இஃதிகாப்” - நிம்மதி தரும்
“இஃதிகாப்” பற்றி நாம்
முதற்கண் தெரிந்து கொள்ளவேண்டிய விடயம் அது இஸ்லாம் மார்க்கத்துக்கே உரிய ஒரு தனிச்சிறப்புமிக்க
அம்சமாகும். இவ்வாறு அதை தனிச்சிற்பப்புடன் உரைப்பதற்கு பல்வேறு காரணிகள் உள. அவைகளில்
சில பின்னல் நோக்கப் படும். உதாரணமாக இஸ்லாத்தில் இருக்கின்ற “தவாப்” எனும் அம்சத்தை எடுத்துக் கொண்டால், பல்வேறு
மதங்களிலே தங்களது தேவாலயங்களை அல்லது வேறு அம்சங்களை சுற்றி வளம்வரும் வழிபாட்டு
முறை காணப்படுகிறது. தொழுகை, நோன்பு ஆகிய சொற்களே அவை ஏனைய மதங்களிலும் இருப்பதற்கான
ஆதாரங்களாக அமைந்துள்ளன. ஆனால் “இஃதிகாப்” அவ்வாறானதொன்றாக அமையாமையாத
இஸ்லாத்துக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க ஒரு அம்சமாகும்.
“இஃதிகாப்” எனும் அம்சத்தில் பல்வேறு தெளிவின்மைகள் காணப்படுவதால், அதன் மொழிக்கருத்தை விளங்கிக் கொள்வது கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் கூட அது பற்றி தெரிந்து கொள்ள நாம் நிர்பந்திக்கப் பட்டுள்ளோம். ஒரு விடயத்தில் மூழ்கிப் போதல் - எனும் கருத்தைக் குறிக்கக் கூடியவராக, அதில் திளைத்தாள் அல்லது தொடர்ந்து ஈடுபடல், ஏனைய விடயங்களை தவிர்த்து ஒன்றில் முற்றாக கவனத்தை குவித்தல் - என்று சொல்வதையே இஃதிகாப் எனும் அரபிக் சொல்லின் முதல் வடிவமான "அகிப" என்பது குறிக்கும் (ப- மெல்லினம்). அதை புனிதம் கருதி ஒன்றில், அல்லது ஓரிடத்தில் தரித்திருத்தல் எனும் கருத்தில் அல்குர்'ஆன் பயன்படுத்தியுள்ளது. (7:138,10:91, 21:52). அத்துடன், தொழுகை (ஸலாத்), செல்வா வரி (ஸகாத்), இறைஅச்சம் (தக்வா), ஸலாம் (ஸலாம் எனும் முகமன்), போன்ற அரபு மொழியில் ஏற்கனவே புழக்கத்தில் இறுக்காத இஸ்லாத்திற்கே உரிய சில கலைச்சொற்கள் போன்றதே இந்த "இஃதிகாப்” எனும் அம்சமுமாகும். மேற்சொன்ன ஏனைய அம்சங்கள் போன்றே இந்த விடயமும் அல்குர்'ஆனில் குறிப்பிடப் பட்டுள்ளது. மஸ்ஜிதுக்குள்ளே தரித்திருத்தல் எனும் கருத்தைக் குறிப்பதற்காக இந்த சொல்லின் முதல் வடிவமான "அகிப" (ப- மெல்லினம்) என்பதை அல்குர்'ஆன் பயன்படுத்தியுள்ளது (2:125,187,22:25). ஆனாலும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் "இஃதிகாப்" எனும் பெயர்ச்சொல் பள்ளியில் தரித்தல் என்பதைக் குறிக்க பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. எவ்வாறு "ஸலாத்" என அல்குர்'ஆன் சொல்வதன் செயல் வடிவத்தை நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறையூடாக தெரிந்து கொள்கிறோமோ அதுபோலவே "இஃதிகாப்” எனும் அம்சத்தின் செயல் வடிவத்தையும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறையினூடாகவே தெரிந்து கொள்ளலாம். இங்குதான் "இஃதிகாப்" சம்பந்தமான பல்வேறு குழப்பங்களுக்கும், தெளிவின்மைகளுக்கும் தீர்வு பிறக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக நபிவழி என ஓங்கி ஒலிப்பவர்கள் இந்த வழிமுறையில் மாத்திரம் பாராமுகமாக இருந்ததன் காரணம்தான் என்ன வென்று புரியாமலே இருக்கிறது.
திருக்குர்'ஆன் அருளப்படுவதற்கு முன்பதாக நபி முஹம்மத் (ஸல்)
அவர்கள் "ஹிரா" எனும் இடத்திலே தனிமையில் இருந்து தியானம் செய்த விடயம் யாவரும்
அறிந்ததே. "ஹிரா" என்பதை குகை என தமிழில் சொல்வது சரியாகாது என்பதை அந்த
இடத்துக்கு போய்ப் பார்த்தவர்களுக்கு நன்கு புரியும். அது கதவுகளற்ற ஒரு சிறு குடிலுக்கு
ஒப்பான, மலை உச்சியிலே அமைத்திருக்கும் இயற்கையான ஒரு அமைப்பாகும். அந்த இடத்திலே பல
நாற்கள் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் தனிமையில் இருந்ததாக அறியக் கிடைக்கிறது. இப்படியாக
தனிமையில் இருக்கின்ற ஒரு சந்தர்ப்பத்திலேயே அல்குர்'ஆன் வசனங்களிற் சில முதன் முதலாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. அவ்வாறு
அருளப்பட்டது "றமழான்" மாதத்திலாகும் என்பதையும், அது இரவு வேளையிலாகும் என்பதையும், அந்த இரவு "லைலத்துல்
கத்ர்" என அழைக்கப்படும் என்பதாகவும் திருக்குர்'ஆனின் ஊடக தெரிந்து கொள்ளலாம் (பார்க்க 2:185, 44:3, 97:1). அது போலவே மூஸா நபி
(அலை) அவர்கள் தூர் சீனா மலையில் நாற்பது நாட்கள் தங்கியிருந்ததையும் அதைத் தொடர்ந்தே
"தவ்ராத்" வேதம் அருளப்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்
(2:51, 7:142).
இவ்வாறாக நபி (ஸல்) அவர்கள் தான் திருக்குர்'ஆன் அருளப்படுவதற்கு
முன்னாள் "ஹிரா" எனும் இடத்தில் தனிமையில் இருந்த அதே அமைப்பிலே றமழான் மாதத்திலே
"லைலத்துல் கத்ர்" இரவை அண்டிய நாட்களில் பள்ளியவாயலில் தனிமையில் இருந்ததையே
"இஃதிகாப்" என்று சொல்லப் படும். ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் "ரமழான்"
மாதத்தில் செய்யத் தவறியதை "ஷவ்வால்" மாதத்தில் செய்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுவல்லாமல் நபி (ஸல்) அவர்கள் வேறு நாட்களில் "இஃதிகாப்" இருந்தமை பற்றிய
எந்தவித குறிப்புகளும் இல்லை. அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தனிமையில் இருப்பதற்காக பள்ளிவாயலின்
ஒரு பகுதியை பிரத்தியோகமாக மறைத்து ஒதிக்கிக் கொண்டமையும் நாம் ஹதீஸ்களூடாக தெரிந்து
கொள்ளலாம். இந்த அம்சங்களினூடாக நாம் அறிந்துகொள்ளக்
கூடியது என்னவெனில் இஃதிகாப் எனும் வணக்கமுறையில்
பள்ளியில் தரித்திருத்தல் என்பதை விடவும் தனிமையில் தியானம் செய்தல் என்பதே முக்கியத்துவம்
பெறுகிறது என்பதாகும். அதேவேளை பள்ளிவாயலினுள் செய்யப்படக் கூடாதா சில செயல்கள் பற்றி
அல்குர்'ஆன் கூறும் பொழுது “இஃதிகாப்” எனும் சொல்லின் ஆரம்ப
வடிவமான "அகிப" எனும் சொல்லையே பயன்படுத்தியிருப்பதானது இஃதிகாப் எனும் வணக்கத்துக்கும்
பொதுவானதாகும். அதேவேளை, பொதுவாக பள்ளிவாயலினுள் செய்யப்படக் கூடாத விடயங்களையும் அது
குறிக்கும் எனும் விளக்கம் மார்க்க சட்ட அறிஞர்கள் அலச வேண்டிய ஒரு அம்சமாதலால் அது
பற்றிய இங்கு மிகச் சுருக்கமாகவே அவசியம் கருதி குறிப்பிடப் படுகிறது.
இவ்வாறாக நபி (ஸல்) அவர்கள் “இஃதிகாப்” இருந்த முறை மற்றும் அதன் அமைப்பு என்பன
பற்றி நாம் அறியக் கிடைக்கின்ற அனைத்து அம்சங்களும் தனிமையில் இருந்து பல்வேறு தியானங்களில்
ஈடுபடுவதையே “இஃதிகாப்” எனும் வணக்கம் குறிக்குமே அல்லாமல், பகலெல்லாம் கடைத்தெருவில்
சுற்றித்திரிந்து விட்டு இரவில் பள்ளிவாயலில் போய் உறங்குவதையோ, அல்லது பள்ளிவாயலினுள் இருந்து கொண்டு கதைத்துக் கொண்டிருப்பதையோ அதற்கு அப்பால் ஒருபடி
சென்று நவீன தொடர்பு சாதனங்களின் உதவியுடன் பள்ளிவாயலினுள் இருந்து கொண்டே வியாபார
நடவடிக்கையில் ஈடுபடுவதையோ “இஃதிகாப்” எனும் அம்சம்
குறிக்க மாட்டாது என்பதை முதற்கண் விளங்கிக் கொள்ளலாம்.
உலகியல் ஈடுபாடுகளைத் துறந்து தனிமையில் இருப்பதும், அவ்வாறு இருக்கின்ற பொழுது பல்வேறுவகையான தியானங்களில்
ஈடுபடுவதும் வரலாற்று நெடுகிலும் பல்வேறு மகான்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு செயலாக
இருப்பது போலவே இஸ்லாமிய வரலாற்றிலும் பல்வேறு அறிஞர்களும், மகான்களும் தனிமையில் தியானங்களில்
ஈடுபட்டுள்ளனர் என்பதை இஸ்லாமிய வரலாற்றில் கண்டு கொள்ளலாம். அத்தகையவர்களில் இமாம் கஸ்ஸாலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இமாம் கஸ்ஸாலியவர்கள் தான் மிகப் பிரபல்யமான ஒரு அறிஞராகவும், ஆசியராகவும் இருந்த நிலையில்
தனது ஊரைவிட்டுச் சென்று, தூரமான ஒரு கிராமத்தில் பள்ளிவாயலை துப்பரவு செய்யும் தொழிலை
செய்துகொண்டு துறவு வாழ்வை மேற்கொண்டார் என வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இப்படியாக
உலக ஈடுபாடுகளை விட்டும் துறந்து சிறுது காலம் வாழ்வது மற்றும் தியானங்களில் ஈடுபடுவது
நீண்ட விளக்கங்களும் தெளிவுகளுக்கும் உட்பட்ட விடயமாதலால் அதன் ஒரு குறுகிய வடிவமாகவே
நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றியதான “இஃதிகாப்” எனும் வணக்கமுமாகும் என்பதை
விளங்கிக் கொள்ளலாம். அதற்கிணங்க சிக்கல்களும் குழப்பங்களும் கூடிக் கொண்டே போகக் கூடிய
இந்த காலகட்டத்தில், தான் வாழ்ந்த வாழ்வின் போக்கின் சரி, பிழைகளை இனங்கண்டு
தனது வாழ்வை மாரு சீரமைத்துக் கொள்வதற்காக இஸ்லாம் காட்டித் தரும் ஒரு உன்னதமான வணக்கமே
“இஃதிகாப்” ஆகும்.
இறை படைப்புகள் பற்றி சிந்திப்பதை அல்குர்'ஆன் பல்வேறு இடங்களில்
போதித்துள்ளது. இத்தகைய சிந்தனை தனிமையில் வருமா அல்லது, மனைவியுடன் கூட இருக்கும் போது வருமா அல்லது பலருடன் கூட்டாக இருக்கும் போது வருமா
என்பது அவரவர் சிந்தனா சக்திக்குட்பட்ட விடயமாகும். அது அல்குர்'ஆன் போதிக்கும் விடயம் எனுப் அடிப்படையில் அவ்வாறு சிந்திப்பது ஒரு வணக்கமாக அமையுமென்றால்
அது மிகையாகாது.
அவ்வாறே இப்ராஹீம் அலை அவர்கள் தனது இறைவனைத் தேடிய பயணத்தை கூறும் அல்குர்'ஆன் வசனங்கள், இப்ராஹீம் அலை அவர்கள் தனிமையில் சிந்தித்ததை உணர்த்துவதாகவே
அமைந்துள்ளதைக் காணலாம் (6:75-79). இது போன்ற இன்னோரன்ன சிந்தனைகள் தனிமையில் இருக்கும்போதே
வரும் ஆதலால் அவ்வாறு தனித்திருப்பது பள்ளிவாயலினுள் என்பதாக இருந்தால் அது இன்னும்
சிறப்பாக அமையுமல்லவா?
அது மாத்திரமன்றி ஒரு மனிதன் தனித்தருப்பது தனது கடந்த கால வாழ்வை மீள்பரிசீலனை
செய்துகொள்ள துணைசெய்யக் கூடியதாகும். அதற்கமைய தான் கடந்து வந்த பாதையையும், அதில் தான் தவறிய இடங்களையும் கண்டறிந்து தனது எதிர்கால பயணத்தை சரிசெய்து கொள்வதற்கு
சிறந்த ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருவதாக இந்த “இஃதிகாப்” வணக்கம் அமைந்துள்ளது.
மேலும் தனிமையில் சிந்திப்பதானது, எப்படி நவீன கையடக்க உபகரணங்கள் ஏனைய உபகரணங்களுடன்
தொடர்பை ஏற்படுத்தி அவைகளிலுள்ள தகவல்களை பெற்றுத் தருகின்றனவோ, அதுபோல் பிற மனிதர்களுடனும், இப் பிரபஞ்சத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்தி தகவல்களையும் அறிவியல் ஞானங்களையும்
பெற்று கொள்ளும் வழிமுறை என்பதை நவீன சாதன அறிவியல் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள
ஆரம்பித்துள்ளதுடன், அதை "ஆராம் புலன்" (sixhth sense) என வகைப் படுத்தியிருப்பதும்
குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், மனிதனின் கண்ணை ஒத்த ஒரு அமைப்பு மனிதனது மூலையில்
இருப்பததாகவும் அதன் உருவ அமைப்பின் இரகசியம் இன்னும் சரியாக அரியப் படவில்லை எனவும்
உடற்கூற்று அறிஞர்கள் சொல்வதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.
இன்னும், உள்ளத்தைப் பக்குவப் படுத்துவதற்கான மிகச்சிறந்த ஒரு வழிமுறை தனிமையில்
இருந்து உளப் பயிற்சிகள் செய்வதாகும் என்பதும் ஈண்டு கவனிக்கத்தக்க ஒரு முக்கிய விடயமாகும்..
இந்த உளப் பயிற்சி முறையையே "யோகா"
என்பது குறிப்பதாக இருப்பதுடன், பெளத்தம் மற்றும் இந்து மதங்களின் போதனைகளில் இது
ஒரு முக்கிய விடயம் என்பதும் நாம் தெரிந்து கொள்ளத்தக்க அம்சமாகும். அதேவேளை, அந்த "யோகா" எனும் அம்சத்தின், உடற்பயிற்சியுடன்
சம்பந்தப்பட்ட அம்சங்களே இன்று பிரபல்யமடைந்துள்ளமை தெளிவுகருதி இங்கு சுட்டிக்காட்டப்
படுகிறது.
அதனடிப்படையில், மனிதனின் உள்ளத்தின் ஆழத்துக்கு சென்று அதாவது "நனவிரி"
மனம் என உளவியலில் அழைக்கப்படும் பகுதியில் ஏற்பட்ட சில கோளாறுகளை இனங்கண்டு, அதை சரி
செய்வதனூடாக எவ்வாறு பல்வேறு உளவியல் நோய்கள் குணப்படுத்தப் படுகின்றனவோ, அது போல்
சுயமாக ஒருவர் தனது உள்ளத்தின் பலவீனங்களை இனங்கண்டு அதனை சீர்படுத்துவதனூடக தனது நடத்தைகளை
சீர்படுத்தும் ஒரு முயற்சியே இந்த "யோகா" மற்றும் அதை ஒத்த தியான முறைகளாகும்.
“ஒரு மனிதனின் நடத்தைகள் தேர்வின் அடிப்படையிலேயே அமைகின்றன. அவனுக்கு நல்லதை தவிர
வேறு தேர்வும் எதுவும் இல்லை எனும் நிலையை உருவாக்கும் பயிற்சிமுறையே "யோகா"”
மற்றும் அது போன்ற பயிற்சி முறைகளாகும்” என அதை பின்பற்றுகின்றவர்கள் சொல்லும் விளக்கம்
சிலாகித்து கூறத்தக்கதாகும். இதே விடயத்தை அல்குர்'ஆன் வேறு விதமாக
49:7ம் வசனத்தில் சொல்லிக் காட்டுகிறது என்பது சந்தர்ப்பம்
கருதி இங்கு சுருக்கமாக சுட்டிக்காட்டப் படுகிறது. அதேவேளை "யோகா" அமைப்பின்
நடைமுறை பயிற்சி வடிவங்கள் துறவறத்தை போதிப்பதாக அமைந்திருப்பதுடன் "இஃதிகாப்
வணக்க முறை சாதாரண போக வாழ்க்கைமுறையுடன் கூடியதான ஒரு வழிமுறையாகும் என்பதே அதன் சிறப்பம்சமாகும்.
இவ்வாறாக உள்ளத்தைப் பக்குவப் படுத்தும் செயற்பாடு
மிக நீண்ட மற்றும் ஆழமான விளக்கங்கள் கொண்டதாகும்.
உள்ளத்தைப் பக்குவப் படுத்துவதை பற்றிக் கூறுகின்ற அல்குர்'ஆன் ஏழு முறை சத்தியம் செய்து "யார் தனது உள்ளத்தை வளர்த்துக் கொள்கின்றனரோ
அவர் வெற்றி பெற்று விட்டார் என" அடித்துச் சொல்கிறது (91:1-7). உள்ளத்தை வளர்த்தல்
என்பதை குறிக்க அல்குர்'ஆன் இந்த வசனத்தில் பயன்படுத்தியுள்ள "ஸக்கா"
எனும் சொல், அடிப்படையில் அதிகரிக்கச் செய்தல் மற்றும் வளர்த்தல் ஆகிய அர்த்தங்களைக்
கொண்டதாகும். பயிர்ச்சரிக்கையை சிறப்பாக வளர்க்கப்படுவதை "ஸக்கா" என்று அரபியில்
சொல்லப்படும். அதனடிப்படையில் உள்ளத்தை பேணி பக்குவப்படுத்தி வளர்தலையே இந்த குர்'ஆன் வசனம் குறிப்பிடுகிறது எனலாம். அதற்கிணங்க, இஸ்லாத்தின் போதனைகளின் ஒரு பகுதி
உள்ளத்தை மேம்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. இவ்வாறாக ஒரு
மனிதன் தனிமையில் இருந்து தனது உள்ளத்தை மேம்படுத்தி தனது நடத்தைகளை சீர்செய்து கொள்ள
துணைபுரியும் மிகச் சிறந்த ஒரு வழிமுறையே இந்த இஃதிகாப் எனும் வணக்கமாகும். மகத்தான
அல்குர்'ஆன் வேத நூலும், அதன் வாழ்க்கை வடிவமான இஸ்லாம்
மார்க்கமும் உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்ட
நாளை நினைவு கூறுவதற்காக முஹம்மத் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட வழிபாட்டு முறை இந்த
“இஃதிகாப்” என்பதாகும் எனும் அம்சமொன்றே, அதன் சிறப்பையும், அதிலுள்ள தாத்பரியங்களையும் நிரூபிப்பதற்கு போதுமான சான்றாகும்.
ஆனால், இத்துணை சிறப்புகள் நிறைந்த இந்த "இஃதிகாப்" எனும் வணக்கத்தை இன்றய இஸ்லாமிய சமூகம் எத்துணை பால்படுத்தியுள்ளது என்பதை சிந்தித்துணரர்ந்து, அதன் சரியான வழிமுறைகளையும், தாத்பரியங்களையும் சரிவர விளங்கி, அதிலிருந்து யாவரும் பயன்பெறுவது காலத்தின் முக்கிய தேவையாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது.
No comments:
Post a Comment
We value your feed back