Saturday, January 22, 2022

 காதிரிய்யா

விஞ்ஞானம் படிக்கின்ற ஒரு சிறுவன் ஒரு நாள், சில இரும்பினாலான உருண்டைகளை எடுத்து,  சதாவும் ஆடிக்கொண்டிருக்கின்ற ஒரு மேசை மீது வைத்து, அதன் நடுவில் ஒரு காந்தக்கட்டியை வைத்தான். அந்த காந்தத்தின் சக்தி மூலம் அந்த இரும்பு உருண்டைகள் அசையாமல் இருந்தன. இவ்வாறு அவன் காந்த சக்தியை பரீட்சித்துப்பார்த்த பின், அந்த காந்தத்தை எடுத்துவிட்டான். வரலாற்றில் முஸ்லீம் சமூகத்தில் நாம் காணும் விடயமும் இதுவாகத்தான் இருக்கிறது எனலாம்.

 

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒன்றாகக் கட்டிக்காக்கப்பட்ட முஸ்லீம் சமூகம், அவரின் மறைவின் பின் படிப்படியாக சிதரிச் சென்றமையை காணலாம். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் சமூகத்தை கட்டிப்போட்டது இறை சக்தியாக இருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது. (பார்க்க அல்குர்'ஆன் 8:63).

 

இறைதூதர் (ஸல்) அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து இஸ்லாமிய சாம்ராஜ்ய மெங்கிலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி முஸ்லீம் சமூகம் பல்வேறு அமைப்பில் பிளவுபட ஆரம்பித்தது. அப்போது 1ம் கலீபா அபூ பக்கர் (றழி) அவர்கள் அதிகமான இழப்புகளுடன் அதைத் தடுத்து நிறுத்தினார்.  அவரைத் தொடர்ந்த 2ம் கலீஃபா உமர் (றழி) அவர்களின் காலத்தில் உள்நாட்டில் அமைதி நிலவினாலும் வெளிநாடுகளை நோக்கிய படையெடுப்புகள் நடை பெற்றதைக்  காணலாம். அத்தகைய ஒரு படையெடுப்பின் விளைவாகவே உமர் (றழி) அவர்கள் கொலை செய்யப்பட் பட்டார் என்று சொல்வதும் மிகையாகாது. அவரைத் தொடர்ந்த 3ம் கலீஃபா உஸ்மான் (றழி) அவர்களின் காலத்தில் மீண்டும் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகள் முளைத்துக் கொண்டதைக் காணலாம். அத்தகைய பிரச்சினைகள் அப்பாஸிய கிலாபத் ஆட்சி காலம் வரைத் தொடர்ந்தன. அதன் பின் அரசியல் இஸ்திரத்தன்மை நிலவிய அப்பாசியா ஆட்சிகாலம், மொங்கோலியா படையெடுப்பைத் தொடர்ந்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன், மீண்டும் இஸ்லாமிய சாம்ராஜ்ய மெங்கிலும் பல்வேறு வகையிலான அரசியல் தலம்பல்கள் ஏற்பட்டமையைக் காணலாம். இப்படியாக நபி முஹம்மத் ஸல் அவர்களின் மறைவத்தொடர்ந்து 4 முக்கிய கலீபாக்களின் மறைவின் பின், ஒரு முஸ்லிம் முற்றுமுழுதாக கட்டுப்பட்டு நடக்கக்கூடிய ஒரு தலைவர் (இமாம் அல்லது கலீஃபா) இல்லாமல் போனமை இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் ஒரு குறையாக உணரப்பட்டமை முதற்கண் கருத்திற் கொள்ளத்தக்கதாகும்.

 

அதன் மறுபக்கமாக 4ம் கலீஃபா அலி (றழி) அவர்களின் காலத்திலேயே உருவாகிய "ஷீ'ஆ" பிரிவினர் "அஹ்லுல் பைத்" என அழைக்கப்படும் அல்லாஹ்வின் தூதரின் குடும்பத்தாரின் தலைமையில் ஓர் அணியாகச் செயல்பட்டனர். இந்நிலையில் "ஷீ'ஆ" பிரிவினர் அல்லாத முஸ்லிம்களிடத்தில் ஒரு வெற்றிடம் நிலவியமை மற்றொரு முக்கிய அம்சம் எனலாம்.

 

அதேவேளை ஒரு புறம் கிரேக்க தத்துவங்களால் கவரப்பட்ட முஃதஸிலாக்களின் அறிவியற் சவால்களும் (இமாம் ஹன்பலி அதனை எதிர்த்தமையினால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் இறந்தார்) இன்னொரு புறம் ஆன்மீகத்தை மறந்து மார்க்க சட்டதிட்டங்களில் மாத்திரம் (பிக்ஹ் மத்ஹப்களில்) அதிக ஈடுபாடு காட்டுகின்ற இஸ்லாமிய சட்ட வல்லுனர்களின் செயற்பாடுகளும் (இமாம் கஸ்ஸாலி இதன் காரணமாகவே சிறிது காலம் கற்பித்தல் பணியை விட்டும் ஒதுங்கி தனிமையில் வாழ்ந்தார்) போன்ற காரணிகளால் முஸ்லீம்களின் ஆன்மீகமும் பண்பாடுகளும் வீழ்ச்சிடைந்து கொண்டு சென்றது. இத்தகைய பல்வேறு பின்னணிகளின் அடிப்படையில் சமுகத்தை சீர்திருத்தும் பணிக்காக தரீக்காக்கள் எனும் அமைப்பு உருவாகின எனலாம்.  அத்தகைய ஒரு தேவை அல்குர்'ஆனின் போதனைக்கு இயைவாகவும் அமைந்திருந்தமை நோக்கத்தக்கதாகும் (பார்க்க 2:129; 62:2).

 

இந்த தரீக்கா அமைப்பில் இஸ்லாத்துக்கு முன்னர் ஈரான் பிரதேசத்தில் செல்வாக்கு செலுத்திய “ஸோரோஸ்தாரிஸ்ம்” மற்றும் “பெளத்தம்” ஆகிய கோட்பாடுகளின் செல்வாக்கு காணப்படுவதையும் உணர்ந்து கொள்ளலாம்.  அதை ஒரு பிழையான வழிமுறை என்று சொல்வதை விடவும், எப்படி நீலநிறமான பாத்திரத்தில் தண்ணீர் நுழைந்தால் அது நீல நிறமாகத் தென்படுமோ அது போல் காலச் சூழலுக்கு அமைவாக ஏற்பட்ட ஒரு மாற்றமாகக் கருதுவதே பொருத்தமாகும்.

 

இத்தகைய பல்வகைப் பின்னணிகளின் அடைப்படையில் உருவாகிய தரீக்கா அமைப்புகளில் "காதிரிய்யா தரீக்கா" முக்கியமான தொன்றாகும். அது அப்துல் காதிர் ஜீலானி (றஹ்) அவர்களைச் சார்ந்து உருவாகிய தரீக்கா அமைப்பாகும். “இறந்துகொண்டிருக்கும் மார்க்கத்தை உயிர்பெற்றெழச் செய்தவர்” (முஹியுத்தீன்) என அறிஞர்களால் அழைக்கப்படும் அப்துல் காதிர் ஜீலானி (றஹ்) அவர்கள், தற்போதைய ஈரானிலுள்ள ஜீலான் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். அதேவேளை, தந்தை வழியாக "ஹஸன் பின் அலி" (றழி) அவர்களையும், தாய் வழியாக "ஹுசைன் பின் அலி" (றழி) அவர்களையும் சேர்ந்திருந்தமை, அவரின் தூய்மையான குடும்ப வம்சாவழியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அவர் தனது மூதாதைகளைப்போல் அரசியலில் ஈடுபாடுகாட்டாமல், தனது இளமைக் கல்வியை முடித்த பின்னர் 25 வருடகாலமாக ஈராக் பிரதேசத்தின் பாலைவனப் பகுதியில் ஏகாந்தமாக வாழ்ந்தமையானது அவரது அறிவியல் விருத்தியையும், ஆன்மீக வளர்ச்சியையும் எடுத்தியம்புவனவாக உள்ளன. அவ்வாறே "சில்சிலா" என அழைக்கப்படும் அவரது அறிவியல் பாரம்பரியமானது "ஹஸனுல் பஸரி" எனும் பிரபல்யமான “தாபிஈ” அறிஞரை சார்ந்திருப்பதானது அரசியல் ஈடுபாட்டைத் துறந்த ஆன்மீக மற்றும் கல்விப்பணியை தொடரும் பாரம்பிரியத்தை எடுத்தியம்புவதாக உள்ளது.

 

மேற்சொன்னவாறு 25 வருடகாலமாக பாலைவன தனிமை வாழ்க்கையை மேற்கொண்ட பின்னர், ஏதோ காரணத்தின் அடிப்படையில் “பக்தாத்” நகர் சென்று அங்கு தான் கல்விகற்ற அல்-மக்ஸூமி" கலா நிலையத்தில் ஆசிரியராக பணியாற்றினார். இக்காலப் பகுதியிலேயே காதிரிய்யா தரீக்காவின் செயற்படு ஆரம்பிக்கிறது. அவரது காலத்தில் அது அத்துணை பிரபல்யம் அடைந்திருக்க வில்லை. அவரின் மறைவின்பின் "அலி அல்-ஷாத்தநூபி” என்வராலேயே காதிரிய்யா எனும் பெயரில் அவரது தரீக்கா வழிமுறை பல்வேறு நாடுகளில் பரப்பப்பட்டது என்பதே வரலாறாகும். அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் "ஹம்மாத் இப்னு முஸ்லிம் அல்-தப்பாஸ்" என்பவரிடம் ஆன்மீகப் போதனைகளை பெற்றிருந்தாலும் கூட அல்-காதிரி எனும் பெயர் பிரபல்மடைவதற்கு அவரது சேவைகளை முக்கிய காரணிகளாகக் கூறலாம். அத்துடன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ஹன்பலி “மத்ஹப்” ஐச் சேர்ந்தவராக இருந்தாலும் "ஷாபிஈ" மத்ஹப் அடிப்படையிலும் பத்வாக்கள் கொடுக்கும் வழமையுடையவராக இருந்தார் என்பது, அவர் அன்றே “மத்ஹப்” எனும் வரையறைக்கு அப்பாற்பட்டவராக இருந்தமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.

 

"ஷீ'ஆ" பிரிவினர் தாம் ஏற்றுக்கொள்ளாத அரசுகளை புறக்கணித்து நடந்த அதேவேளை “தாரீக்கா” அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமது கால அரசுகளுடன் இணங்கிச் செயற்பட்டமை, தரீக்காக்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததாகக் கொள்ளலாம்.  இதனால் அதிருப்தியுற்றமையினால் என்னவோ ஷீ'ஆ அமைப்பிற்கும் தரீக்கா அமைப்பிற்கும் இடையில் முறுகல் நிலை நிலவியமையும், ஷீ'ஆ கொள்கையைச் சார்ந்த “சபவீக்கல்” ஆதிக்கம் பெற்ற காலத்தில், அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் கல்லறையை சேதமாக்கியமையும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

 

இப்படியாக, ஷீ'ஆ கொள்கையுடைவர்கள் ஆதரிக்கும் அதே “அஹ்லுல்-பைத்” (ஹாஷிமி பரம்பரை) ஐச் சேர்ந்தவர்கள், “தரீக்கா” அமைப்புகளை உருவாக்கி முஸ்லீம் சமூகத்துக்கு தலைமைத்துவம், மற்றும் ஆன்மீக வழிகாட்டல்களை வழங்கும் பணியைச் செய்துள்ளமையைக் காணலாம். இவ்வாறு உருவாகிய “தரீக்கா” அமைப்புகள் இஸ்லாமிய சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. விரிவு கருதி அவைகள் சுட்டிக்காட்டப்படுவது தவிர்த்துக்கொள்ளப்படுகிறது.

 

அதேவேளை “தரீக்கா” அமைப்பினர் நோக்கத்தக்க முக்கிய அம்சம் என்னவெனில் அன்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் “ஹன்பலி” மத்தகப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட ஷாபிஈ மத்ஹபையும் ஏற்று செயற்பட்டமையாகும். அவ்வாறு அவர் செய்தமைக்கு இஸ்லாம் என்பது அல்குர்'ஆன், சுன்னா மற்றும் மனித அறிவு ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது எனும் தெளிவு அவரிடம் இருந்தமை எனலாம். அத்துடன் தாரீக்காக்கள் உருவாகிய அன்றய காலத்தை விடவும், இன்றய காலம் வித்தியாசப்பட்டிருப்பதுடன் அன்று தரீக்காக்களில் பின்பற்றப்படாத பல்வேறு மார்க்க முரணான அம்சங்கள் இன்று தரீக்காக்களினால் பின்பற்றப்படுவதும் சிந்திக்கத்தக்கதாகும்.  

 

“தரீக்கா” எனும் ஒரு அமைப்பு உருவாவதற்கு எவ்வாறு கால, சூழல், சந்தர்ப்பங்கள் காரணமாக  அமைந்ததோ, அதுபோல் இன்றய கால சூழலுக்குக்கேற்ப அந்த தாரீகாவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டிய தேவை இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவ்வாறே அன்று காணப்படாத பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும், அறிவியல் கருவூலங்களும் இன்று காணப்படுகின்றன. அவற்றின் துணையுடன் அல்குர்'ஆன் மற்றும் சுன்னாவின் போதனைகள் சரியாக ஆராயப்பட்டு, அவற்றின் அடிப்படையில் தரீக்கா அமைப்பிலுள்ள வேண்டாத அம்சங்கள் நீக்கப்பட்டு புனர் நிர்மாணம் செய்ய வேண்டிய தேவை யாரும் சிந்திக்கத்தக்கதாகும்.

 

முஹியுத்தீன் எனும் சொல் ஒன்றே நபி (ஸல்) அவர்கள் போதித்த மார்க்கம் ஒரு காலத்தில் பலவீனப்பட்டு காணப்பட்டது என்பதை உணர்த்துவதாக உள்ளது. அப்படியென்றால் “அப்துல் காதிர் ஜீலானி” போன்ற மகான்கள் உருவாக்கிய “தரீக்கா” அமைப்புகள்  பலவீனப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கும் என்பதை யாரும் சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

 

அவ்வாறே அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் அதே வழிமுறையைப் பின்பற்றி “மத்ஹப்” எனும் வரையறையைக் கடந்து, அல்குர்'ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் மார்க்க சட்ட விவகாரங்களில் “பத்வாக்கள்” பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய தேவையும் யாரும் சிந்திக்கத்தக்கதாகும்.

மேலும், நவீன காலத்தின் அரசியல் சூழ்நிலை, சமூக பொருளாதார நிலைமைகள் மற்றும் பொருளாதார சமூகவியல் கோட்பாடுகள் (கம்யூனிசம், சோசலிசம்) போன்றவற்றின் தாக்கத்தின் விளைவாக இஸ்லாமிய சமூகத்தில் தோன்றியுள்ள பல்வேறு புதிய அமைப்புகளுடன் ஒன்றிணைத்து செயற்படல் ஆகிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படவேண்டும். 

 

இப்படியாக தற்காலத்தின் சவால்களுக்கு முகங்கொடுக்கும் விதத்தில் “தரீக்கா” அமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படுவது காலத்தின் கட்டாயத் தேவை மாத்திரமன்றி அதுவே இம்மையிலும் மறுமையிலும் பயன்தரக்கூடியதாக அமையும் என்பதில் மாற்றுக்கிருத்துக்கிடமிருக்க முடியாது.

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...