பயிர்_செய்ய
தனது பயிர்களுக்கு தினமும்
நீர்ப்பாய்ச்சினான். அதைச் சுற்றிவர வேலி வெய்தான். இரவில் விழித்திருந்து விலங்குகள்
அதை அழிந்துவிடாமல் பாதுகாத்தான். இவ்வாறு பல மாதங்கள் கஷ்டப்பட்டான். ஆனால் அவன் எதிர்ப்பார்த்தது
போல் பயிர்கள் முளைத்து பலன் தரவில்லை. சில பயிர்கள் முளைத்தன அனால் வளரவில்லை. இன்னு சில முளைக்கவேயில்லை. இதனால் கவலையுற்ற
அவன், தனது ஆசிரியரைக் கண்டு அதுபற்றி முறைப்பட்டான்.
அப்பொழுதுதான் அவன் செய்த தவறு என்னவென்பது அவனுக்கு தெளிவுபட்டது.
மனித சமூகமும் அவ்வாறுதான். அதிலே விதைக்கப்பட்ட எந்தவொரு சிந்தனையையும் முளைத்து
சிறப்பாக வளர்ந்து பயன்தரவேண்டுமாக இருந்தால் அந்த சமூகம் விழுமியங்கள் எனும் வளம்
மிக்கதாக இருக்க வேண்டும். எவ்வளவு சிறந்த சிந்தனையும், சித்தாந்தமும் அத்தகைய விழுமியங்கள் நிறம்பெப்பெற்ற சமூகத்திலேயே பயனளிப்பனவாகும்.
உமர் (றழி) அவர்கள் வரலாற்றில் தோன்றிய மிகச் சிறந்த ஆட்சியாளராக அமைவதற்கு அவர்
ஆண்ட மக்களும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
அஃதாவது முஹம்மத் (ஸல்) அவர்களின் மறைவத் தொடர்ந்து 2 வருடங்களின் பின் அவர் ஆட்சி
செய்ய ஆரம்பித்தமை சுருக்கமாக சுட்டிக்காட்டப்படுகிறது. அவ்வாறே, 2ம் உலகமாகா யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட “யப்பான்” மற்றும், “ஜெர்மனி” ஆகிய நாடுகள் மீண்டும் வளர்ச்சியுற்று தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணம்
அந்நாட்டு மக்களின் பங்களிப்பாகும் என்பதை
யாராலும் மறுக்க முடியாது.
இப்படியாக, எவ்வாறு பயிர் வளர்ந்து பயன்தர வளமுள்ள நிலம் அவசியமோ,
அதுபோல் எந்தவொரு அரசியல், பொருளாதார, சிந்தனையும், சித்தாந்தமும் வளர்ந்து பலன் தருவதற்கு விழுமியங்கள் நிரம்பப் பெற்ற சமூகம்
அவசியமாகும். அதற்கிணங்க சமூகத்தில் தத்தமது சிறந்த சிந்தனைகளை விதைத்து பலனை எதிர்ப்பார்க்கும்
யாரும் அந்த சமூகத்தில் எத்தகைய விழுமியங்களின் பற்றாக்குறை நிலவுகிறது என்பதை ஆய்ந்தறிந்து,
அவைகளை சமூகத்தில் உண்டாக்க வழிவகை செய்வதும் சமூகத்தை சீர்த்திருத்தும் பணியில் முக்கிய
பங்கு வகிக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
சமூகத்தில் விழுமியங்களை உண்டாக்கும்
பணியில் முதற்கண் கருத்தில்கொள்ளத்தக்க அம்சம் நேரத்தின் பற்றாக்குறையாகும். தொலைத்தொடர்பு
சாதனங்களும், பொழுதுபோக்கு வசதிகளும் ஏனைய தொழில்நுட்ப வசதிகளும்
விருத்தியுற் றிருக்கின்ற இக்காலத்தில், பொருளாதார சிக்கல்களும் பல்கிப் பெருகியிருப்பதானது, மக்களின் காலநேரத்தை மாத்திரமன்றி வளங்களைக்கூட கொள்ளை கொண்டுவிடுவதாக அமைந்திருப்பது
யாரும் சிந்திக்கத்தக்க முக்கிய விடயமாகும். இந்நிலையில், இருக்கின்ற சொற்ப காலத்திற்குள்
ஏகப்பட்ட அம்சங்கள் ஒரே காலத்தில் போதிக்கப்படுமாயின், அவைகளில் எதையுமே முறையாக விளங்கிக்கொள்ள
முடியாமல் போய், தனது உள்ளத்துக்கு எது சரியெனத் தென்படுகிறதோ அதை பின்பற்றும் நிலை
உருவாகும். அதன்படி மக்கள் முக்கியத்துவ மற்றவைகளை கண்டிப்பாக பின்பற்றி,
முக்கிய அம்சங்களை புறக்கணித்துவிடும் நிலை உருவாவது தவிர்க்க முடியாததாகும். இந் நிலைக்கு சிறந்த உதாரணமாக, மார்க்கக் கிரியைகளை
அச்சொட்டாக நிறைவேற்றும் பலர் அடுத்தவர்களின் உடல், உயிர், உடைமை போன்ற விடயங்களில் அத்துமீறி நடந்துகொள்ள்ளும் நிலையைக் கூறலாம். "ஒரு
தீங்கு நடைபெறுவதை கண்டால் அதை தனது கைகளால் தடுக்கட்டும்" எனும் நபி மொழியைச் சொல்லியே மார்க்கத்தின் போதனைகளுக்கு மாற்றமாக அடுத்தவர்களின்
உயிர், உடைமை, மற்றும் இறைமையில் கைவைக்கக் கூடிய நிலை தற்காலத்தில் எங்கும்
பரவியிருப்பது இதனாலாகும் எனலாம். (பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் நடந்ததும் இதோபோன்ற
தொன்றேயாகும்). ஆனால் அப்படியொரு பிழை நடைபெறுவதைக் காணக்கூடியவர்கள் யாரும் அதை தடுப்பதற்கு
முன்வருவதில்லை. இந்நிலையை தெளிவான பாதையில் (ஸிராத்துல் முஸ்தாகீமில்) இருந்துகொண்டு
பின்னோக்கிச் செல்வதாகும் எனக் கூறுவது சாலப் பொருந்துமல்லவா? எனவே சமூகப் புனரமைப்புப் பணிகளில் ஈடுபடுகின்ற
யாவரும் ஒன்றிணைந்து முதற்கண் சமூகத்தில் விழுமியங்களை விதைக்கும் பணியில் ஈடுபடுவது
கட்டாயத் தேவை எனலாம்.
அந்த விழுமியங்கள் யாவை என
வரையறுக்கும் விடயத்திலும் பல்வகைப்பட்ட கருத்துக்கள் நிலவுவது இயல்பானதே. எனவே அல்குர்'ஆன் மற்றும் நபிப்போதனைக் கமைய, முக்கிய சில விழுமியங்களை வரையறுத்துக் கொள்ளவது
சாலப் பொருத்தமாகும்.
அத்தகைய விழுமியங்களுள் முதன்மைப்
பெறுவது வாசிப்புப் பழக்கமாகும். இஸ்லாத்திலே வாசிப்பும், அறிவைத்தேடுவதும்
எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை பல புத்தங்களாக எழுதிக்கொண்டு செல்லலாம். அல்லது பல நாற்களாக அது பற்றிப் பேசலாம். ஆனால்
காலத்தின் பற்றாக்குறை நிலவும் நிலையில் அவற்றிழுந்து பயன்பெற யாருக்கும் காலம் அவகாசம்
கொடுக்காதல்லவா? எனவே அது பற்றி சுருக்கமாக சொல்லக்கூடிய விடயமென்னவெனில்: மனித வரலாறு கண்டிராத அற்புத இறைவாக்கான திருக்குர்'ஆன் வேதநூல் “வாசிப்பீராக” எனும் வாசகத்தைக்கொண்டு முதன்முதலாக அருளப்பட்டது எனும் அம்சத்தை விடவும் புத்தியுள்ள மனிதனுக்கு
வேறு உதாரணமும் தேவைப்படுமா? வாசிப்பினால் ஏற்படும் உள மற்றும் அறிவியல் வளர்ச்சி
சொல்லிமுடிக்க முடியாதனவாகும். அதை மீண்டும் வலியுறுத்துவது போல் அல்குர்'ஆனில் எழுதுகோள் மீதும், எழுத்தின்மீதும் சாத்தியமிடப்
பட்டுள்ள துள்ளமை அமைந்துள்ளதைக் காணலாம் (68:1).
அவ்வாறே, அறிவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் கண்டுள்ள நாடுகளில், வாசிப்பு விகிதம் மிக அதிமாக
உள்ளமை பற்றிய தரவுகளும் மேற்சொன்னதை நிரூபிப்பனவாக அமைந்துள்ளன. இப்படியாக வாசிப்பின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொண்டே
போகலாம். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலேயே “பத்ர்” யுத்தத்தில் சிறைபிடிக்கப்பட்ட கைதிகள்,
முஸ்லீம் சிறார்களுக்கு எழுத வாசிக்கக் கற்றுக்கொடுக்க பணிக்கப் பட்டமை எவ்வலவு மகத்தான
சுன்னாவாக மலைபோல் உயர்ந்து நிற்பதானது யார்கண்ணிலும் படாமையின் காரணம் என்னவாகத்தான்
இருக்கலாம்? எனவே, தினப்பத்திரிகை முதல் பல்வேறு வகை அறிவியல்
மற்றும் இலக்கியம் சார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் சமூகத்திலே, விதைக்கப்படவேண்டும்
எனச் சொல்வதை விட, சத்திர சிகிச்சை செய்து
ஆளப் பதியப்படவேண்டும் எனச் சொல்வதே சாலப் பொருத்த மெனலாம்.
அடுத்து சமூகத்தில் விதைக்கப்படவேண்டிய
விழுமியம், “சோம்பல் மறுத்தலாகும்”. ஷைத்தான் ஒரு மனிதனில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளில்
சோம்பேறித்தம் முக்கிய வொன்றாகும். தொழுகை நேரம் வந்தவுடன், எழுந்து பள்ளிக்கு செல்வதற்கு
சோம்பல் உண்டாகக் கூடியவர்களுக்கு இது நன்கு விளங்கு ஒரு யதார்த்தம் எனலாம். அந்த சோம்பலை
முறியடிக்கும் போதனையாக அல்குர்'ஆணின் 94:7ம் வசனம் அமைந்திருப்பது விரிவு கருதி
சுருக்கமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அடுத்து சமூகத்தில் விதைக்கப்படவேண்டிய
முக்கிய விடயம் சுத்தம் பேணலாகும். சிறுநீர் கழித்த பின் சுத்தம் செய்வதில்
அதிக முக்கியத்துவம் காட்டக்கூடிய சிலர், சுற்றுச் சூழலையும், தனது ஆடைகளையும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்துள்துள்ளனரா என்பது கேள்விக்குறியாகும்? இந்த விடயத்தில்
"தரீக்கா" சிந்தனைப்போக்கு கொண்டவர்களின் நடைத்தைகள் பாராட்டத்தக்கதாகும்.
அவர்கள் வெள்ளிக்கிழமை நாளில் குளித்து உடலை சுத்தம் செய்துகொள்வது மாத்திரமன்றி மிகச்
சிறந்த ஆடைகளை அணிந்து கூட்டுத்தொழுகை நிறைவேற்றச் செல்வது சிலாகிக்கத் தக்கதாகும்.
அடுத்த முக்கிய விழுமியம்
தனது கோபத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதாகும் (anger
management) "நானொரு முஸ்லிம் - அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டவன்" எனச் சொல்கின்றவனிடத்தில்
எவ்வாறு கோபம் வரலாம் என்பது யாரும் சிந்திக்கத்தக்கதாகும். அதற்கு மாற்றமாக
"அல்லாஹ்வே மிகப்பெரியவன்" எனக் கோஷமிட்டுக்கொண்டு வெறிபிடித்தவர்களாக பலர்
வெறியாட்டம் போடக்கூடிய நிலை முஸ்லீம் சமூகத்தில் பரவியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவோ,
நியாயப்படுத்தவோ முடியாததாகும். அன்று நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த ஒரு நாபித் தோழர்
தனது மனைவியின் தகாத நடத்தையை கண்கூடாகக் கண்ட பின்னரும் கூட, அதற்கு எதிராக தன்னிச்சையாக எந்த நடவடிக்கையிலும்
ஈடுபடாமலும், அதை வெளிச்சொல்ல முடியாமலும், நபி (ஸல்) அவர்களிடம் போய் முறைப்பட்டுக்கொண்ட சம்பவம் (பார்க்க அல்குர்'ஆன் விளக்கம் 24:6) யாரும் அறிந்ததேயாகும். அதற்கமைய ஒரு தவறு நடைபெறுவது தெரியவரும்
பொழுது, சட்ட ரீதியாக அதை நிரூபிக்க முடியுமாக இருக்கவேண்டும் என்பதும், அந்த தவறுக்கு அல்லாஹ் போதித்துள்ள தண்டனை எது என்பதும் முக்கியத்தும் பெரும் அம்சங்களேயன்றி,
தனது உணர்வுகளும், கோபமும் எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாதன அம்சங்களாகும்
என்பது தெளிவாகிறதல்லவா? ஆனால் இன்று முஸ்லீம் சமூகத்தின் நிலை எப்படி இருக்கிறது.
நோன்பு நோற்க அல்லது பெருநாள் கொண்டாட பிறை தென்பட்டதா இல்லையா எனும் விடயத்துக்கே
பலரும் பலரை கொலை செய்யும் நிலைதான் உள்ளது என்றால் மிகையாகாதல்லவா?
இந்நிலையில், சட்டத்துக்கு தலை சாய்ப்பதும், தனது கோபத்தைக் கட்டுப்படுத்துக்கொள்வதும்
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளும் விடயத்தில் ("தக்வா") முக்கியத்துவம் பெறுகிறது
என்பதும், "அல்லாஹு அக்பர்" எனும் கோஷம் இறை அச்சத்தை
ஏற்படுத்தக்கூடியதாக அமைய வேண்டுமேயல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு வெறியாட்டம் போடும்
நிலை உருவாகக்கூடாது என்பதும் யாரும் கருத்தில்கொள்ளத்தக்க, போதிக்ககப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நாளிலும், ஜும்மா பிரசங்கத்தில்
"இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள் ("தக்வா") எனும் உபதேசத்தில், பிறர் உயிர், உடைமைகளை சேதப்படுத்தும் விடயத்திலும், பிறரது மாணத்தில்
கைவைக்கின்ற விடயத்திலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் என்பதும் உள்ளடங்கியிருக்கிறது
என்பது கவனிக்கத்தக்கதும், விளக்கிச் சொல்லப்பட வேண்டியதுமாகும்.
மேற்சொன்ன அம்சத்துடன் தொடர்புபட்ட
மற்றோரு அம்சம் "பணிவு" ஆகும். "அந்த அருளாளனின் அடியார்கள்
பூமியிலே மிகப் பணிவாகவே நடந்து செல்வார்கள்" (25:63) என திருக்குர்'ஆனில் ஒரு போதனை இருக்கிறது என்பது முஸ்லீம் சமூகத்தில் எத்தனை பேருக்குத்தான்
தெரிந்திருக்குமோ தெரியாது? ஆதலால் பணிவு என்பது முஸ்லீம்களின் அகராதியில் இல்லை
என்று சொல்லுமளவுக்கு அதிகமான முஸ்லீம்களின் நடத்தை அமைந்திருப்பது கண்கூடு. "அல்லாஹ்வே
மிகப்பெரியவன்" (அல்லாஹு அக்பர்) அவனுக்கு மாத்திரமே நாம் அடிபணிவோம் எனும் தோரணையில்,
பணிவை மறந்து செயலாற்றும் நிலை பொதுவாக முஸ்லீம் சமூகத்தில் பரவிக் காணப்படுகிறது.
அதற்கு முக்கிய காரணம் "அல்லாஹு அக்பர்" எனும் அரபு வாசகத்தினை பலரும் பிழையாக
விளங்கிவைத்துள்ளமை என்பது யாவரும் சிந்திக்கத்தக்கதாகும். "அக்பர்" எனும்
சொல் பெரிது எனும் அர்த்தத்தை மேலோட்டமாகக் கொண்டிருந்தாலும் அதில் பெருமை எனும் அர்த்தமும்
பொதிந்துள்ளது என்பது யாரும் நோக்கத்தக்கதாகும். "அக்பர்" எனும் சொல்லுடன்
தொடர்புபட்ட "கிபர்", "கிப்ரியா'உ", "தகப்பார்" ஆகியன பெருமையைக் குறிப்பனவாகும். அதேவேளை "அஃழம், அழீம்" ஆகிய சொற்கள் பெரிது எனும் அர்த்தத்தைக்
கொண்டனவாகும். ஆனால் அவைகளில் பெருமை எனும் அர்த்தம் தொனிப்பதில்லை. எனவே "அல்லாஹு
அக்பர்" எனும் வாசகத்தைச் சொல்லும் போது "தன்னைவிடவும் அல்லாஹ்வே பெருமைக்குரியவன்"
எனும் அர்த்தமும் அதில் அடங்கியிருக்கிறது என்பது யாவரும் தெளிவு பெற்றுக்கொள்ளக்கூடிய
முக்கிய விடயமாகும். (இந்த விடயத்தை தெளிவுபடுத்துவதாக நபி (ஸல்) அவர்களின் ஒரு நடவடிக்கை
அமைந்திருந்தமை "நான்" எனும் பதிவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது). எனவே
"அல்லாஹு அக்பர்" எனும் வாசகம் தன்னிடத்தில் பணிவை வரவழைத்துக்கொள்ள பயன்
படுத்துவதேயன்றி பிறர் மீது அத்துமீறி நடந்து கொள்வதற்கோ அல்லது அல்லாஹ்வின் கட்டளைகளை
மறந்து வெறியாட்டம் போடுவதற்கோ பயன்படுத்தக்கூடிய ஒரு சுலோகமோ, "திக்ரோ"
அல்ல என்பது உரத்துச் சொல்லப்படவேண்டிய தேவை இருக்கிறது என்றால் மிகையாகாது. ஷைத்தான்
அன்று இறைவனுக்கு மாறு செய்வதற்குக் காரணம் பெருமையாகும். அந்த பெருமையை விட்டும் தன்னைக்
காத்துக்கொவதற்கு பயன்படுத்தும் வாசகமே "அல்லாஹு அக்பர்" என்பதாகும் என அது
பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்லலாம். இவ்வளவு பாரதூரமான ஒரு தீய செயலை வெறுமனே ஆடையின்
சில அங்குல நீளமான பகுதிக்குள் வரையறுத்துக்கொண்டு, அதுவே பெருமையின் அடையாளம் என வாது
புரிவோரின் அறியாமையை யாரிடம் போய் சொல்வது. ஒரு உண்மை முஸ்லிமின் நிலையை பற்றி
அல்குர்'ஆன் கூறும் பொழுது "அல்லாஹ்வை அவர்களுக்கு
ஞாபகமூட்டினால் அவர்களின் உள்ளம் நடுநடுக்கிவிடும்" (8:2) எனக் கூறுகிறது. அப்படியென்றால்
"அல்லாஹ்வே மிகப்பெரியவன்” எனக் கூச்சலிட்டுக்கொண்டு வெறியாட்டம் போடும் நிலையை
எப்படி நியாயப்படுத்தலாம் என்பதை யாரும் சிந்திக்க வேண்டாமா? எத்துணை அப்பாவிகளின் கொலைக்கு "அல்லாஹு அக்பர்" எனும் வாசகம் பயன்படுத்தப்படுகிறது
என்பதை பட்டியலிட்டுச் சொல்லவும் வேண்டுமா? இவை அனைத்துக்கும்
காரணம், "அல்லாஹு அக்பர்" எனும் வாசகத்தின் உண்மைக் கருத்தை மக்களுக்கு சொல்லிக்கொடுக்காமையாகும்
எனும் தவறை ஆலிம்கள் எனச் சொல்லிக் கொள்வோர் ஏற்றுக்கொள்ளும் அந்த இறுதித்தீர்ப்பு
நாளை எதிர்பார்த்திருப்போம்,,,,,,,,,,,,,,,,,,
அடுத்து முஸ்லீம் சமூகத்தில்
விதைக்கப்படவேண்டிய முக்கிய விழுமியம் நம்பிக்கை நாணயமும், வாக்கு மீறாமையுமாகும்.
இஸ்லாத்தைப் போதிப்பதற்கு முன்னரே நம்பிக்கைக்குரிவர் (அல் அமீன்) எனும் சிறப்புப்
பன்பைப் பெற்ற இறைத்தூதரைப் பின்பற்றுகின்ற மனிதர்கள் எவ்வளவு நம்பிக்கைக்குரியவர்களாக
இருக்க வேண்டும் என்பதை விளக்கவும் வேண்டுமா?
“பத்ர்” யுத்தம் என்பது எவ்வளவு முக்கியமான நிகழ்வு
என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த யுத்தத்துக்காக தயாராகும் நிலையில் "ஹுதைபத்துல்
யமானி" எனும் நாபித் தோழர் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை அணுகி இவ்வாறு சொன்னார்கள்.
"என்னையும், "ஹுஸைல்” என்பவரையும் மதீனாவுக்கு வரும் வழியில் காப்பீர்கள்
பிடித்துக்கொண்டபோது அவர்களுடன் யுத்தம் புரிய மாட்டோம் என வாக்குக்கு கொடுத்துவிட்டு
வந்தோம். ஆதாலால் நாம் அது விடயமாக என்ன செய்யலாம் எனக் கேட்டுக்கொண்டார்கள்."
அதற்கு நபியவர்கள் "நீங்கள் இருவரும் யுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டாம். நாம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவோம். அல்லாஹ்விடம் அவர்களுக்கு எதிராக உதவி தேடுவோம் எனக்
கூறினார்கள்." (பார்க்க முஸ்லிம்-1787).
இவ்வாறு இக்கட்டான சந்தர்ப்பத்தில் கூட கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதே நபி-வழியாகும்.
எனவே தனக்கு நாட்டம் ஏற்படுவது எப்படிப்போனாலும் உயிர்போனாலும் கூட இறைவன் தனது செயலைப்
பொருந்திக்கொள்வான் எனும் நம்பிக்கையுடன், கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கூடியவர்களாகவல்லவா
முஸ்லீம் சமூகம் இருக்கவேண்டும் எனச் சொல்வது மிகையாகாதல்லவா?
அடுத்து முஸ்லீம் சமூகத்தில்
மாத்திரமன்றி முழு உலக மக்களிடமும் விதைக்கப்படவேண்டிய முக்கிய பண்பு வீண்விரயத்தைக்
கண்டு பதறுவதாகும். முழு உலகத்திலும் இருக்கின்ற அறிவாளிகள் ஒன்று சேர்ந்தாலும்
கூட ஒரு நெல்மணியை தரம் குறையாது உருவாக்க முடியுமா? அப்படியென்றால் அது
எவ்வளவு பெறுமதியானதாக இருக்கும்? அதைக் கண்டபடி தூக்கி எறிவதும், குப்பையில் கொட்டுவதும், இறை அருளுக்கு செய்யும் எவ்வளவு பெரிய துரோகமாக அமையும்!
அதுபோலவே இன்னும் பல்வகைப் பழங்களையும் தானியப்பொருட்களையும், காய்கறிகளையும், மாமிச உணவுகளையும் பழுதடையும் வரை சேமித்து வைப்பதும், பழுதடைந்த பின்னர் குப்பையில் தூக்கி எறிவதும் எல்லா விதத்திலும் தவிர்க்கப்படவேண்டிய
முக்கிய வழிமுறையாகும். அதற்கமைய வீண்விரயத்தைத் தவிர்த்துக்கொள்ளும் விதத்தில் பல்வேரு
பழக்கவழக்கங்களை (பித்'ஆ ஹஸனா) உருவாக்கிக்கொள்ளும் தேவை இருக்கிறது என்றால்
மிகையாகாது. உதாரணமாக திருமண விருந்துகளில்
எஞ்சக் கூடிய உணவுப்பொருட்களை முறையாகப் பகிர்ந்தளிக்கும் ஒரு நடைமுறை பின்பற்றப்படுவது
இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டத்தக்கதே. அதுபோல் வலீமா விருந்தையும் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கும்
ஒரு நடைமுறை உருவாக்கப்படுவதும் வரவேற்கத்தக்கதாகும். அத்துடன் அதிகலாபம் தேடும் நோக்கில்
எந்தவொரு விற்பனைப் பொருளையும் நீண்ட நாட்கள் சேமித்துவைத்து அவை பழுதடையக் காரணமாவது
எல்லா வகையிலும் தவிர்க்கப்பட வேண்டும். அவ்வாறு யாரெல்லாம் வீண்விரயமாவதை தடுத்துக்கொள்வதற்காக
குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்கிறார்களோ, அல்லது இலவசமாக பகிர்ந்தளிக்கிறார்களோ அவர்களுக்கு
அல்லாஹ் அருள்பாலிப்பானாக என இச்சந்தர்ப்பத்தில்
பிரார்த்தித்துக்கொள்வது சலப் பொருத்தமாகும்.
மேலும் தனது பாவனைக்கு மேலதிகமாக இருக்கும் எந்தவொரு பொருளையும் எதோ ஒரு விதத்தில்
பிறருக்கு பகிர்ந்தளித்துதவும் ஒரு நடைமுறை ஏற்படுத்தப்படுவதும் போற்றத்தக்கதாகும்.
அடுத்து சமூகத்தில் காணப்படவேண்டிய
முக்கிய விழுமியம், பிறருக்கு எந்த விதத்திலும் சங்கடமில்லாமல் இருப்பதாகும். பிறரினால் ஏற்படும் சங்களடங்களை சகித்துக்கொள்வதும்
இதில் அடங்கும் என்பது முதற்கண் விளங்கிக் கொள்ளத்தக்கதாகும் (பார்க்க இப்னு மாஜா-4032, அஹ்மத்-5022). அவ்வாறு தவிர்க்க முடியாத சங்கடங்கள் ஏற்படுகின்றபோது அதற்காக மன்னிப்புக்
கேட்டுக்கொள்வதும் ஒரு வழிமுறையாகும் என்பது சந்தர்ப்பம் கருதி சுட்டிக்காட்டப்படுகிறது.
பிறருக்கு சங்கடமில்லாமல் வாழ்வது என்பது சக மனிதர்கள் மாத்திரமன்றி, பிற சமூகத்தினர், மற்றும் மாற்று மதத்தினர் ஆகிய பல்வேறு வித்தியாசமான
பிரிவினருடன் சம்பந்தப்பட்ட விரிந்த ஒரு அம்சமாகும். ஆதலால் மிகச் சுருக்கமாகவே இந்த
அம்சம் இங்கு தொட்டுக்காட்டப்படுகிறது.
மேற்சொன்ன அம்சத்துடன் தொடர்புபட்ட, அதேவேளை பொதுவாக வாழ்க்கையில் ஏனைய விடயங்களிலும்
கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒரு முக்கிய பண்பே விட்டுக்கொடுத்தலும் குழுவாக செயற்படலுமாகும்.
குழுவாக செயற்படல் (team-work) என்பது மனித வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாகும்.
சிங்கம் காட்டின் அரசனாக கருதப்படுவதற்கு முக்கிய காரணமே அது குழுவாக செயற்படுவதாகும்
என்றால் மிகையாகாது. எனவே அடுத்தவர்களுடன் இணங்கிப்போதல் மற்றும் குழுவாகச் செயற்படல்
என்பன சமூகத்தில் ஆழப்பத்தியப்படவேண்டிய முக்கிய அம்சம் எனலாம்.
அத்துடன் மேலே சொல்லப்பட்ட
பிறருக்கு சங்கடமில்லாமல் வாழல் எனும் அம்சத்துடன் தொடர்புபட்ட மாற்றுமொறு அம்சமே கிடைக்கின்ற
சந்தர்ப்பங்களில் பிறருக்கு உதவி ஒத்தாசைகள் புரிவதும் சமூகத்துக்கு பிரயோசனமான செயல்களில்
ஈடுபடுவதுமாகும். பாதையில் இருக்கின்ற ஒரு தடையை நீக்கல், மற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய மரக்கிளையை தரித்தல் போன்ற அம்சங்கள்
நபி மொழியில் போதிக்கப்பட்டுள்ளமை இதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளன (புஹாரி-2891, 652; முஸ்லிம்-1009,1914). அதற்கமைய கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில்
இன, மத, மொழி, வேறுபாடு பாராமல் பிறருக்கு உதவியாக இருப்பதும் சமூகத்தில் விதைக்கத்தக்கப் படவேண்டிய
முக்கியதொரு விழுமியம் எனலாம்.
அவ்வாறே, ஒரு சமூகம் முன்னேறுவதற்குத்
தேவையான மற்றுமொரு முக்கிய விழுமியம் திறமையைப் பாராட்டுவதாகும். பொறாமை கொள்ளக்கூடாதெனவும், "மப்ரூக்”, அல்லது “பாரக்கல்லாஹு
பீக" என வாழ்த்துவதும் இந்த அம்சத்துடன் தொடர்பு பட்டதாகும். இவ்வாறாக எந்தவிடயத்திலும்
பிறரொருவர் திறமையாக செயற்படுவதும்,
வாழ்க்கையின் முக்கிய அடைவுகளை
அடைவதுவும் தனக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் தருவதாக அமைவது சமூகத்தில் விதைக்கப்படவேண்டிய
மற்றுமொரு விழுமியமாகும். அதற்கு மாற்றமாக, பல்வேறு வித்தியாசனமாக சிந்தனைகளால் தாக்கம்பெற்ற
சமூக அங்கத்தினர்கள் பிற சிந்தனையை சரிகாண்பவரின் அடைவுகளை தனக்கு பாதிப்பாக கருதும்
நிலையே தற்போது நிலவுகிறது என்பதை யாரும் மருத்துரைக்க முடியாது. இந்நிலை மாறி எல்லோரது
திறமையும் பாராட்டப்படும் நிலை உருவாது சமூகம் முன்னேறுவதற்கு மாத்திரமன்றி இறை அருளையும்
பெற்றுத்தருவதாகும் என்பதில் மாற்றுக்கருத்துக் கிடமிருக்க முடியாது.
இத்தகைய விழுமியங்களின் பட்டியல்
நீண்டுகொண்டே சென்றாலும் கூட "வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் நளினமாக
நடந்து கொள்ளும் பழக்கமும் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய அம்சம் எனலாம். (பார்க்க அல்குர்'ஆன் விளக்கம் 20:44, நபி மொழி முஸ்லிம்-2593, புஹாரி 6927). இந்த
விடயத்தில் பலரும் செய்யக் கூடிய ஒரு தவறு என்னவெனில், நாம் கடினமாக நடந்து கொண்டாலே சில பிழையான செயல்களை தடுக்கலாம் என நினைப்பதாகும்.
இது சம்பந்தமாக தெளிவு பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விடயமாவது, அவ்வாறு கடினமான வழிமுறையால் தடுக்கப்பட்ட
அம்சங்கள் குறிப்பிட்ட அச்ச நிலை நிலவும் காலம் மட்டும் நிலைப்பாடாகும். ஆனால் நளினமான
வழிமுறையைக் கையாண்டு அது தாடுக்கப்பட்டிருந்தால் அஃதாவது உள மாற்றத்தினூடாக அது காலா,
காலம் நிலைத்திருக்கலாம்.
மேற்சொன்ன அம்சங்கள் சில முக்கிய
விடயங்களேயாகும். இவைகளுடன் இன்னும் பல அம்சங்கள் சம்பந்தப்பட்டுள்ள. எனவே இவைகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து இவற்றுடன் ஏனைய பல நற்பண்புகள் சமூகத்தில் விதைக்கப்படுவதற்கான
பணிக்கு யாரும் முன்வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
இச் சந்தர்ப்பத்தில் சமூகத்தில்
பரவலாக இருக்கும் சில சிந்தனைப்போக்குகளை சரியாக விளங்கிக்கொள்வது இன்றியமையாததாகும்.
(அவற்றை மறுக்கின்றவர்கள் போதுமான ஆதாரங்களை முன்வைத்து மறுத்துரைக்கலாம்.)
கி.பி. 1850 ஐத் தொடர்ந்த காலப்பகுதியில் துருக்கிய கிலாபத்
நலிவுற்று வருகின்ற அதேவேளை இந்தியத் துணைக்கண்டத்தில் முகலாய அரசும் வீழ்ச்சியைத்தழுவியமை
சிந்திக்கத்தக்கதாகும். இரண்டுக்கும் காரணமாக ஐரோப்பியர், குறிப்பாக ஆங்கிலேயர்களின் எழுச்சி அமைந்திருப்பது மறுக்க முடியாததாகும். அதைத் தொடர்ந்து உலகின் பல பாகங்களிலும் பல்வேறு
விதத்தில் இஸ்லாமிய ரீதியிலான அரசியல் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தகைய முன்னெடுப்புகளை
மேற்கொண்டவர்களுள் இல்லியால் கந்தலாவி (ரஹ்), மெளலானா மெளதூதி (ரஹ்), ஹஸனுல் பன்னா (ரஹ்) மற்றும் முஹம்மத் பின் அப்துல்
வஹ்ஹாப் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் அனைவரும் தரீக்காக்களின் செல்வாக்கிற்கு
உற்பட்டவர்களாக இருந்துள்ளமை மறுக்கமுடியாததாகும். எனவே தரீக்காக்களைப் பற்றியும் சற்று
தொட்டுச் செல்லும் அவசியுமுள்ளது எனலாம்.
தரீக்காக்களைப்பற்றி சுருக்கமாக
விளங்கிக் கொள்ளக்கூடிய அம்சம் என்னவெனில் ஷீ'ஆ பிரிவினரின் தாக்கத்திலிருந்து முஸ்லீம்களை பாதுகாக்கும்
நோக்கிலேயே அவை உருவாகின எனலாம். ஆரம்ப காலத்த்தில் ஷீ'ஆ பிரிவினர் ஒரு பிக்ஹ் மத்கபாக மாத்திரம் கருத்தப்பட்டமையால் சமூகத்தில் ஒரு அங்கமாக கருதப்பட்டு முஸ்லீம் சமூகத்தினருடன்
இரண்டறக்கலந்து வாழ்ந்தனர். இந்நிலையில், ஷீ'ஆ பிரிவினரின் சில கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாத
தாகையால் அவர்களின் செல்வாக்கை விட்டும் ஏனைய முஸ்லீம்களைப் பாதுகாக்கும் முனைப்புடன்
தாரீக்காக்கள் உருவாக்கப்பட்டான. இந்த தரீக்காக்களில், ஷீ'ஆ அமைப்பில் காணப்படும் பல்வேறு அம்சங்கள் பொதிந்திருப்பதும்,
"சுன்னத் வால் ஜமா'அத்" என தங்களை அவர்கள் அழைத்துக்கொள்வதும்
இதற்கு போதிய சான்றுகளாகும் என்பது விரிவு கருதி மிகச் சுருக்கமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தியாவிலே முகலாய ஆட்சி வீழ்ந்தவுடன் இந்த தரீக்கா அங்கத்தவர்கள் ஓர் இஸ்லாமிய அரசை
நிறுவ முயற்சி செய்தயமையையும் அது தோல்வியில் முடிவடைந்தமையும் வரலாறாகும்.
அவ்வாறு இந்திய துணைக்கண்டத்தில்
இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் பாடுபட்டவர்களின் பாசறையில் வளர்ந்தவர் என்று சொல்வதை
விடவும் அவர்களின் மடியிலே வளர்ந்தவரே இல்லியாஸ் கந்தலாவி (ரஹ்) அவர்கள் ஆவார் என்று
சொல்வதே பொருத்தமாகும். எனவே இல்லியாஸ் (ரஹ்) அவர்களிடம் அரசியல் சிந்தனைப்போக்கு காணப்பட்டமையும்,
அந்தப் பின்னணியிலேயே "தெஹ்ரீக் ஏ ஈமான்" எனும் அமைப்பை 6 அம்சங்களின் அடிப்படையில் அவர் உருவாக்கினார் என்பதையும்
உணர்ந்து கொள்ளலாம். இவ்வாறு உருவாகிய தப்லீக் ஜமாஅத்" இன்றிருக்கும் நிலையை இல்லியாஸ்
(ரஹ்) உயிர்பெற்று வந்து சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறியே?
இல்லியாஸ் (ரஹ்) அவர்களது
காலத்தை அண்டிய காலப்பகுதியில் (20 வருட வித்தியாசம்),
அதே சூழ்நிலையில் எகிப்திலே ஒரு இஸ்லாமிய ஆடசியைக் கொண்டுவரும் எண்ணத்துடன் அரசியல்
காட்சியமைத்து தேர்தலில் களமிறங்கியவரே "ஹஸனுல் பன்னா" (ரஹ்) ஆவார். துருக்கிய
கிலாபத்தின் கீழிருந்து பின்னர் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட எகிப்து நாட்டில்,
அரசியல் கட்சியமைத்து அரசியல் முன்னெடுப்புகளில் ஈடுபட்டமை மாத்திரமன்றி அதே அரசியல்
காரணங்களுக்காவே அவர் படுகொலை செய்யப்பட்டார் (ஷஹீதாக்கப்பட்டார்) என்பதும் வரலாறாகும்.
அத்துடன் அண்டைய சவுதி அரேபியாவில் மும்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் செல்வாக்கு
ஹஸனுல் பன்னா அவர்களின் முன்னெடுப்புகளில் செல்வாக்குச் செலுத்தியதா என்பதும் சிந்திக்கத்தக்கதாகும்.
அதற்கு சற்று முந்திய காலப்பகுதியில்
(கி.பி. 1700) அரேபிய துணைக்கண்டத்தில் ஷீ'ஆக்களின் செல்வாக்கின்
காரணமாகவோ என்னவோ, முன்வாழ்ந்த ஸஹாபாக்கள் மற்றும் நல்லடியார்களின்
அடக்கஸ்தலங்களில் வழிபடல், மற்றும் சில மரங்களை புனிதமாகக் கருதுதல் போன்ற
பிழையான செயற்பாடுகள் பரவியிருந்தன. அவற்றுக்கெதிராக
மிகத்தீவிரமாக செயற்பட்டவரே முஹம்மத் இப்னு
அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஆவர். அவர் “ஹன்பலி மத்ஹப்பைச்” சேர்ந்தவராராதலால் இமாம் “ஹன்பலி”
அவர்களின் துணிச்சலும், வேகமும் அவரிடத்தில் காணப்பட்டமை வியக்கத்தக்க வொன்றல்லவே.
அத்துடன் அவர் தனது ஆரம்ப காலத்திலேயே “நக்சபந்தி தரீக்காவுடன்” தொடர்புகொண்டவர் என்பதும்
அதன் பின்னர் "பஸரா" வுக்கு கல்விகற்கச் சென்றார் என்பதும் அங்கு ஷீ'ஆக்களுடனான அறிமுகம் அவருக்கு கிடைத்தது என்பதும் அவர் வாழ்வு பற்றிய சில முக்கிய
குறிப்புகளாகும். அவரின் தீவிர செயற்பாடுகளினால் சினம் கொண்ட அன்றயகால ஷீ'ஆ சிற்றரசொன்று (இன்ற “ஹபூப்” பிரதேசம்) அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தது.
இந்நிலையில் தன்னைப் பலப்படுத்திக்கொள்ளும் விதத்தில் அன்றயகால மற்றொரு சிற்றரசான
"முஹம்மத் பின் சா'ஊத்" மன்னர் (திரிய்யா சிற்றரசு) அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு செயற்பட்டமையால்
இன்றய "ஸஊதி அரேபியா” உருவாகியது எனலாம். இவ்வாறு உருவாக்கிய சவுதி அரேபியாவில்
தற்போது செல்வாக்குள்ள முக்கிய கோத்திரங்களாக "ஆல் ச'ஊத்" (ச'ஊத் மன்னர்), மற்றும் "ஆல் ஷைக்" (மு. அ வஹ்ஹாப் அவர்களின் வம்சாவளி) இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களின்
அதே காலப்பகுதியில் (1903), சர்வதேச ரீதியில் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு எதிராக எழுந்த
சிந்தனா ரீதியான சவால்களை தனது எழுத்துகளால் சிறப்பாக முகங்கொண்டவரே அபுல் அஃலா மெளதூதி
(ரஹ்) ஆவர். குறிப்பாக கம்யூனிச சித்தாந்தத்தின் எழுச்சி இஸ்லாமிய உலகத்தில் எந்தளவு
செல்வாக்கு செலுத்தியது என்பதற்கு சத்தம் ஹுசைன் அவர்களின் "பாத்-சோசலிச" கட்சியும்
"முஅம்மர் அலக் கடாபி" அவர்களின் “பசுமை நூலும்” சிறந்த உதாரணங்களாகும்.
அவ்வாறே, முதலாளித்துவப் பொருளாதார சிந்தனையும் மற்றொரு விதத்தில் தாக்கம் செலுத்தியது.
அதன் விளைவையே துருக்கியில் காணக்கூடியதாக இருந்தது. இத்தகைய சிந்தனைகளுக்கு எதிராக
இஸ்லாமிய சிந்தனைகளை முன்வைத்ததுடன், குறிப்பாக வட்டியில்லா வங்கி அமைப்பிற்கான அடித்தளத்தை
இட்டவர் மெளலானா மெளதூதி ஆவார் என்றால் மிகையாகாது. அதேவேளை இஸ்லாமிய சமூகப் புனரமைப்புப்
பணியில் கிலாபத்தை மீண்டும் உருவாக்குவதும் முக்கிய அம்சம் எனக் கருதி செயற்பட்டார். அவர் இல்லியாஸ் (ரஹ்) பைஅத் செய்திருந்த அதே சிஷ்டி
தரீக்கா அங்கத்தவராக இருந்தமையும், இல்லியாஸ் (ரஹ்) அவர்களின் செயற்பாடுகளை தனது பத்திரிகையில்
புகழ்ந்துரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
இப்படியாக, மேற்சொன்ன பல்வேறு
சிந்தனா பாசறைகளைச் சேர்ந்தவர்களும் உலகின் பல்வேறு திசையில் இருந்துகொண்டு, ஒருவருக்கொருவர் முரணில்லாத விதத்தில் இஸ்லாமிய சமூகத்தை புனரமைக்கும் பணியில்
ஈடுபட்டுள்ளமையைக் காணலாம். அப்படியில்லாமல்
ஒரே பிரதேசத்தில் இருந்துகொண்டு ஒருவருக் கொருவர் முரண்பட்ட விதத்தில் செயற்பட்டவர்கள்
அல்ல என்பது சந்தர்ப்பம் கருதி சுட்டிக்காட்டப்படுகிறது. இவர்கள் அனைவரும் தமக்கு முன்னுள்ள
உலமாக்களின் அறிவு மற்றும் வழிகாட்டலினால் பயன்பெற்று, தத்தமது பிரதேசங்களில் இஸ்லாமிய
சமூகத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர் எனலாம். இவர்களின் சிந்தனைப்போக்குகளே இன்று
பொதுவாக எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் பரவியிருப்பத்தைக் காணலாம்.
தற்காலத்தில், தொலைத்தொடர்பு சாதனங்கள், மற்றும் போக்குவரத்து வசதிகளின் காரணமாக,
மேற்சொன்ன பலவேறு சிந்தனைப் பாசறைகளைச் சேர்ந்தவர்களும் ஒரே பிரதேசத்தில், சமூகப்புனரமைப்புப்
பணியில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது. அவர்களின் எத்தகைய அரசியல் மற்றும் சமூக புனரமைப்பு
சிந்தனையும் மக்களிடத்தில் தாக்கம் செலுத்தி, சமூகம் சிறப்புற வேண்டுமாக இருந்தால்,
அந்த சமூகத்தில் மேற்சொல்லப்பட்ட விழுமியங்கள் இருப்பது அத்தியவசியம் என்பது யாவரும்
கருத்தில்கொள்ளத்தக்க முக்கிய விடயமாகும். ஆதாலால், அந்த விழுமியங்களைப் பற்றி முதற்கண்
எல்லாரும் பேசவேண்டிய தேவையிருக்கிறது. அதன் பின்னரே அவரவர் சொல்லக்கூடிய சிந்தனைகள்
சமூகத்தில் சிறந்த பலனைத் தரும் என்பது எழுதப்படாத வேதவாக்காகும் என்றால் மிகையாகாது.
No comments:
Post a Comment
We value your feed back