

"இறைவா எங்களை காபிர்களின் கைகளால் வேதனைப் படுவதை விட்டும் பாதுகாப்பாயாக" (60:5, 10:85) எனும் பிரார்த்தனைகள் பிரச்சினையில் அகப்பட்டு அதிகம் துன்பறுவதை விட்டும் பாதுகாப்புத் தேடுவதாக அமைந்துள்ளது.

 

பிரச்சினைக்கு முகங்கொடுக்கும்போது உள்ளத்தைத் தேற்றிக்கொள்ளத்  துணை செய்யக்கூடியனவாக, அல்குர்'ஆனின் 93 மற்றும் 94ம் அத்தியாயங்கள் அமைந்துள்ளன.

 

"உங்களுக்கு வலிக்கிறது என்றால், உங்களைப்போலவே அவர்களுக்கும் வலிக்கும்" (4:104) எனும் வசனம் பிரச்சினையினால் ஏற்பட்ட வலியின் போது உள்ளத்துக்கு ஆறுதல் கூறி, உற்சாகமூட்டுவதாக அமைந்துள்ளது.

 

"அவர்கள் சதித்திட்டம் தீட்டுகிறார்கள், (அந்த திட்டத்தின் மீதே) நானும் சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறேன், அவர்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்துவிடுங்கள்." (85:16,17)

மற்றும் "அவர்கள் சதித்திட்டம் தீட்டுகிறார்கள், அல்லாஹ்வும் சதித்திட்டம் தீட்டுகிறான், சதித்திட்டம் தீட்டுவதில் அல்லாஹ்வே சிறந்தவனாவான் (8:30) எனும் வசனங்கள் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் நிலையில் இறைவன் மீது நம்பிக்கையை வலுப்படுத்த துணைசெய்வனவாகும்.

 

அவ்வாறே, அல்குர்'ஆணின் 20ம் மற்றும் 12ம் அத்தியாயங்களை ஓதுவதும் பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்ட உள்ளத்தை தேற்றி, இறைவனின் உதவி விரைவில் வரும் எனும் நம்பிக்கையூட்டுவனவாகும்.

 

அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது சோதனைகள் ஏற்பட்டால் "நாமெல்லாம் இறைவனுக்கு சொந்தமானவர்கள், அவனிடமே மீண்டும் செல்வோம்" (2:156) எனும் ஒதாலும் உள்ளத்தை தேற்றிக்கொள்ள மாத்திரமன்றி இறை அருளையும் பெற்றுத்தருவதாகும் (பார்க்க 2:157).

 

அவ்வாறே அல்குர்'ஆணின் 65:3ம் வசனத்திற்கிணங்க தனது பிரச்சனைகளை தீர்த்துத்தரும் பொறுப்பை இறைவனிடம் பாரம் சாட்டி விடுவதும் பிரச்சனைகளை துணிவுடன் முகண்கொடுக்கத் துணை செய்வதாகும். அதன் செயல்வடிவமாகவே "ஹபியல்லாஹு வனிஃமல் வகீல்,,,,,," எனும் ஓதல் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

 

மேலும் "எந்தவொரு சக்தியும், வல்லமையும் மிகவுயர்ந்த, மகத்தான அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவதேயாகும். எனும் ஒதாலும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும்போது, சோர்வைப் போக்கி புதுத்தெம்பு தரக்கூடியதாகும் (லா ஹவ்ல வலா குவ்வத்த,,,,,).  

 

அவ்வாறே, ஸலவாத் ஓதுவதும் பிரச்சினைகளின்போது உள்ளத்துக்கு ஆறுதல் தரக்கூடியதாகும். மேலும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களை புகழ்ந்து பாடுவதும் அவ்வாறான தொன்றாக அமையும். அதனடிப்படையிலேயே "கஸீததுள்" புர்தா என்பது அமைந்திருக்கிறது எனும் அம்சம் சந்தர்ப்பம் கருதி சுட்டிக்காட்டப்படுகிறது.

 

இத்தகைய பல்வேறு ஓதல்கள் (அவ்ராதுகள்), மற்றும் பிரார்த்தனைகளுள் (து'ஆக்களுள்) “இறைவா துக்கத்தை விட்டும், மனக்கவலைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்,,, (புஹாரி 6363) எனும் பிரார்த்தனை முக்கியமானதாகும். இந்தப் பிரார்த்தனையில் “பலயீனம்” மற்றும் சோம்பேறித்தம் எனும் இரண்டு அம்சங்களும் சேர்ந்திருப்பது தனது பயணத்தை தொடர்வதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளமை சிலாகிக்கத்தக்கதாகும்.  

 

மேற்சொல்லப்பட்டன போன்ற அம்சங்கள் தனது இலக்கை அடைந்து கொள்ளும் வரை பொறுமையாக பயணத்தைக் தொடர துணை செய்வனவாகும். (அவைகளுக்கான விளக்கமும், அவற்றின்  தாத்பரியங்களும் விரிவுகருதி விளக்கப்படுவது தவிர்த்துக்கொள்ளப்படடுள்ளது என்பதைக் கவனிக்க - முன்னைய பதிவுகளை பார்க்க).

 

எனவே பொறுமை என்பது, கழுதை போல் சுமையைத் தாங்கிக்கொண்டு, யாராவது அதை இறக்கிவிடும்வரை காத்திருப்பதல்ல மாறாக, கழுகைப்போல் இலக்கை வரையறுத்துக்கொண்டு வேகமாக முன்னேறும் அதேவேளை, எதிர்வருகின்ற கஷ்டங்களை சகித்துக்கொண்டு நிதானம்தவறாமல் பயணத்தைத் தொடர்வதே பொறுமை எனலாம். அதற்குத் துணைசெய்யும் அம்சங்களே அல்குர்'ஆனிலும் நபி மொழியிலும் சொல்லப்பட்டுள்ள அம்சங்களாகும்.

 

·          உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன +96597992989.

 

http://quran.ksu.edu.sa/tafseer/tabary/sura7-aya126.html

 

https://quran.ksu.edu.sa/tafseer/tabary/sura2-aya250.html

 

http://quran.ksu.edu.sa/tafseer/katheer/sura10-aya85.html

 

https://quran.ksu.edu.sa/tafseer/tabary/sura60-aya5.html

 

http://quran.ksu.edu.sa/tafseer/katheer/sura94-aya1.html

 

http://quran.ksu.edu.sa/tafseer/katheer/sura93-aya1.html

 

https://quran.ksu.edu.sa/tafseer/tabary/sura4-aya104.html

 

http://quran.ksu.edu.sa/tafseer/qortobi/sura86-aya15.html

 

http://quran.ksu.edu.sa/tafseer/katheer/sura8-aya30.html

 

http://quran.ksu.edu.sa/tafseer/katheer/sura2-aya156.html

 

https://www.islamweb.net/ar/article/224086/%D8%A3%D8%B9%D9%88%D8%B0-%D8%A8%D9%83-%D9%85%D9%86-%D8%A7%D9%84%D9%87%D9%85-%D9%88%D8%A7%D9%84%D8%AD%D8%B2%D9%86

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...